ஒலுமுதீன் கியாஸ் ஷாபி
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஜித்நகர், சூரங்கல், நடுஊற்று மற்றும் கற்குழி ஆகிய நான்கு கிராம சேவக பிரிவுகளில் உள்ள செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தப் பிரதேசங்களில், குரங்குபாஞ்சான், வெள்ளங்குளம், சுங்காங்குழி, பட்டியனூர், நடுஊற்று, சூரங்கல், துவரங்குளம் மற்றும் கற்குழி ஆகிய கிராமங்களில் செங்கல் உற்பத்தி இடம்பெற்று வருகின்றது.
இங்கு 30 வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் கிண்ணியாவின் பல கிராமங்களில் இருந்தும் அன்றாட ஜீவனோபாயத்திற்காக இந்தக் கூலித் தொழிலை செய்து வருகின்றனர்.
இலங்கையில் 30 வருட கால யுத்தம் முடிந்த பிறகும் இந்தத் தொழிலை செய்து வந்ததாகவும் ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக பாதித்து இந்தத் தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிண்ணியா, சின்ன மகமாறு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் சின்னலெப்பை (52) என்பவர் கருத்து தெரிவிக்கும் போது,
நான் கடந்த இருபது வருடமாக இந்த தொழிலை செய்து வருகிறேன். செங்கல் உற்பத்தி உபகரணங்களின் விலை ஏற்றம் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. 650 ரூபாவுக்கு வாங்கிய மண்வெட்டி ஒன்று இப்பொழுது 2300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 300 ரூபாவுக்கு வாங்கிய பொலித்தீனை இப்போது ஆயிரம் ரூபாவுக்கு வாங்க வேண்டும். 25000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் ஒன்று 57 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இதனால் பாரிய போராட்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
கிண்ணியா, மகாமாறு கிராமத்தை சேர்ந்த அப்துல் முத்தலிப் இபாதுல்லா(38) என்பவர் கருத்து தெரிவிக்கும் போது, இது எனது பரம்பரைத் தொழில். எனது தகப்பனார் 25 வருடங்களுக்கு மேலாக இத் தொழிலை செய்து வந்தார். நான் கடந்த எட்டு வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறேன். கடந்த காலங்களில் இந்த தொழில் மூலம் ஓரளவு வருமானங்களை பெற்று வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் எமது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் செங்கல் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலாபம் குறைவடைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் கல்லை விற்பனை செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும்.
ஆனால் இப்போது 1500 ரூபாயே இலாபமாக பெறுகின்றோம். இது தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் உண்மையிலேயே எங்களுடைய உழைப்புக்கு போதாது. இருந்தும் இப்போதைய கஷ்டமான நிலை காரணமாக இதை நாங்கள் அந்த விலைக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் கூலி வேலையாளர்களுக்கு முன்பு ஆயிரம் கல்லுக்கு 3000 ரூபாவும் சாப்பாடும் கொடுத்தோம். ஆனால் இப்போது 3000 கல்லுக்கு 5000 ரூபாவும் சாப்பாடும் கொடுக்க வேண்டும். கூலியும் அதிகரித்து விட்டது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, அதேவேளை விற்பனை வீழ்ச்சி அடைந்து விட்டது என்று தெரிவித்தார்.
இது குறித்து கிண்ணியா, நடுஊற்று கிராமத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் அன்சார் (44) செங்கல் உற்பத்தி குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
செங்கல் உற்பத்திக்காக விறகு எடுப்பதில் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். செங்கற் தொழிலுக்கு என்று விறகு அனுமதிப்பத்திரம் கிடைப்பதில்லை. வீட்டு பாவனைக்கு என்று எடுக்க வேண்டும். அதுவும் மாதம் ஒரு முறையே தருகிறார்கள். இது செங்கல் உற்பத்திக்கு போதாது. இதன் காரணமாக தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
எரிபொருள் பிரச்சினையும் விறகு பிரச்சினையும் எங்களுடைய இந்த பரம்பரை தொழிலையே அடியோடு அழித்து விடும் என அஞ்சுகிறோம் என கிண்ணியா மகாமாறு பிரதேசத்தைச் சேர்ந்த ஆதம்பாவா ரபீக் (53) கூறுகின்றார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், செங்கல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு தேவையான எரிபொருளை எங்களால் பெற முடியாதுள்ளது. இந்த இயந்திரத்துக்கு QR கிடையாது. எங்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு கிடைக்கின்ற QR இற்கான பெட்ரோலையே நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம்.
அடுத்து, கல்லைச் சுடுவதற்கு போதிய அளவு விறகு பெற முடியாது தவிக்கிறோம். அதற்கான அனுமதியை பெறுவதற்கு 40 கிலோமீற்றர் தூரம் திருகோணமலையில் உள்ள வனவளப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு அலைய வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.
இந்த நிலையில், மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரிய இந்த தொழிலை படிப்படியாக இவர்கள் இழந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.
நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்குள் 50 விதமானோர் இந்த தொழிலை கைவிட்டு உள்ளதாகவும் இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் மாதம் ஒன்றுக்கு ஒரு நாளுக்குரிய அனுமதிப் பத்திரமே வழங்கப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
அதுவும் வீட்டு பாவனைக்கு மாத்திரமே விறகுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படுகின்றது. இந் நிலையில் எப்படி செங்கல் உற்பத்தியை பாதுகாக்க முடியும்?
எனவே செங்கல் உற்பத்திக்காக தனியாக வண்டியில் விறகு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒரே தடவையில் ஒரு மாதத்துக்காவது வழங்க வேண்டும்.
இவர்கள் மோட்டார் சைக்கிளுக்கான QR Code ஐ பயன்படுத்தியே பெட்ரோலை பெறுகின்றார்கள். இது நாளாந்தம் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு போதுமானதாக இல்லை. இதுவும் உற்பத்தியில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, செங்கல் உற்பத்திக்கென்று தனியாக எரிபொருள் கோட்டாவை இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்து, செங்கல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்களின் விலையேற்றம் இந்த தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் மானிய அடிப்படையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கிண்ணியா பிரதேசத்தில் மேற்குறித்த கிராமங்களில் செங்கல் உற்பத்திக்கு தேவையான களிமண் வளப்படுக்கை விரிந்து காணப்படுவதால், இந்த இடங்கள் செங்கல் உற்பத்திக்கு பொருத்தமான பொருளாதார பிரதேசமாக அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்தப் பிரதேச மக்களின் அனுசரணையுடன் அரசியல் அதிகாரங்களைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது உருப்படியான வேலைகளைச் செய்வார்களா?-Vidivelli