அஹ்ஸன் அப்தர்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான அந்த குண்டுத் தாக்குதல்களால் பலர் அன்று தமது வீடுகளுக்குள் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் காத்தான்குடியைச் சேர்ந்த அஸ்பான் அஹமத். எனினும், அத்தினத்தின் பின் நீண்ட காலத்துக்கு தான் வீட்டில் தங்கியிருக்கப் போவதில்லை என்பதை அவர் அன்று நினைத்திருக்க மாட்டார்: அந்த நாளின் இறுதிப் பகுதியில் அவர் கடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நான்கு வருடங்கள் கடந்த பின்னரும் அவரின் மனைவி அதன் பின்விளைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
“உடனே கொண்டு வந்து விட்றதா சொல்லித்தான் மச்சான காத்தான்குடி பொலிஸால ஊட்ட வந்து கூட்டிப் போனாங்க, ஆனால் இரவாகியும் வீட்டுக்கு வராததால பயத்தோட மகன கூட்டிக்கொண்டு பொலிஸ்ஸடிய போனேன், ஆனால் மச்சான பாக்க விடல்ல” என்கிறார் அஸ்பானின் மனைவி காமிலா.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தனது கணவன் எங்கே என்று காமிலா கேட்டு நின்றபோது அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. என்ற போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது அதன் தீவிரம் குறித்து காமிலா அறிந்திருக்கவில்லை. தனது கணவன் வீட்டிலிருந்து சென்றதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்றெல்லாம் அவருக்கு தெரியவில்லை. பயப்படும் அளவுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு தனது கணவனுக்காக காத்திருந்தார். கைது செய்யப்பட்ட ஏனைய பலரின் மனைவிகள் மற்றும் பிள்ளைகள் போன்று நீதிக்கான எந்தவித உண்மையான அணுகலும் இன்றி தனது கணவனை விடுவிக்க காமிலா பல வருட காலமாக போராடிக் கொண்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 64 குடும்பங்களைச் சேர்ந்த 99ஆண்கள் மற்றும் 11பெண்கள் என 110பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்துடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தீவிரம் குறித்து தெளிவுபடுத்தினார். இந்தக் கூட்டத்திற்கு சென்ற காமிலா அப்போதுதான் தனது கணவன் எவ்வளவு பாரதூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டார். மேலும் குறித்த இராணுவ அதிகாரி தடுத்து வைக்கப்பட்டவர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்ப ஒத்துழைக்குமாறு காமிலா உட்பட தடுத்து வைக்கப்பட்ட ஏனைய உறவினர்களிடம் கேட்டுள்ளார். குறித்த புனர்வாழ்வு நிலையங்கள் அங்கு செல்பவர்களை கடுமையாக நடத்துவதில் பெயர் பெற்றனவாகக் காணப்படுகின்றன.
எந்தவித குற்றமும் நிரூபிக்கப்படாத நபர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி புனர்வாழ்வு வழங்க நினைப்பதை ஏற்க முடியாது என பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்ட மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரீன் ஸரூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது “கடந்த காலங்களில் சிறுவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட வடக்குத் தமிழர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களை காணாமலாக்கினார்கள். அந்த கைதிகளுக்கு என்ன நடந்தது என்றே எங்களால் ஊகிக்க முடியவில்லை. மூடப்பட்ட அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன். புனர்வாழ்வு என்பது பாதுகாப்பு அமைச்சின் ஒரு சூழ்ச்சி வலை. ஒருபோதும் இப்படியான சூழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அஸ்பான் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் காமிலா நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் உளவியல் பிரச்சினைகளையும் எதிர் கொண்டார். கைது செய்யப்படும் வரை அஸ்பான் ஒரு சுய கைத்தொழிலாளர் ஆவார். ஒரு நாளைக்கு 1000 ரூபாவையும் விட குறைவான வருமானமே அவருக்கு இருந்தது. அவர் கைது செய்யப்படும்போது தனது சட்டைப்பையில் இருந்த 750 ரூபாய் பணத்தை காமிலாவிடம் செலவுக்கு கொடுத்துச் சென்றார். அதைத் தவிர காமிலாவிடம் தனது வாழ்க்கையை நடத்த பணமோ அல்லது சேமிப்போ இருக்கவில்லை.
