அமெரிக்காவினால் முக்கிய உதவிகள் நிறுத்தப் பட்டதையடுத்து யதார்த்தபூர்வமான தேவைகள் அதிகமாக இருப்பதால் 2019 ஆண்டில் பலஸ்தீன அதிகாரசபைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அதிகார சபையும் தெரிவித்துள்ளன. 2018 ஆம் ஆண்டின் 539 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியிலிருந்து 200 இற்கும் அதிகமான திட்டங்களினூடாக 1.4 மில்லியன் பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கு முடியாததன் காரணமாகவே இக் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவரகம் உள்ளடங்கலாக பல்வேறு பொறிமுறைகள் ஊடாக வருடாந்தம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்கி வந்த அமெரிக்கா இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்திற்கான அதன் உதவிகள் அனைத்தையும் நிறுத்திக்கொண்டது.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவரகம் உலகெங்கிலுமுள்ள சுமார் ஐந்து மில்லியன் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வருகின்றது.
2019 இற்கான ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் உணவு, சுகாதாரப் பராமரிப்பு, உறைவிடம், தண்ணீர் மற்றும் சுத்திகரிப்பு போன்றன அவசியம் தேவைப்படுகின்ற பலஸ்தீனர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவுள்ளது என காஸா பள்ளத்தாக்கு, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான இணைப்பாளர் மெக்கோல்ட்ரிக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நகர்வினையடுத்து நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் நிதியுதவிகளைக் கோரும் போது ஐக்கிய நாடுகள் சபை யதார்த்தபூர்வமாக தனது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியிருந்தது எனவும் மெக்கோல்ட்ரிக் தெரிவித்தார்.
அவசியத் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மனிதாபிமான உதவித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக கடந்த திங்கட்கிழமை மேற்குக் கரையின் ரமல்லாவில் கோரிக்கையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின்போது அவர் குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டு பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவரகத்திற்கு அமெரிக்கா 365 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும் முதற்கட்ட நிதியான 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை மாத்திரமே வழங்கியிருந்தது. அதன் பின்னர் பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவரகத்திற்கான அனைத்து நன்கொடை நிதியுதவிகளையும் நிறுத்துவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
இவ்வாறான செயற்பாடுகள் இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீன தலைமைத்துவத்தை இணங்க வைப்பதற்கான அழுத்தமாகப் பரவலாகப் பார்க்கப்படுகின்றது.
அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என கடந்த திங்கட்கிழமை பலஸ்தீன சமூக அபிவிருத்தி அமைச்சர் இப்ராஹீம் அல்-ஷஹீர் தெரிவித்தார்.
உதவிக்காகவும் பணத்திற்காகவும் எமது சட்டபூர்வ உரிமைகளை கைவிடுவதில்லை என்பதே பலஸ்தீன மக்களினதும், தலைமைத்துவத்தினதும், அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டு மில்லியன் பலஸ்தீனர்கள் வாழுகின்ற, அவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உதவிகளையே நம்பி இருக்கின்றனர். இஸ்ரேலிய தடைகளுக்குள் சிரியா ஆள்புலப் பிரதேசத்திற்குள் மிகவும் நெருக்கமாக வாழ்கின்ற காஸா பள்ளத்தாக்கிற்கே எமது பெரும்பாலான உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பொருளாதாரச் சரிவு, அதிகரித்து வரும் இஸ்ரேலுடனான பதற்றநிலை ஆகியவற்றினால் காஸா வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி நிக்கலோய் மிலாடினேவ் கடந்த ஒக்டோபர் மாதம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.