சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டுவரும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு மினா மற்றும் அரபா ஆகிய தலங்களில் தங்குவதற்கு போதியளவு கூடாரங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்விரு தலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் தங்குமிடமின்றி பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையிலிருந்து C பிரிவின் கீழ் யாத்திரை மேற்கொண்டவர்களுக்காக மினாவில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த கூடாரத்திலேயே கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் குறித்த தங்குமிடத்தை ஏற்பாடு செய்த சவூதி அரேபிய நிறுவனத்திற்கும் ஹஜ் முகவர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை யாத்திரிகர்கள் தங்குவதற்கென அரபாவில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களிலும் செவ்வாய்க்கிழமை இதே நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நூற்றுக் கணக்கான யாத்திரிகர்கள் பாதிக்கப்பட்டடதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தங்குமிடமின்றித் தவித்த இலங்கை யாத்திரிகர்களுக்கு சக இலங்கை யாத்திரிகர்கள் தமக்கு கிடைக்கப் பெற்ற கூடாரங்களைப் பகிர்ந்து உதவியதாகவும் இதன் காரணமாக இட நெருக்கடி உள்ளிட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அரபாவில் குறித்த கூடாரத்தில் தங்கியிருந்த யாத்திரிகர் ஒருவர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை ஹஜ் முகவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர். புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் திணைக்கள அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்விவகாரம் தொடர்பில் சவூதி அரேபிய ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் “விடிவெள்ளி” க்குத் தெரிவித்தார்.
இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் மற்றும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்சார் உட்பட ஹஜ் குழு உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகளும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு தற்போது சவூதி அரேபியாவில் தங்கியுள்ளனர்.
ஹஜ் குழுவின் போதிய திட்டமிடலின்மை மற்றும் கண்காணிப்பின்மையே இவ்வாறான நெருக்கடிகளுக்கு காரணம் என யாத்திரிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்திரிகர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தும், இலங்கையின் யாத்திரிகர்களுக்கு முகவர்கள் ஊடாக தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கையின் ஹஜ் குழு அசிரத்தையுடன் செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட யாத்திரிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.- Vidivelli