காமிலா அப்போது தனிமைப்படுத்தப்பட்டார். தாய் தந்தை சகோதரர்கள் என யாருமே இல்லாத காமிலா தனது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கணவன் கொடுத்துச் சென்ற 750 ரூபாய் பணத்தை மாத்திரமே கொண்டிருந்த காமிலாவுக்கு ஒவ்வொரு நாளும் போதிய உணவைப் பெறுவதே போராட்டமாக மாறியது. முன்னர் ஒரு போதும் வேலை செய்த அனுபவம் அற்ற காமிலா தற்போது வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். காமிலாவையும் அவரது குடும்பத்தையும் அவரின் சொந்த சமூகம் ஒதுக்கியதுடன் அவருக்கு வேலை வழங்கவும் அஞ்சியது. காமிலாவுக்கு உதவினாலோ அல்லது அவருடன் எந்தவொரு தொடர்பையும் பேணினாலோ தாமும் குற்றப் புலனாய்வுத்துறை அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்படலாம் என சமூக உறுப்பினர்கள் அஞ்சினர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைகக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வது கத்தி மேல் நடப்பது போல மிகவும் சவாலானதாக இருந்ததாக தனது பெயரை வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். “இங்குள்ள பெண்கள் சேவை நாடும் இடங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை. மோசமான பிரச்சினையில் சிக்கியிருக்கும்போது கூட அவர்கள் இருட்டறைக்குள் வாழ்வதைதான் வசதியான ஒன்றாக கருதினார்கள். ஸகாத் (நன்கொடை) பணத்தை கூட யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான் பங்கு வைத்தோம்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அதன் பின்னர் அஸ்பான் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அது வரை பொலிஸ் நிலையம், சிறைச்சாலை அல்லது நீதிமன்றத்திற்கு காமிலா தனது வாழ்நாளில் ஒரு தடவை கூட சென்றதில்லை. தனது கணவனை அங்கு சென்று பார்ப்பது காமிலாவுக்கு மேலதிக சவாலொன்றாக மாறியது. “முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் ஆண் ஒருவரின் துணையின்றி வெளியே செல்ல முடியாது” என்கிறார் காமிலா. “அப்படிச் செல்லும்போது சமூகத்தின் வசைச் சொற்களுக்கு ஆளாக வேண்டும்” என மேலும் அவர் தெரிவிக்கின்றார். மேலும் இப்படி அடிக்கடி சிறைச்சாலை வரை சென்று வர காமிலாவிடம் பணம் இருக்கவில்லை. சுமார் மூன்று மாதங்களாக கடன் வாங்கி இவற்றை செய்த காமிலா கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வேண்டி வீட்டு உபகரணங்களை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அன்றாட உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அத்துடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப என்று பணம் ஒரு அடிப்படைத் தேவையாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் கேக் என்பவற்றை தயாரித்து கடைகளுக்கு விற்கத் தொடங்கினார் காமிலா. முடிந்தளவு தையல் மெஷின் மூலம் ஆடைகளை தைத்து ஓரளவு வருமானத்தை பெற்றார்.
பொருளாதாரப் பிரச்சினையை விட சமூகத்தில் தன்னையும் தனது பிள்ளைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள் என்பதை காமிலாவினால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. “மகன்கள் போன டியுஷன் கிளாஸ்ல புள்ளய வர வேனாமுண்டு சொல்லிட்டாங்க. எங்கட மச்சான நல்லா தெரிஞ்சவங்க கூட அவங்கட பிள்ளைகள எங்கட பிள்ளைகளோட பொழங்க விடல்ல” என காமிலா கூறிய போது கண்ணீர்த்துளிகள் அவரின் கன்னங்களின் ஊடாக வழிந்தோடின.
“எங்களுக்கு பள்ளி வாசலால கூட எந்த உதவியும் கிடைக்கல்ல. மச்சான்ட மேல எந்தத் தப்பும் இல்ல; இது சுத்தி உள்ள எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தங்களயும் ஜெயில்ல போட்றுவாங்கண்டு யாரும் உதவல்ல” என்கிறார் காமிலா.
கடன்பட்டுத்தான் சிறைச்சாலைக்கு பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்திருக்கிறது. இப்படி சிறைச்சாலைக்கு நிறைய பொருட்கள் கொண்டு செல்வதை பார்க்கின்ற உற்றார் உறவினர்கள் அதற்கு நிறைய வசை பேசும் நிலைமை இருந்திருக்கிறது. “கைல ஒரு ஆயிரம் ரூவா தாள் வெச்சி இரிக்கிறத கண்டா நாங்க செழிப்பா இரிக்கம்முண்டு ஜாடை பேசுவாங்க. உதவ வார ஆட்களயும் உதவ விட மாட்டாங்க” என காமிலா தெரிவிக்கிறார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகத்தின் பக்கத்தில் இருந்து நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்கள்கள் இருப்பதாக சமூக ஆர்வலர் புஹாரி மொஹமட் தெரிவிக்கிறார். “தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்க கைது செய்யப்பட்ட குடும்பங்களிடம் இருந்து சமூகம் ஒதுங்கி இருக்கிறது. தொடர்ச்சியாக அவர்களிடம் இருந்து ஒதுங்குவதால் நாளடைவில் அவர்கள் தவறு செய்யவில்லை என்று தெரிந்தாலும் வெறுப்பு உண்டாகி விடுகின்றது.” என தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் அமைப்பு சமூகத்தில் இவ்வாறு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிறைச்சாலைக்கு அஸ்பான் மாற்றப்பட்ட போது காமிலாவுக்கு குறித்த தகவலை அதிகாரிகள் எந்தவொரு தொடர்பாடல் முறை ஊடாகவும் சொல்லவில்லை. மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அஸ்பானை பார்வையிடச் சென்ற போதுதான் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது.
காமிலா மட்டக்களப்பை தாண்டி எங்கேயும் சென்றதில்லை என்பதன் அடிப்படையில் அவரால் இந்த நிலைமையை சமாளிக்கவே முடியவில்லை. மட்டக்களப்பில் இருந்து தனது கணவன் இடம் மாற்றப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று வர 5000 ரூபா தேவைப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்த செலவுகள் இரு மடங்கானது. மனிதாபிமான உதவியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் மாதாந்தம் 3000 ரூபா காமிலாவுக்கு கிடைத்ததை தவிர வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
பிணையில் விடுதலையாக இருக்கின்றவர்களின் விவரங்களில் அஸ்பானின் பெயர் வந்துள்ளதாக கேள்விப்பட்டு அதுபற்றி உரிய அதிகாரிகளிடம் விசாரிக்கச் சென்றபோது அங்கே அதனை உறுதிப்படுத்தி சொல்வதற்குக் கூட 10000 ரூபா கேட்டிருக்கிறார்கள்.
இரண்டரை வருடங்களின் பின்னர் கடந்த நவம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட அஸ்பான், தான் குற்றமற்றவன் என்பதை உறுதியிட்டுக் கூறுகின்றார்.
சிங்களத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத தன்னிடம் சிங்கள மொழியில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சிங்களத்தில் எழுதப்பட்ட வாய்மொழி அறிக்கையிலும் இன்னும் சில வெற்றுக் காகிதங்களிலும் கையெழுத்திட தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அஸ்பான் கூறுகின்றார். இறுதியாக நிலையப் பொறுப்பதிகாரி சிங்களத்தில் பேசியதை தமிழில் ஒரு துணை பொலிஸ் அதிகாரி மொழிபெயர்ப்பு செய்ததாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
“ஆயுதங்கள் எங்கே உள்ளன எனச் சொல்லுமாறு அவர்கள் என்னிடம் கேட்டனர், என்னிடம் எந்த ஆயுதங்களும் இல்லை என நான் அவர்களிடம் கூறினேன்” என அஸ்பான் தெரிவித்தார்.
இரண்டரை வருடங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமூகத்துக்கு முகங்கொடுக்க வெட்கப்படுகின்றார் அஸ்பான். “மனைவி பிள்ளைகள பிரிஞ்சி இரிந்த நாட்கள் ஒரு நரகம். இதெல்லாம் எதிரிக்குக் கூட வரக்கூடாத நிலம. ஏண்ட மனைவிக்கு எதுவுமே தெரியாது. அவ இந்த ஊரத் தாண்டி எங்கயும் போனதில்ல. இப்ப இவளோ கஷ்டப்பட்டுட்டா” என்று நிரம்பி வழிந்த கண்ணீரை தனது சாரத்தின் நுனியினால் துடைத்துக்கொண்டு சொல்கிறார். “அவ நிறைய கஷ்டப்பட்டுட்டா, இனிமேல் இந்த மாதிரி கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது”என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட110 பேரில் 103 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். விடுதலை செய்யப்பட்டவர்களில் 93 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றார்கள். இவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர் புஹாரி மொஹம்மட் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நான்கு பொது காரணங்களின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என புஹாரி விளக்கம் தருகிறார். பயங்கரவாத நிர்வாகக் குழுவினர், குழுவுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், குழுவுடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் குழுவுடன் எந்தவித தெடர்பும் இல்லாதவர்கள் என்று அவர்களை வகுக்க முடியும் என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலருக்கு தாம் ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் எனக் கூடத் தெரியாது எனவும் அவர் கூறினார்.
