அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை: புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் புத்தளம் சிவில் சமூக நிறுவனங்ளின் ஒன்றிய (பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுக்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுதீன் நயீமுல்லாஹ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு,
‘‘கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்துவற்காக தங்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை அறிவோம். அதனடிப்படையில் தங்களது தலைமையில் உலமாக்கள், பொது நல அமைப்புகள், புத்தி ஜீவிகள், அரசியல் ஈடுபாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கே இணைந்து அமைத்துக் கொண்ட சிவில் சமூக நிறுவனங்ளின் ஒன்றியம் வகுத்த வியூகத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றுகொள்ள முடிந்தது.
அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) மற்றும் வேறு சில கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு கூட்டணியாக எமது கட்சியான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் (MNA) [தற்போதைய ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் (UNA)] ‘தராசு’ சின்னத்தின் கீழ் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்து உங்களது நீண்டகால முயற்சிக்கு எம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்க முடிந்தது.
என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பின் போதும் அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய வாக்கெடுப்புக்களின் போதும் தான் தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த பெரும்பான்மையான வாக்காளர்களதும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினதும் வேண்டுகோளை துச்சமென மதித்து அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன் மூலம் புத்தளம் மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களது பலத்த கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியமையை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அவரை ஒரு வேட்பாளராக களமிறக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவர் செய்த குற்றங்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொண்டு அவரை தமது கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கி விட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருந்த போதிலும், பொதுத் தேர்தலின்போது அவர்கள் எமது கட்சியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தமது தீர்மானத்தை எமக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க தவறியமையால் அவ்விடயத்தில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பினால் மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள முடியாமல் போனது. ஆதலால், தனது கட்சிக்கோ வேறு எந்த சக்திகளுக்குமோ கட்டுப்படாத, தன்னிச்சையாக செயற்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே அவர் தொடர்ந்தும் இயங்கி வருகிறார் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்நிலையில்தான் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி காலை தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகள் கடத்தல் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் தண்டப் பணத்தை செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வாக்களித்த புத்தளம் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி அவரை வேட்பாளராக நிறுத்திய அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் களங்கம் கற்பிக்கும் விதத்திலேயே இக் கடத்தல் விவகாரம் பரவலாக பேசப்படுகிறது. அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் கூட சிறுபிள்ளைத் தனமானதும் கோமாளித்தனமானதாகவுமே அமைந்திருந்தது. அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட வேண்டும் என நாளுக்கு நாள் எமக்கும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
கட்சியின் ஒழுக்காற்று கோவை மற்றும் எம்மால் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வாறு நாம் கடமைப்பட்டுள்ளோமோ, அது போலவே சகல கட்சிகளையும் புத்தளம் மாவட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களையும் உள ரீதியாக ஒன்றிணைத்து, அனைவரது வாக்குகளையும் ‘தராசு’ சின்னத்துக்குப் பெற்றுக் கொடுத்து, அவர்களது நீண்ட கால கனவை நனவாக்க முன்னின்று உழைத்த உங்களது ஒன்றியத்துக்கும் மேற்படி விடயத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை அணுகி விளக்கம் கோரவும் ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான சமூகக் கடமையும் தார்மீக பொறுப்பும் உள்ளது என்றும் கருதுகிறோம்.
எனவே, உங்களது ஒன்றியத்தினை அவசரமாக ஒன்றுகூட்டி மேற்படி விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடி இது தொடர்பில் சட்ட ரீதியாக செயற்படும் வகையிலான உங்களது ஆலோசனைகள் ஏதுமிருப்பின் அதுபற்றி தாமதியாது எமக்கு அறியத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli