பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்
கலாபூஷணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் இறைவனடி சேர்ந்து ஒரு வாரமாகின்றது. மலையகம் ஒரு கல்விமானையும், இலக்கிய ஆர்வலரையும் இழந்துள்ளது. தொடர்ச்சியான கல்விப் பணிகளாலும் எழுத்துக்களாலும் இலக்கிய பங்களிப்புக்களாலும் சமூக சேவைகளாலும் தேசிய அளவில் அறியப்பட்டவர் எஸ்.எம்.ஏ.ஹஸன்.
ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய ஹஸன் அதிபராக, ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராக, கல்வி அதிகாரியாகத் தனது வாழ்வின் பெரும்பகுதியை கல்விச் சேவைக்காக அர்ப்பணித்தார். எனினும் ஹஸனின் ஆர்வமும், வாசிப்புப் பணிகளும் பல்வேறு துறைகளை உள்ளடக்கி இருந்தன. கல்விப்பணியை அவர் எவ்வளவு நேசித்தாரோ அதே வேகத்தில் இலக்கியத்திலும் பங்காற்றினார்.
அவரது மனைவி பேராதனை ஷர்புன்னிசா ஒரு எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர். ஒரு காலத்தில் புகழ்பெற்ற பெண் பேச்சாளர். இலக்கியம் அந்தக் குடும்பத்தின் பிரிக்க முடியாத அங்கம்.
1955–1990 வரை இலங்கையின் தமிழ் நாட்டின் முஸ்லிம் எழுத்தாளர்களும் இலக்கியப் பிரமுகர்களும் மலை நாட்டில் சந்திக்கும் பொது இலக்கிய மன்றம் அவர்கள் வீடு. வீட்டின் ஒரு பகுதி நூற் களஞ்சியம். புரட்சிக்கமால், சாரணா கையூம், ஏ.இக்பால், எம்.சி.எம்.சுபைர், அ.ஸ.அப்துல் ஸமது, புலவர் மணி ஷரிபுதீன் என பெரிய பட்டியல் அவரது நட்புப் பட்டியலில் உண்டு.
மலைநாட்டின் முஸ்லிம், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எஸ்.எம்.ஏ.ஹஸனுக்கு முக்கிய பங்கிருந்தது. மலையக – முஸ்லிம் உறவுக்கு ஹஸன் ஒரு பாலமாக விளங்கினார். அந்தனி ஜீவா, தெனியார், க.ப.சிவம் உள்ளிட்ட அவர் காலத்து எல்லா மலையக இலக்கியப் பிரமுகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் ஹஸன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.
வரலாற்றில் பெரிய ஆர்வம் உள்ளவர். இலங்கை முஸ்லிம்கள், இந்திய வம்சாவளியினரின் வரலாறு, கண்டி வரலாறு பற்றி தெளிவான விளக்கங்களும் கருத்துக்களும் அவருக்கிருந்தது. இவை பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பொது மன்றங்களில் பேசியுள்ளார். கிராம வரலாறுகளை திரட்டுவதிலும் கிராமப் புலவர்களைப் பற்றி எழுதுவதிலும் பேசுவதிலும் அவர் ஈடுபட்டார். அவர் வீட்டில் இவை பற்றிப் பல கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
எம்.சி.சித்தி லெப்பையை வெளியே கொண்டு வந்தவர்களில் அவரும் ஒருவர்.
இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், நவீன இஸ்லாம் பற்றி அவர் பேசினார். அல்லாமா இக்பால் அவரது ஆதர்ஸ சிந்தனையாளர். இக்பால் பற்றி ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். பேராதனைப் பல்கலைக்கழக அரபு நாகரிகத் துறை பேராசிரியர் எஸ்.ஏ. இமாமுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். பல்கலைக்கழகத்துக்கு வெளியே அவரைப் பேச வைத்தவர்களில் அவரும் ஒருவர். இஸ்லாமிய நாகரிகம் என்ற எண்ணக்கருவிற்கு இலங்கையில் உயிரூட்டிய பெரிய அறிஞர் பேராசிரியர் இமாம்.
ஹஸன் 1927 மே, 27 ஆம் திகதி கண்டியில் பிறந்தார். பேராதனைக்கு அருகில் உள்ள மீவத்துறை அவரது கிராமம். தந்தை பெயர் அப்துல் அஸீஸ் ஷெய்கு முஹம்மது, தாயார் பெயர் மீரா லெப்பை பாத்துமா பீவி. ஹசனின் மூதாதையர், வர்த்தகர்கள், மார்க்க அறிஞர்கள். அவரது பாட்டானார் ஒரு மெளலவி. இவர்களின் முன்னோர்கள் காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள்.
பள்ளிவாசலில் இயங்கிய குர்ஆன் மக்தபில் ஓதல் பயிற்சியைப் பெற்று தமிழ் பாடசாலையில் கல்வியை ஆரம்பித்தார். 1944 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் S.S.C. தேர்வில் சித்தி பெற்றார். அதன் பின்னர் கண்டி மகாத்மா காந்தி கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர்ந்தார். இங்கு படித்துக் கொண்டிருக்கும் போது கேகாலையில் ஆசிரியராக முதலாவது நியமனத்தைப் பெற்றார். அந்தப் பாடசாலை கேகாலை பள்ளிவாசலோடு இணைக்கப்பட்டிருந்தது.
1946 SSC ஆங்கிலத் தேர்விலும் சித்தி பெற்றார். ஆங்கில ஆசிரியராக வாய்ப்பிருந்தும் தமிழ் ஆசிரியராகவே தனது ஆசிரியப் பதவியைத் தொடர்ந்தார்.
வெலம்பொடை, உடிஸ்பத்துவ, கெற்ற கும்புர, அக்குரணை, மாவத்த பொல ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையில் 1947 இல் அளுத்கம ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்தார்.
அக்குரணையிலும் கொட்டகொடையிலும் அவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இக்காலத்தில் அவர் பொறுப்பேற்ற சில பாடசாலைகள் அந்த ஊர்களின் முதற் பாடசாலைகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் வரவு குறைவு, கட்டடங்கள், தளபாடங்கள் இல்லாத சூழல். மத்திய மலைநாட்டில் 1950 காலக் கல்வி வளர்ச்சியில் இன்றும் பேசப்படாத ஒரு பகுதி ஹஸனின் அனுபவங்களில் புதைந்திருந்தது.
இது சேர். ராசீக் பரீத், மலையகத்தில் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் புதிய பாடசாலைகளை திறப்பதற்காகவும் மலையக முஸ்லிம் கிராமங்களில் சுற்றித்திரிந்த காலம். எஸ்.எம்.ஏ.ஹஸன் சேர்.ராஸிக் பரீத்துடன் மலையக முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சி தொடர்பில் நெருங்கிச் செயற்பட்டார். கண்டி மாவட்டத்தில் சேர்.ராஸிக் பரீத் சந்திப்பவர்களில் ஹஸனும் ஒருவர்.
அதே விதத் தொடர்பு பதியுதீன் மஹ்மூதுடனும் ஹஸனுக்கு இருந்தது. 1945 இல் இருந்து அந்தத் தொடர்பு ஆரம்பமாகிறது. கம்பளையில் பதியுதீனின் இல்லத்தில் முஸ்லிம் கல்விப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களில் ஹஸனும் கலந்து கொண்டார். உடதலவின்னவில் ஆசிரியராக பணிபுரிந்த ஷரிபுதீன், ஜே.எம்.அப்துல் காதர், கே.எல். இப்றாஹீம் ஆகியோரும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்று வந்தனர். எனினும் பதியுதீன் மிகவும் விரும்பி அடிக்கடி சந்தித்தவர்களில் எஸ்.எம்.ஏ. ஹஸன், கம்பளை இல்லவத்துறை அப்துல் றஹ்மானியா பாடசாலை ஆசிரியர் அப்துல் ரவூப் ஆகியோர் முதன்மையானவர்கள்.