இதே போன்ற சிரமங்களை காத்தான்குடியின் மற்றுமொரு பகுதியைச் சேர்ந்த பஸ்லியாவும் (27) அனுபவித்துள்ளார். இவருடைய பிரச்சினையில் வேடிக்கை என்னவென்றால் பஸ்லியாவின் கணவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இவர்களுக்கே தெரியாது. சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பஸ்லியாவின் கணவர் மன்சூர் (29) இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது “என்ன எதுக்கு கொண்டு போனாங்க எண்டே எனக்கு தெரியாது” எனக் கூறினார்.
மன்சூர் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர். நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் இவர் தொழிலுக்குச் செல்லாத நிலையில் வீட்டுக்கு வந்த குற்றவியல் விசாரணைப் பிரிவினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்கள்; இன்று வரை எந்த காரணத்திற்காக மன்சூர் கைது செய்யப்பட்டார் என்பது அவருக்கு தெரியாது என்று அவர் சொல்கிறார்.
குருணாகல் மாவட்ட நீதிமன்ற அறையில் வைத்து அதிகாரிகளிடம் என்ன காரணத்திற்காக இவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தீர்கள் என்று கேட்டபோது அதிகாரிகள் யாரும் நீதிபதியிடம் வாய் திறக்காமல் இருந்ததாக மன்சூர் தெரிவிக்கிறார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் தீவிரத்தை அதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லி நீதிபதி அதிகாரிகளை எச்சரித்ததாக மன்சூர் தெரிவிக்கிறார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரிடம் காரணம் தெரிவிக்காமல் தடுத்து வைக்க முடியுமா என்று நாம் சட்டதரணி சுவஸ்திகா அருலிங்கத்திடம் கேட்டபோது அதற்கான சாத்தியம் குறித்த சட்டத்தில் இருக்கின்றது என அவர் தெரிவித்தார். “பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற இரண்டிலுமே ஒருவரிடம் காரணம் சொல்லாமல் தடுத்து வைத்து உள ரீதியான சித்திரவதை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மனித உரிமைகளை அடியோடு துவம்சம் செய்யும் சட்டங்களாக இவை இருப்பதாலேயே நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஒரு மனிதரை 20 வருடம் வரை எந்தவித குற்ற விசாரணையும் இன்றி வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என சுவஸ்திகா தெரிவிக்கிறார். தடுத்து வைக்கப்பட்டவரின் சொத்துக்களை முடக்குதல், வங்கிக் கணக்குகளை கையாளுதல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் சந்தர்ப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அஸ்பான், காமிலா, மன்சூர் மற்றும் பஸ்லியா ஆகியோருக்கும் மட்டக்களப்பில் உள்ள இவர்களைப் போன்ற பல குடும்பங்களுக்கும் இது ஒரு முடிந்து போன கதையல்ல. தடுத்து வைக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் அவர்கள் 24 மணி நேரமும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றனர். சமூகக் களங்கம், பொருளாதாரப் பிரச்சினைகள், தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை கைவிடும் நிலை உருவாகலாம் என்ற அச்சம் அத்துடன் மனவழுத்தம் போன்ற பல பிரச்சினைகளை இக்குடும்பங்கள் எதிர்கொள்கின்றன. இப்பிரச்சினைகளை அகற்றும் நோக்கில் கரிசனை மிக்க நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் திட்டங்களை முன் வைக்கும் போதெல்லாம் அதனை தடுக்கும் அல்லது முடக்கும் முனைப்புடன் அரசாங்கம் செயற்படுகிறது.
குறிப்பு: பாதுகாப்பு காரணங்கள் குறித்து கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.