மாடுகளுக்கு தொற்று நோய் பரவல்: உழ்ஹிய்யா விடயத்தில் உடனடியாக உலமா சபை வழிகாட்ட வேண்டும்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திணைக்களத்திற்கும் ஹலீம் எம்.பி. கடிதம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட்டில் மாடுகளுக்கு தொற்று நோய் பரவல் அதிகரித்து நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் உழ்ஹிய்யா விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு (பத்வா) ஒன்றை உடனடியாக வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான அப்துல் ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, இதுவிடயமாக ஏற்படப்போகும் பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது விடயமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றிற்கு அவர் இருவேறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,
நாட்டில் பரவலாக மாடுகளுக்கு வைரஸினால் பரவும் அம்மை நோய் (Lumpy Skin Disease) இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய மிருக வைத்தியப் பிரிவுகள் மூலம் தெரிவிக்கப்படுவதை பொறுப்புள்ள சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அத்தோடு, இந்த நோய்தொற்றின் விளைவுகள் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
இந்நிலையில், புனித துல்ஹஜ் மாதத்தை அடையவிருக்கிறோம். அத்தோடு, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம் மக்கள் உழ்ஹிய்யாவுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். உழ்ஹிய்யாவுக்கான மிருகங்களில் இலங்கையில் பிரதானமாக மாட்டை வழங்குவதையே பெரும்பாலும் நாம் வழமையாகக் கொண்டுள்ளோம். நோய்தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் மாடுகளை உழ்ஹிய்யாவுக்காக பயன்படுத்துவதானது பாரியவிளைவுகைள ஏற்படுத்தலாம் என்கிற அச்சம் இருக்கிறது.
எனவே, இது தொடர்பான மார்க்க வழிகாட்டல் அவசியப்படுகின்றது. எனவே, இது விடயமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவான விளக்கத்தை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு, உடனடியாக மார்க்கத் தீர்ப்பொன்றை அறிவித்து எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினைகளிலிருந்து சமூகத்தை காப்பாற்ற வழிவகுக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையடுத்து மக்களுக்கு தெளிவூட்டல் வழங்குவதற்கும் பள்ளிவாசல்களுக்கு முறையான வழிகாட்டல் வழங்குவதற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கிறேன்” என ஹலீம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
உழ்ஹிய்யா தொடர்பில் இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வகையிலும் வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மத விவகாரங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு கூட்டத்தின் போது பல விடயங்களை வலியுறுத்தியிருந்தேன். மாடறுப்பு விடயம் குறித்து உரிய அவதானம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வாக்குறுதியளித்திருந்தார்.
அத்தோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் நாட்டிலுள்ள ஏைனய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்ததான மார்க்கத்தீர்ப்பை பெற்று மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்குமாறும் குறிப்பிட்டிருந்தேன். இது விடயத்தில் நீங்கள் பொறுப்புடன் செயற்படுவதாக கூறியிருந்தீர்கள்.
ஆனால், 10 நாட்கள் கடந்தும் இது விடயமாக திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்தி அக்கறையுடன் செயற்பட வேண்டும். ஏனெனில், உழ்ஹிய்யா விடயத்தில் பல பிரச்சினைகளை நாம் கடந்த காலத்தில் சந்தித்திருக்கிறோம். அவற்றை தவிர்ந்துகொள்வதற்கு திணைக்களம் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைக்கு செல்வது அவசியமானதாகும்.
குறிப்பாக மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பயங்கரமான தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் மிகவும்குறைவானதாக இருக்கின்றது. எனவே, இதுவிடயமாக ஜும்ஆத் தினங்களில் மக்களை தெளிவூட்டப்படல் வேண்டும். இதற்கான துரித நடவடிக்கையை திணைக்களமே மேற்கொள்ள வேண்டும்” என அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது விடயமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவான விளக்கத்தை கோரி மக்களுக்கு அறியப்படுத்தப்பட வேண்டும். உடனடியாக மார்க்கத் தீர்ப்பொன்றை அறிவிப்பதன் மூலம் இறுதிநேர சிக்கல்களை தவிர்ந்து கொள்ள முடியும். எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்பட்டு மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.- Vidivelli