தற்பொழுது பேசுபொருளாகியிருக்கும் பெண் காதி நியமனம் உட்பட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றி 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “WE ARE A PART, NOT APART” என்ற தனது நூலில், மூன்றாம் அத்தியாயத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள ஆக்கத்தின் தமிழ் வடிவத்தை காலப் பொருத்தம் கருதி இங்கு பிரசுரிக்கிறோம்.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு (Muslim Marriage and Divorce Act) தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் இடம்பெறும் தாமதங்கள் குறித்த சர்ச்சை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருந்து வருவதுடன், ஒரு சவாலையும் முன்வைக்கின்றது. புத்திஜீவிகள், உலமாக்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரும், அரசியல்வாதிகள் என்ற முறையில் நாங்களும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இது தொடர்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அதற்கென ஒரு குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஒன்பது வருட கால தாமதத்தின் பின்னர் இக் குழு 2018 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாக பெண் செயற்பாட்டாளர்கள் விமர்சனபூர்வமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை எடுத்து விளக்கும் “Women Claiming Rights and Spaces” என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2011 தொடக்கம் 2014 வரையில் நான் நீதி அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில், அந்தக் குழுவின் தலைவராக இருந்த உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸூப் அவர்களை மும்முறை அணுகி, பிரஸ்தாப கமிட்டி தனது அறிக்கையை விரைவாக ஒப்படைத்தால் அந்தத் திருத்தங்களை என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமெனத் தெரிவித்தேன். ஆயினும், அது கைகூடவில்லை.
இந்தத் திருத்தங்கள் உள்ளடக்கும் பரப்பு குறித்து முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்களுக்கும், உலமா சபையின் உறுப்பினர்களுக்கும் இடையில் பாரியளவிலான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன.பிரஸ்தாப அறிக்கையும் இந்தக் கருத்து முரண்பாடுகளைப் பிரதிபலித்தது. அந்த இரு தரப்புகளுக்குமிடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு என்னிடமும், சக அமைச்சராக இருந்த எம்.எச்.ஏ ஹலீமிடமும் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள வேண்டுகோளொன்றை விடுத்திருந்தார். அது தொடர்பான ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பல தடவைகள் முயற்சித்தோம்.
உலமாக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் போன்ற சிரேஷ்ட சட்ட வல்லுனர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தது என்ற விடயம் தெரிய வந்தது. மறுபுறத்தில், நீதிபதி சலீம் மர்ஸூப் முஸ்லிம் பெண்களின் குரல்களை ஓங்கி ஒலித்ததுடன், அந்த இரு தரப்புக்களுக்குமிடையில் பாரியளவிலான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இரு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் பொருட்டு ஜித்தாவில் கவுன்ஸல் ஜெனரலாகப் பணியாற்றிய முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.டபிள்யூ.ஏ ஸலாம் அவர்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்குமென நான் நினைத்தேன். அவரை உடனடியாக இங்கு வரவழைக்குமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதே வேளையில், 2018ஆம் ஆண்டில் நான் சவூதி அரேபியாவிற்கு உம்ரா யாத்திரை மேற்கொண்டிருந்த பொழுது அவருடன் இது குறித்து பேசியதுடன், இந்த விடயத்தில் தலையிட்டு இச் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்தச் சிக்கல் இவ்வாறிருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதுடன், அதன் விளைவாக நாட்டில் அவசரகால நிலைமையும் பிரகடனம் செய்யப்பட்டது. சமூகத்தில் நிலவிய பதற்றங்களுக்கு மத்தியில், முஸ்லிம் பெண்ணியவாத அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் உலமா சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்று வந்த சர்ச்சையில் முஸ்லிம் எதிர்ப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்களும், அக்குழுக்களின் ஏற்பாட்டாளர்களும் தலையிட்டார்கள். அதன் விளைவாக, முஸ்லிம் தனியார் சட்டங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டுமென உரத்துக் குரலெழுப்பப்பட்டதுடன், அந்தக் குரல்கள் மென்மேலும் வலுவடைந்து கொண்டே வந்தன.
அந்த வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி அத்துரலியே ரத்தின தேரர் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை ஒழிப்பதற்கென பாராளுமன்றத்தில் ஒரு தனி அங்கத்தவர் பிரேரணையையும் முன்வைத்தார். அந்தப் பின்புலத்தில், அப்போதைய அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களின் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களினதும் பங்கேற்புடன் அமைச்சிலும், அதே போல முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவர்களின் இல்லத்திலும் பல சந்திப்புக்களை ஏற்பாடு செய்தது. எமது விடாப்பிடியான முயற்சிகளின் விளைவாக பெரும்பாலான கருத்து முரண்பாடுகள் தொடர்பாக நாங்கள் ஒரு கருத்தொற்றுமையை எட்டினோம். எவ்வாறிருப்பினும், துரதிர்ஷ்டவசமாக பெண்களின் திருமண வயது மற்றும் பெண் காதி நீதிபதிகளின் நியமனம் ஆகிய இரு விடயங்கள் தொடர்பில் ஓர் உடன்பாட்டிற்கு வர முடியாதிருந்தது.
இந்த இரு பிரச்சினைகள் தொடர்பில் எனது அறிவுக்கு எட்டிய வரையிலும், இஜ்திஹாத் பிரகாரம், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றி, இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் உறுப்பினர்கள் கால மாற்றங்களுக்கேற்ப அனுசரித்துச் செல்ல வேண்டுமென்றும், பயனுள்ள சீர்திருத்தங்களை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நான் அவர்களிடம் வினயமாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
சட்டத்தின் வளர்ச்சியில் இஜ்திஹாத்தின் பங்கு குறித்து நீதியரசர் வீரமந்திரி விளக்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பில் எமது கருத்துக்களை இக்குழுவினருடன் கூறியதுடன் மட்டும் நான் நின்றுவிடவில்லை. மேலும், பொது அரங்குகளிலும் இது குறித்து நான் பேசினேன். ஏனெனில், அவ்வாறு பேசுவதில் எந்தத் தவறும் இல்லையென நான் கருதினேன். உரிய கவனத்துடனும், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், நான் பகிரங்கமாக பேசுகின்றேன் என்ற விடயத்தை கருத்தில் கொண்ட விதத்திலும் தொடக்கத்தில் நான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடன் தொடர்பு கொண்டேன்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை அடுத்து சிங்கள பௌத்த தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரசாரங்கள் என்பவற்றினால் எழுந்த அலையின் பின்னணியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டிய ஒரு கட்டாய நிலை இறுதியில் தோன்றியது. அத்தகைய ஒரு மீளாய்வு தவிர்க்க முடியாதது எனப் பெரும்பாலானோர் அபிப்பிராயப்பட்டார்கள்.
மாத்தளை ஆமினா பெண்கள் கல்லூரி மற்றும் கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி என்பவற்றின் பரிசளிப்பு விழாக்களின் பிரதம அதிதியாக தலைமை தாங்கி உரை நிகழ்த்திய பொழுது இப்பிரச்சினைகளை நான் பகிரங்கமாக குறிப்பிட்டேன். இந்தப் பின்னணியில், பெண்களை காதி நீதிபதிகளாக நியமனம் செய்தல் தொடர்பில் சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பெண்கள் காதி நீதிமன்ற நீதிபதிகளாக
நியமனம் செய்யப்படுவார்களா?
