முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: பன்சலை-பள்ளிக்குமிடையே முரண்பாடுகள் இல்லை
முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை மதிக்கிறோம் என்கிறார் நெல்லிகல தேரர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூரகல ஜெய்லானி பள்ளிவாசலுக்கும் கூரகல பெளத்த புனித பூமி பன்சலைக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளுமில்லை. நாம் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை மதிக்கிறோம். ஜெய்லானி பள்ளிவாசல் மத அனுஷ்டானங்களுக்கு எம்மிடமிருந்து ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம்’ என கூரகல பெளத்த புனித பூமிக்கு பொறுப்பாக செயற்படும் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
ஜெய்லானி பள்ளிவாசலின் இருப்பு தொடர்பில் வினவியபோதே ‘ விடிவெள்ளி’க்கு அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ‘நாங்கள் பள்ளிவாசலை அவர்களுக்கு ஒதுக்கிக்கொடுத்துள்ளோம். முஸ்லிம்கள் அவர்களது சமயக்கடமைகளை அமைதியாக முன்னெடுக்கிறார்கள். இதேபோன்று நாமும் எமது சமயக்கடமைகளை அமைதியாக முன்னெடுக்கிறோம்.
போயா தினங்களில் கூரகல புனித பூமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களில் அநேகர் பள்ளிவாசலுக்கும் செல்கிறார்கள். இதே போன்று பள்ளிவாசலுக்கு வருகை தரும் முஸ்லிம்களில் அநேகர் புனித பூமிக்கு விஜயம் செய்து பெளத்த மத நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தற்போது எமக்குள் இன நல்லிணக்கம் வலுப்பெற்று வருகிறது.
போயா தினங்களில் வருகை தரும் பெளத்தர்கள் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்வதால் அங்கு ஏதும் முரண்பாடுகள் இரு சமூகத்தினருக்குமிடையில் உருவாகாமல் இருப்பதற்காக, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஓரிருவரை அங்கு நிறுத்தியுள்ளோம்.
தமது சுயநலன்களுக்காக செயற்படும் ஒரு சாராரே இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவர்களிலிருந்தும் நாம் தூர விலகியிருக்க வேண்டும்.
ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி நில அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்றார்.
இதேவேளை ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபதலைவி ரொசானா அபுசாலியைத் தொடர்பு கொண்டு வினவியபோது ‘பள்ளிவாசலின் சமய கடமைகள் வழமைபோல் சுமுகமாக நடைபெறுகிறது. பல இடங்களிலிருந்தும் பத்தர்கள் வந்து செல்கிறார்கள்.நாம் நெல்லிகல வத்துகும்புர தம்ம ரதன தேரருடன் சமாதானமாக எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.-Vidivelli