முஸ்லிம் பெண்களின் கலாசார உடையினை உறுதிப்படுத்துங்கள்
மலையக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பதுளை வலயக் கல்விப்பணிப்பாளர், அரசாங்க பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தலையை ஆடையினால் மறைத்துக் கொண்டு பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் தலையை மறைக்காமல் திறந்த நிலையில் பரீட்சை எழுதும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தலையை மறைத்து ஆடை அணிவது முஸ்லிம் பெண்களின் சமய மற்றும் கலாசார உரிமையாகும். முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்தும் தமது உரிமைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்துமாறு மலையக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மலையக முஸ்லிம் கவுன்ஸிலின் பொதுச் செயலாளர் எம்.ரி.எம்.பாயிஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பரீட்சார்த்திகள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. முகத்தை மறைத்துக் கொண்டு பரீட்சை எழுதலாம் என்று கோருவோர் தொடர்பிலும் நாம் உடன்படவில்லை.
முஸ்லிம் மாணவிகள் பொதுவாக தங்களது தலையை ஆடையால் மறைத்துக்கொண்டு ஏனையோர் மத்தியில் பழகுபவர்கள் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையிலும் இந்த கலாசார உடையினை அணிபவர்கள். முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை சீருடையின் ஒரு பகுதியாக இந்த ஆடை கலாசாரம் இருந்து வருகிறது.
இந்நிலையில் முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை சீருடையில் தலையை மூடியிருக்கும் பகுதியை அகற்றும்படி உத்தரவிடுவது பாடசாலை சீருடையில் ஒரு பகுதியை கழற்றுவதாக அமையும். அந்நியர் முன்னிலையில் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தலையை மூடாது திறந்திருக்க வேண்டுமென பலவந்தப்படுத்தினால் அவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது பதுளை வலய கல்விப் பணிப்பாளர் இவ்விவகாரத்தில் தனது அதிகாரத்தை எல்லை மீறி பயன்படுத்தி பொது பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவிகளின் தலையை மறைக்கும் ஆடையை (பர்தா) அகற்றுவதற்கு தொடராக முயற்சித்து வருவதாக முஸ்லிம் பரீட்சார்த்திகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கல்விப் பணிப்பாளரின் இந்த ஆலோசனையினையடுத்து கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற GIT அதாவது தகவல் தொழில் நுட்ப பொதுப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் தங்களது தலைகளை மறைக்காது திறந்த நிலையில் பரீட்சை எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்தோடு கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவிகளும் இந்நிலைமைக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவிகளுக்கு இவ்வாறான அழுத்தங்கள் வழங்கப்படுவது அவர்களது பரீட்சை முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது எமது நிலைப்பாடாகும்.
இந்தப் பிரச்சினை ஊவா மாகாண பதுளை கல்வி வலய அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் மாத்திரமே உருவெடுத்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் தங்களது பர்தாவை சிறிது இலகுபடுத்தி காதுகள் இரண்டும் தெரியும் வகையில் சரிசெய்து பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு தங்களது ஆளடையாளத்தை உறுதிபடுத்தியுள்ளனர். இந்த வாய்ப்பு அப்பகுதி பரீட்சை மேற்பார்வையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் வினவினோம். கல்விப் பொதுத்தராதர (சா/த) மற்றும் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவிகள் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ விதிமுறைகள் என்ன என நாம் வினவினோம்.
பிரதி பரீட்சை ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.எஸ்.சமரகோன் இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இது தொடர்பில் இதுவரை எவ்வித சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. என்றும் பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலில் பரீட்சார்த்திகள் தலையை மூடிக்கொண்டு இருக்க முடியாது. என்றோ கட்டாயமாக தலையை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றோ எவ்விடத்திலும் குடிப்பிடப்பட்டிருக்கவில்லை.
முஸ்லிம் மாணவிகள் தங்களது தலையினை மறைத்து (மூடி) பாடசாலை சீருடையினைத் தயாரித்துக் கொள்வது அவர்களது சமய மற்றும் கலாசார உரிமையாகும். இந்த உரிமையை உறுதி செய்து பதுளை நீதிவான் நீதிமன்றினால் வழக்கு இல பீ ஆர் 1075/99 ன் கீழ் தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் கலாசார உடைக்கு எதிராக செயற்பட்டு ஒரு சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்தும் இவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோடுகிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli