வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்களமாயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதை அண்மைக் கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. சிறுபான்மை மக்களின் பூர்வீக நிலங்களில் புத்தர் சிலைகளை வைப்பதும் தொல்பொருள் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிறுபான்மை மக்களின் நிலங்களை அபகரிக்கும் சூழ்ச்சிகரமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது தொல்பொருள் திணைக்களத்தின் இந்த அத்துமீறல் செயற்பாடுகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்போது நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் அபகரிப்பதற்கு திணைக்களத்திற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என ஜனாதிபதி விளக்கிக் கூறினார். அத்துடன் நாட்டின் வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம் என்றும் தொல்பொருள் திணைக்கள ஆணையாளரை வேண்டிக் கொண்டார். இந்த சந்திப்பையடுத்து தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்த சம்பவமும் நிகழ்ந்தேறியது.
உண்மையில் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று தமது மக்களின் காணி உரிமையை நிலைநாட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இதற்கு முன்னரும் அவர்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு தமது மக்களுக்கு வழங்கியுள்ளனர். துரதிஷ்டவசமாக முஸ்லிம் எம்.பி.க்கள் இன்னமும் சமூகத்தை அடகு வைத்து தமது சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாகவுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பொன்மலைக்குடா பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் புத்தர் சிலைகளை வைப்பதற்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட முயற்சி அப் பகுதியில் பலத்த சலசலப்பைத் தோற்றுவித்திருந்தது. சிறுபான்மை மக்களின் நிலத்தில் அத்துமீறிப் பிரவேசித்தது மாத்திரமன்றி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்களை துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தும் வகையில் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நடந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறான சிங்களமயமாக்கல் வேலைத்திட்டங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்தே வருகின்றன. எனினும் இவற்றை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித காத்திரமான வேலைத்திட்டங்களும் அரசாங்க தரப்பிலிருந்தோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலிருந்தோ முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.
அண்மையில் திருகோணமலை நகரில் புத்தர் நிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. எனினும் இந்த விடயமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால் இறுதியில் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இவ்வாறு நாட்டில் தொடர்ச்சியான இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே முறுகல்களைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களும் நிரந்தரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிப்பதற்கான மறைமுக வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என்பதை ஜனாதிபதி நன்கறிந்துள்ளார். அந்த வகையில் இதனை தடுத்து நிறுத்த அவர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவேன் என அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதனை செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை. அவர் தன்னை ஒரு கனவான் அரசியல்வாதி என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், ஜனாதிபதி உடனடியாக இவ்வாறான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். இது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன் மூலமே வடக்கு கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியுமாகவிருக்கும்.- Vidivelli