எம்.எப்.அய்னா
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி. முழு நாடும் அறிந்த ஒரு வைத்தியர். அவருக்கு எதிராக சிங்கள தாய்மாருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தினார் எனும் குற்றவியல் விசாரணை, குருணாகல் நீதிவான் நீதிமன்றில் இன்றும் முன்னேற்றம் இன்றி தொடர்கிறது.
கடந்த 26 ஆம் திகதி வெள்ளியன்றும், இது தொடர்பிலான வழக்கு குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது எச்.எஸ்.ஜி. பரிசோதனைகள் தொடர்பில் நீதிமன்றால் நியமிக்கப்பட்டுள்ள வைத்திய நிபுணர்கள் குழு, அப்பரிசோதனைகளை இன்னும் முன்னெடுக்காத நிலையில், அதனை துரிதப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது வைத்தியர் ஷாபி, சட்டத்தரணிகள் எவரின் உதவியும் இன்றி தனியாக முன்னிலையாகி, சந்தேக நபர் கூண்டிலிருந்தவாறு நீதிவானிடம் விடயங்களை முன் வைத்தமை விஷேட அம்சமாக அமைந்தது.
இதன்போது, வைத்தியர் ஷாபி அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை விசாரணைகளில் தான் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிவானின் பார்வைக்கு சமர்ப்பித்தார். அவ்வறிக்கையை உடன் வைத்திருக்குமாறும் குற்றப் பகிர்வுப் பத்திரிகை எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படுமானால் அது குறித்த விசாரணையின் போது பிரதிவாதி தரப்பு சான்றாவணமாக அதனை பயன்படுத்தலாம் என இதன்போது நீதிவான் குறிப்பிட்டார்.
இதன்போது தான் 4 வருடங்களாக இந்த பொய்யான குற்றச்சாட்டினால் துன்புறுவதாக வைத்தியர் ஷாபி நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவந்த போது, தான் அதனை அறிவதாகவும், அதனாலேயே வைத்திய நிபுணர்களின் எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதாகவும் நீதிவான் கூறினார்.
அத்துடன், வைத்தியர் ஷாபிக்கு அநீதி நடக்க இடமளிக்கப்படமாட்டாது என திறந்த மன்றில் குறிப்பிட்ட நீதிவான், தனக்கு விளக்கம் தேவைப்படும் போது வைத்தியர் ஷாபி தரப்பின் விளக்கம் கண்டிப்பாக பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்து வழக்கை ஆகஸ்ட் 25 வரை ஒத்தி வைத்தார்.
இது இவ்வாறிருக்க, சிங்கள தாய்மாருக்கு சட்டவிரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் குற்றச் சாட்டுக்களில் இருந்து விடுவித்து, விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், வைத்தியர் ஷாபியை மீண்டும் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே நியமனம் வழங்கி கடமையில் இணைக்க, சுகாதார அமைச்சு குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்தது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் வைத்தியர் ஷாபியை இவ்வாறு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு உத்தரவிட்ட நிலையில், நேற்று முன் தினம் (30) அவர் கடமைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு மற்றும் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக் குழு ஆகியன வைத்தியர் ஷாபிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தனது அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலர் ஜனக ஸ்ரீ சந்ரகுப்தவிடம் கையளித்துள்ளது.
அதன்படி அந்த அறிக்கையை அரச சேவைகள் ஆணைக் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு அளித்த அறிக்கையை ஆராய்ந்த அரச சேவைகள் ஆணைக்குழு கடந்த 26ம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளது.
HSC / DES/ 028/2019 எனும் குறித்த கடிதம் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் தொடர்பான சபையின் செயலாளர் கலுகப்புஆரச்சியின் கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்திலேயே வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை உடன் அமுலுக்கு வரும் வகையில் குருநாகல் வைத்தியசாலையில் பணியில் இணைக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை விசாரணைக் குழுவின் அறிக்கை கூறுவதென்ன?