பதியுதீன் மஹ்மூதுடனான தொடர்பு அவரது வபாத் வரை தொடர்ந்தது. கல்வி ஆலோசனைகளை வழங்கியவர்களில் தவிர்க்க முடியாதவராக எஸ்.எம்.ஏ.ஹஸன் விளங்கினார். பதியுதீனுடன் தனது அனுபவங்களையும் இணைத்து பதியைப்பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதினார். பதியைப்பற்றி எழுதப்பட்ட குறிப்பு நூல் அது.
மாவத்தப் பொலவில் ஆசிரியராக பணியாற்றிய 1953 – 1954 காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீதுடன் பிரதேசக் கல்விப்பிரச்சினைகள் பற்றி உரையாடினார். ஹஸன் அப்போது மத்திய இலங்கை அரசினர் சோனகர் ஆசிரியர் சங்கத்தலைவராகவும் இருந்ததால் கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் பற்றிய போதிய தகவல்களும் குறை நிவர்த்தித் திட்டங்களையும் சிறப்பாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஹஸனுக்கு இருந்தது. மத்திய இலங்கை சோனகர் ஆசிரியர் சங்கம் கண்டியின் பழைமையான சங்கம். இது 1945 இல் ராஸீக் பரீதின் சேவைகளின் உந்துதலால் தொடங்கப்பட்ட ஆசிரியர் அமைப்பு.
கண்டியில் முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை தோற்றம் பெறக்காரணமாக இருந்தது இந்த ஆசிரிய சங்கம்தான்.
1957 இல் இந்தச் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் இதற்கான பிரேரணை முன்னெடுக்கப்பட்டது. பதியுதீன் மஹ்மூத்தின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னணியில் தான் 1960 இல் ஹீரஸ்ஸகலவில் (கண்டி) கண்டி ஆசிரியப் பயிற்சிக்கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஹஸன் அதன் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
என்சல்கொல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகச் சில வருடங்கள் பணியாற்றினார். மீவத்துறை கிராமத்தின் இயற்கை அழகு என்சல்கொல்லவிலும் இருந்ததால் அந்தக் கிராமம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அங்கிருந்த புலவர் மலைக்கு அடிக்கடி சென்றார். அங்கு அருள் வாக்கி அப்துல்காதர் புலவரின் சாதனைகளையும் சரித்திரத்தையும் கேட்டறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மறைந்து கிடந்த புலவரின் படைப்புக்களை தேடி ஆராய்ந்து அருள்வாக்கி அப்துல் காதர் என்ற நூலை எழுதினார்.
ஏறத்தாழ காணாமல் போயிருந்த புலவரை மீட்டெடுத்து இலக்கிய உலகுக்கு வழங்கினார். அருள்வாக்கி அப்துல்காதர் புலவர் நூற்றாண்டு விழாவையும் தேசிய அளவில் கொண்டாடி மலையக முஸ்லிம் இலக்கியத்துக்குப் புது அர்த்தம் பாய்ச்சினார்.
1969 இல் பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலையில் முதல் மொழி தமிழ், இஸ்லாம் ஆகிய பாடங்களை படிப்பிப்பதற்காக விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
1969– 70 காலப்பகுதியில் ஹேந்தெனிய பேராதெனிய வை.எம்.எம்.ஏ. அமைப்பை புனர் நிர்மாணம் செய்தார். 1958 வை.எம்.எம்.ஏ அமைப்பை அங்கு முதலில் அறிமுகம் செய்தவரும் அவர்தான். ஹேந்தெனிய பேராதனை, மீவத்துறை கல்வி, சமூக சேவையில் பல முயற்சிகளை இவ்வமைப்பு மேற்கொண்டது.
ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் கண்டி ஒராபி பாஷா (எகிப்திய) அருங்காட்சியகத்தின் பணிப்பாளராக 20 வருடங்கள் பணியாற்றினார். ஒராபிபாஷா உள்ளிட்ட எகிப்திய அறிஞர்களின் கண்டித் தொடர்பைப் பலப்படுத்தும் பல முன்னோடி முயற்சிகளை அங்கிருந்து அவர் மேற்கொண்டது ஒரு தனி வரலாறு.-Vidivelli