ஆண்கள் மட்டுமே காதி நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட முடியுமென குறித்துரைக்கும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தமது உரிமைகளை மீறும் ஒரு செயலாக இருந்து வருகின்றது எனப் பல வருட காலம் பெண்கள் விமர்சனம் செய்து வந்துள்ளார்கள். 1978 ஆம் ஆண்டிற்கு முன்னர் அமுலிலிருந்து வந்த சட்டங்கள் மற்றும் எழுதாச் சட்டங்கள் என்பவற்றை நீதிமன்ற மீளாய்வுக்கு உட்படுத்த முடியாது என்ற பணிப்பாணையை எமது அரசியல் யாப்பின் 16ஆவது உறுப்புரை கொண்டுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டங்கள் தொடர்பாக – அவற்றின் ஏற்பாடுகள் அரசியல் யாப்புக்கு முரணானவையாக இருந்து வந்தாலும் கூட – கேள்வி எழுப்ப முடியாத ஒரு நிலைமையை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றோம். எவ்வாறிருப்பினும், சட்டவாக்கங்கள் இயற்றப்பட்ட பின்னர் அவற்றை மீளாய்வு செய்வதற்கான தேவை இருந்து வருகின்றது என்ற விடயத்தை அரசியல் யாப்பு சீர்த்திருத்தச் செயன்முறை வலியுறுத்தியிருந்தது.
முஸ்லிம் தனியார் சட்டங்கள் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு முரணான விதத்தில் இருந்து வருவதற்கான காரணம், அரசியல் யாப்பின் உறுப்புரை 16 ஆகும். இந்த உறுப்புரை இல்லாதிருந்தால், குறிப்பாக முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் காதி நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பான ஏற்பாடு, அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை மீறுகின்றது என்ற அடிப்படையில் நிச்சயமாக ரத்து செய்யப்பட்டிருக்கும்.
திருக்குர்ஆனிலோ, சுன்னாவிலோ அல்லது வேறு இஸ்லாமிய அடிப்படை மூலதாரங்களிலோ காதி நீதிபதிகளாக பெண்களை நியமனம் செய்வதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எத்தகைய நேரடியான குறிப்புக்களும் இருந்து வரவில்லை. பெண் காதி நீதிபதிகளின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஒரு சில சான்றுகளை முன்வைத்தாலும் கூட, மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்யும் பொழுது, இந்தத் திருமறை வசனங்கள் வேறுபட்ட விடயங்களை குறிக்கின்றன என்பதை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
குறிப்பாக, திருமறையில் சூறா அந் – நிசாவில் உள்ள வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன:
‘பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில், அவர்களில் ஒருவரை விட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பொருள்களை பெண்களுக்காக செலவு செய்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கம் உள்ள பெண்கள், (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புபவனவற்றை (தங்களையும், கணவரின் மற்றப் பொருட்களையும்) பேணிக் காத்துக் கொள்வார்கள். எவளும் (கணவனுக்கு) மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால், அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள் அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப் பெரியவனுமாயிருக்கின்றான்’. (சூறா அந் – நிசா 4:34)
இந்த திருவசனம் ஆண்கள் பெண்களிலும் பார்க்க மேன்மையானவர்கள் என்றோ அல்லது பெண்கள் தலைமைத்துவப் பாத்திரங்களையோ அல்லது வேறு பொறுப்புக்களையோ வகிக்க முடியாதவர்கள் என்றோ எந்த வகையிலும் குறிப்பிடவில்லை. புனித அல்குர்ஆனின் இந்த திருவசனம் திருமண வாழ்க்கை தொடர்பாக குறிப்பிடுகின்றது. இந்த வசனத்திற்கு முன்னரும் பின்னரும் உள்ள வசனங்கள் குடும்ப வாழ்க்கை தொடர்பான விஷயங்களை கவனத்தில் கொள்கின்றன. எனவே, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பிடும் இந்தத் திருமறை வசனங்களை பொதுமைப்படுத்துவது தவறானதாகும்.
பெண்கள் காதி நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சூறா அல் பகராவிலிருந்து 282ஆம் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அந்த வசனம் பணம் கடன் கொடுப்பது தொடர்பான கோட்பாட்டுடன் சம்பந்தப்பட்டுள்ளது:
‘விசுவாசிகளே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள் ) கடன் கொடுத்துக் கொண்டால், அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர (கடன் கொடுத்தவனோ அல்லது கடன் வாங்கியவனோ) உங்களில் (எவன் எழுதிய போதிலும், அதை) எழுதுபவன் நீதமாகவே எழுதவும்: (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளனிடம் கோரிக் கொண்டால்) எழுத்தாளன் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம். அவன் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவனே, (கடன் பத்திரத்தின் ) வாசகத்தை கூறவும். (வாசகம் கூறுவதிலும், அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகங் கூற வேண்டிய) கடன் வாங்கியவன், அவிவேகியாகவோ அல்லது (வாசகங் கூற) இயலாத (வயோதிகனாகவோ, சிறுவனாகவோ) தானே வாசகஞ் சொல்லச் சக்தியற்ற (ஊமை போன்ற)வனாகவோ இருந்தால், அவனுடைய பாதுகாவலன் நீதமாக வாசகங் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க) க்கூடிய உங்கள் ஆண்களில் (யோக்கியமான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண் பாலாராகக் கிடைக்காவிட்டால், ஆண் ஒருவருடன், நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக்கூடிய பெண்கள் இருவரை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவர்களாக இருப்பதனால்) அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டாலும், மற்றப் பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டிக் கொடுக்கும் பொருட்டு (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும் போது, (சாட்சி கூற) மறுக்க வேண்டாம்). அன்றி (கடன் ) சிறியதாயினும், பெரியதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும்). அதன் தவணை (வரும்) வரையில், அதனை எழுதாமல் சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். (கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும்). இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும் , சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமலிருக்க மிக்க பக்க (பல) மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாகியிருந்தால், அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும், அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகஞ் செய்து கொண்ட போதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி, (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ, (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக்கூடாது. நீங்கள் (துன்புறுத்தி) அவ்வாறு செய்தால், நிச்சயமாக அது, உங்களுக்குப் (பெரும்) பாவமாகும். ஆதலால், அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக்கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிக அறிந்தவன். (சூறா – பக்ரா 2 : 282)
அக்கால கட்டத்தின் சமூக, பொருளாதார நிலைவரங்களின் பின்னணியில், ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது, பெண்கள் வியாபார விடயங்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் பெற்றிருக்கவில்லை. எனவே, வியாபாரத்தில் பெண்கள் தவறு இழைக்கக் கூடிய வாய்ப்பு இருந்து வந்தது. இந்தத் திருமறை வசனம் பெண்கள் குறைபாடு உடையவர்களாக இருந்து வருகின்றார்கள் எனக் கூறவில்லை; அல்லது அவர்களுடைய ஆற்றல் குறித்து அது கேள்வி எழுப்பவுமில்லை. பெண்கள் வழங்கும் சாட்சியங்கள் ஆண்களின் சாட்சியங்களிலும் பார்க்க பலவீனமானவை என நிரூபிப்பதற்கு முயற்சிப்பதும், அவர்களை வியாபார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு தகுதி அற்றவர்கள் என நிரூபிப்பதற்கு முயற்சிப்பதும் தவறானதாகும். திருமறையும் அதே போல ஹதீஸ்களும் வியாபார விடயங்கள், குத்தகைத் தொழில், வாடகைக்கு விடுதல், வக்ப் சொத்துக்களை வழங்குதல், சொத்துக்கள் மற்றும் முதலீடு என்பவற்றை உரித்தாக கொண்டிருத்தல் என்பவற்றுக்கென ஆண்களுக்கும், பெண்களுக்கும் முழு உரிமைகளை வழங்கியுள்ளன. தமது வாதத்தை நிரூபிப்பதற்கென இந்த வசனங்களை பயன்படுத்துபவர்கள் பின்வரும் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுகின்றார்கள்:
ஆபூ பக்ரா அவர்களால் அறிவிக்கப்பட்டது:
அல் ஜமல் (யுத்தம் இடம்பெற்ற) நாட்களின் போது, நான் அல்ஜமல் (ஒட்டக) தோழர்களுடன் இணைந்து, அவர்களுடன் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்ட பின்னர், அல்லாஹ்வின் திருத்தூதரிடமிருந்து இந்தச் சொல்லைக் கேட்கக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தந்திருந்தான். பாரசீக மக்கள் கொஸ்ராவின் மகளை தமது ஆட்சியாளராக மகுடம் சூட்டியதாக அல்லாஹ்வின் திருத்தூதருக்கு அறிவிக்கப்பட்ட பொழுது, அவர்கள் சொன்னார்கள்: ‘எந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் பெண்ணின் ஆட்சியின் கீழ் இருந்து வருகின்றார்களோ அவர்கள் ஒரு போதும் வெற்றியீட்டமாட்டார்கள் .
கலீபா ஒருவராக பதவி வகித்தல் அல்லது கலீபாவால் ஒரு நீதிபதியாக நியமனஞ் செய்யப்படுதல் போன்றவற்றுக்கான வாய்ப்பை பெண்களுக்கு மறுக்கும் பொருட்டு சட்ட வல்லுனர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த ஹதீஸை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அது பெண்களின் அந்தஸ்தை பாதித்திருப்பதுடன், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக நிலவி வரும் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதனையும் சிரமமாக்கியுள்ளது. பெண்களுக்கு அவர்களுடைய அரசியல் உரிமைகளும், பங்கேற்பு உரிமைகளும், உயர் பதவிகளை வகிப்பதற்கான உரிமைகளும் சாட்சிகளாக, நீதிபதிகளாக, தலைவர்களாக செயற்படுவதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், இந்த நியாயமற்ற வியாக்கியானத்தை முக்கியமான அறிஞர்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டிருப்பதுடன், பெண்கள் கலீபாவின் அதியுயர் பொறுப்பைத் தவிர, நீதிபதி போன்ற அரசாங்கப் பதவிகளை பொறுப்பேற்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூபக்ரா அவர்கள் கூறிய விடயத்தின் பின்புலம் சார்ந்த பொருள் விளக்கம் தொடர்பாக ஓரளவுக்கு விவாதங்கள் எழுந்திருப்பதுடன், இந்த ஹதீஸ் எதனைக் கூற வருகின்றது என்ற விடயம் தொடர்பாகவும் ஓரளவுக்கு விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. முதலில் ஜமல் போரின் போது அல்லது ஆயிஷா (ரலி) அவர்கள் பஸ்ராவுக்கு ஒரு படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற பொழுது இடம்பெற்ற பஸ்ராப் போரின் போது இந்த ஹதீஸ் கூறப்பட்டதாக கருதப்படுகின்றது. இதனைக் கூறிய அபூபக்ரா, ஆயிஷா (ரலி) அவர்களினால் வழிநடத்திச் செல்லப்பட்ட இராணுவத்தின் ஓர் உறுப்பினராக இருந்து வந்தார். இந்தப் படையெடுப்பு முறியடிக்கப்பட்டமை தொடர்பாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் அதில் உயிரிழந்தமை தொடர்பாகவும் ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்த ஹதீஸ் உண்மையானதாக இருந்து வந்தால், அபூபக்ரா ஆயிஷாவின் ஆற்றல் குறித்தும், இந்தப் படையெடுப்புக்கு அவர் வழங்கிய தலைமைத்துவம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் என்ற வாதத்திற்கு அது ஆதரவளிக்கின்றது.
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களான தல்ஹா பின் உபைதுல்லா மற்றும் இப்னு அவ்ஹம் ஆகியோர் இந்த ஹதீஸை எடுத்துக் கூறும் அபூபக்ரா (ரலி) அவர்களுடன் இணைந்து போரிட்டார்கள். அவர்கள் பெண் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாதிருந்தால் ஆயிஷா (ரலி) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் போருக்குச் சென்றிருக்கமாட்டார்கள். எவ்வாறிருப்பினும், பெண்களின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், போரின் பின்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் நடந்து கொண்ட விதத்தை அதற்கான ஒரு நியாயப்படுத்தலாக முன்வைக்க விரும்புகின்றார்கள். ஒட்டக யுத்தத்தின் பின்னர், ஆயிஷா (ரலி) அவர்கள் தான் போருக்குச் சென்றமை குறித்து வருந்தியதாகவும், தான் வீட்டில் இருந்திருக்க வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகின்றது. மேலும், பெண் தலைமைத்துவத்தின் கீழ் போருக்குச் செல்வது தவறானது என்ற விடயத்தை ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது. படை வீரர்களின் உயிரிழப்புக்கள் மற்றும் உறவினர்கள் பலரின் இழப்புக்கள் ஏற்படுத்திய துயரம் காரணமாக ஏற்பட்டிருந்த மன உளைச்சலின் விளைவாக கூறப்பட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் வார்த்தைகளை, ஓர் எதிர்வாதமாக முன்வைக்கப் பயன்படுத்துவது தவறானது எனக் கருதப்படுகின்றது.
திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அபிப்பிராயங்கள் நிச்சயமாக தவறானவையாக இருக்க முடியாது. எவ்வாறிருப்பினும், குறிப்பிட்ட ஹதீஸ் அது முன்வைக்கும் வாதத்தில் பலவீனமானதாக இருந்து வருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென ஒருவர் வாதிட முடியாது. இது தொடர்பாக ஷீபாவின் ராணி குறித்த திருமறையின் சூரா – அன் நம்ல் (23-44) வசனங்கள் முன்னைய ஹதீஸ்களுடன் முரண்படுவதாக அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த வசனம் அழிவுகரமான ஒரு போர் தடுக்கப்பட்டது என்றும், ராணியின் ஞானம் மற்றும் தூர நோக்கு என்பவற்றின் காரணமாக மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. எனவே, அத்தகைய ராணிகள் வரலாற்றில் இருந்து வந்துள்ளார்கள் என்ற விடயமும், பெண் தலைமைத்துவம் தொடர்பாக நவீன முன்னுதாரணங்கள் இருந்து வருகின்றன என்ற விடயமும் அபூபக்ரா அவர்களால் எடுத்துக் கூறப்பட்ட ஹதீஸை அது கூறப்பட்ட காலத்தின் பின்னணியில் வாசிக்க வேண்டிய தேவையை எடுத்துக் காட்டுவதாக வாதிடுபவர்கள் இருந்து வருகின்றார்கள். அதனை எல்லாக் காலங்களுக்கும் பொதுமைப்படுத்த முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆண்களை மட்டும் காதி நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யும் வழக்கம், பெண்களின் சமூக அந்தஸ்து, கல்வி மற்றும் திறன்கள் என்பவற்றில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்களின் பின்னணியில் காலப் போக்கில் மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், பல நாடுகள் – குறிப்பாக முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நாடுகள் – பெண்களை காதி நீதிபதிகளாக நியமனம் செய்யும் விடயத்தை அங்கீகரித்துள்ளன. பெண் காதி நீதிபதிகளின் நியமனங்களை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியல் எகிப்து, ஜோர்தான், மலேசியா, பலஸ்தீனம், சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யெமன், டியுனீசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தோனிஷியா மற்றும் லெபனான் என்பவற்றையும் உள்ளடக்கும் விதத்தில் விரிவடைந்துள்ளது.
அந்தப் பின்புலத்தில், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் பெண்களை காதி நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு எதிரான கூக்குரல்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்? எனது அபிப்பிராயத்தில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய ஆவணங்கள் என்பவற்றின் அடிப்படையில் நாங்கள் ஒரு முற்போக்கான தீர்வுக்கு வர வேண்டிய தேவையிருந்து வருகின்றது.
இஸ்லாமிய பெண்ணியவாதிகள் பலரும் ,மொரோக்கோவின் அறிஞர் அப்துஸ் ஸலாம் யாசீனின்(Abdessalam Yassine) மகள் நாதியா யாசீன்(Nadia Yassine) போன்ற புலமை வாய்ந்தவர்களும் இடையூறுகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி, இஜ்திஹாத்திற்கு ஊடாக நேரடியாக மூலப் பிரதிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அசல் சமயவியல் சான்றுகளைப் பெற்று, வலியுறுத்துவது எப்படி என்ற விடயத்திற்கு மிகச் சிறந்த உதாரணங்களை முன்வைத்துள்ளார்கள்.
அவ்வாறே இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் இஸ்லாமிய பெண்ணியவாதிகளும் இஸ்லாமிய வெளிச்சத்தில் அசல் நோக்கத்தை மீளக் கண்டறிந்து கொள்வதற்கு இப்பொழுது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆண்களைப் போல பெண்களும் திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் ‘பால்நிலை சமத்துவத்தை’ எவ்வாறு பார்க்கின்றார்கள் என்ற விடயத்தை ஆழமாக தேடிக் கண்டறிவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்குமான விசேட கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்.
ஆண்களின் ‘ஆண்மைவாத’ விளக்கவுரைகளுக்கு பின்னால் மறைந்திருப்பது என்ன என்பதை அவர்கள் தேடிக் கண்டுபிடித்தல் வேண்டும். பெண்நிலைவாதம் என்பதே இன்றைய மேலைத்தேய உலகில் பெருமளவுக்கு வாதப்பிரதிவாதங்களுடன் கூடிய ஒரு சொற் பதமாக இருந்து வருகின்றது. பெண்நிலைவாதத்தை விமர்சன ரீதியாக நோக்கும் முஸ்லிம் பெண்களும் தமது சமூகத்தில் தலைவர்களாக இருந்து வருகின்றார்கள். அவர்கள் பெண்களின் நலனோம்பல் திறனை விருத்தி செய்யும் விடயத்திற்கென ஆழமாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தம்மை ஆணாதிக்கத்திற்கு அடிபணிய வைக்கும் முயற்சிகளையும் முனைப்பான விதத்தில் எதிர்த்து வருகின்றார்கள்.
இந்தச் செயற்பாடு எமது சமூகத்திலும் ஊக்குவிக்கப்பட வேண்டியதாக இருந்து வருகின்றது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். அந்த நிலையில், அதிகம் அதிகமான பெண்கள் சமூகத்தில் புதிய முற்போக்கு வகிபாகங்ளை மேற்கொள்ளும் பொழுது அது வெற்றியளிக்கும். நாங்கள் இப்பொழுது காளை மாட்டின் கொம்புகளை சரியாக கரங்களால் பற்றிப் பிடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
பெண்களின் மனச்சாட்சியின் விழிப்புணர்வு ஒரு கூட்டுப் பொறுப்பாக உருவாகும் சந்தர்ப்பத்தில் அது பெண்களுக்கு சிறந்ததோர் ஆசீர்வாதமாக இருந்து வரும். மேலும், அத்தகையதொரு நிலை பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எவையுமிருப்பின், அவற்றை எதிர்த்து நிற்பதற்கான அனைத்துமடங்கிய சட்டகம் ஒன்றையும் வழங்கும். பெண்கள் தமது கோரிக்கைகளை தாங்களே முன்னெடுத்து, அதனை ஆண்கள் செய்ய வேண்டுமென அவர்கள் மீது தங்கியிருப்பதற்குப் பதிலாக, தமது வலிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அடக்குமுறை சக்திக்கும் எதிராக இஜ்திஹாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான துணிச்சலை முஸ்லிம் பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இஜ்திஹாத் காலம் தோறும் மாற்றமடைந்து வரும் வாழ்க்கையின் தேவைகளை சமாளித்துச் செல்லும் ஆற்றல் மிக்கது. பெண்கள் தமது பிரச்சினைகளை தாமே முன்வைக்கும் ஒரு சக்தியாக எழுச்சியடையும் சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சீர்திருத்தங்களை எடுத்து வரும் விதத்தில் செயற்பட முடியும். முஸ்லிம் சமூகத்திற்குள் பெண்களுக்கு நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் இடம் இருந்து வருவதுடன், அவர்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவர்களுக்கு ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காகவும் தொடர்ந்தும் முயற்சிப்போம். பெண்களுக்காக என்று அல்லாமல், பொதுவாக அனைவருக்காகவும் அந்த முயற்சியில் ஈடுபடுவோம்.- Vidivelli