வட மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.கே. சம்பத் இந்திக குமார தலைமையில் சர்வதேச சுகாதார பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க, பதில் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ( கொள்முதல்) ஏ.எல். பஸ்நாயக்க, பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் யூ.டி.பி. ரத்னசிறி, சமூக வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே, பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் டி. கடோட் கஜன், ஓய்வுபெற்ற பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் அசோக வீரக்கொடி, பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் எஸ்.பி.எஸ். சேனாதீர, விசாரணை அதிகாரி டி.டப்ளியூ.டி.கே. தஹநாயக்க, விசாரணை அதிகாரி எஸ். ஐ. குணவர்தன, ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜயந்த ஜயவர்தன ஆகியோரை உள்ளடக்கி இந்த விசாரணைக் குழு சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜயந்த ஜயவர்தன ஒரு போதும் கலந்துகொள்ளாத நிலையில், விசாரணை அதிகாரி பஸ்நாயக்க 2022.11.01 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணைகளில் கலந்துகொண்டிருக்கவில்லை.
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி முன்னெடுத்த சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் போது சிங்கள தாய்மார் மலட்டுத் தன்மை அடையும் வகையில் செயற்பட்டதாகவும், முஸ்லிம் பெண்கள் 3 ஆவது சிசேரியன் செய்த பின்னரும், செய்ய வேண்டிய எல்.ஆர்.டி. சத்திர சிகிச்சையை செய்யாது அவ்வாறு செய்ததாக ஆவணங்களில் பொய்யான பதிவுகளை இட்டதாகவும் சுமத்தப்பட்ட அடிப்படை குற்றச்சாட்டினை மையப்படுத்தி, அதனை விசாரிக்க இக்குழு நியமிக்கப்பட்டது.
2021.12.22 முதல் 2023.01.16 வரையான காலப்பகுதியில் 32 அமர்வுகளின் பின்னர் 2023.03.11 மற்றும் 2023.04.22 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற அமர்வுகளுடன் இக்குழுவின் விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.
அரச நிர்வாக சுற்றறிக்கை 30/2019 பிரகாரம் அடிப்படை விசாரணைகள் இரு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டுமாக இருப்பினும், இந்த விடயத்தின் ஆழம், கொவிட் நிலைமை, அதனைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து சிக்கல் போன்ற காரணங்களால் விசாரணைக் கால நீடிப்புக்கு சுகாதார அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
28 பக்கங்களைக் கொண்ட அடிப்படை விசாரணை அறிக்கையில், வைத்தியர் ஷாபி மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவற்றுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இந்த விசாரணைக் குழு 63 சாட்சிகள் மற்றும் ஆவணங்களை மிகக் கவனமாக பரீட்சித்துள்ள நிலையில், தனது அனுமதி இன்றி தனக்கு வைத்தியர் ஷாபி எல்.ஆர்.டி. சத்திர சிகிச்சை செய்ததாக கே.பி. நதீகா நிலந்தி செய்த முறைப்பாடு தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு நீதிமன்ற அனுமதியுடன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளின் பெறுபேறுகளை கவனமாக ஆராய்ந்துள்ள இந்த குழு, குறித்த பெண்ணின் முறைப்பாடு பொய்யானது என தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், 2004.08.09 முதல் குருணாகல், கலேவலை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளமை, அதன் போது அவ்வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றியவர்கள், அப்பொழுது முதல் வைத்தியர் ஷாபிக்கு மேல் அதிகாரிகளாக கடமையாற்றிய பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்களின் பட்டியலையும் பெற்று இந்த விசாரணைக் குழு ஆராய்ந்துள்ளது.
இக்காலப்பகுதியில் வைத்தியர் ஷாபி 4372 சிசேரியன் சத்திர சிகிச்சைகளையும் 79 சுவப் பிரசவங்கள் தொடர்பிலும் சிகிச்சையளித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில் சிசேரியன் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டோரில் 3479 பேர் சிங்கள தாய்மார் எனவும், 860 பேர் முஸ்லிம் தாய்மார் எனவும், 33 பேர் தமிழ் தாய்மார் எனவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அறிக்கைக்கு அமைய, வைத்தியர் ஷாபி 2019.05.24 இல் கைது செய்யப்பட்ட பின்னர் 2019.05. 25 முதல் 2019.06.22 வரையில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
அதற்கமையவே, நதிகா நிலந்தியின் முறைப்பாடு தொடர்பில் விரிவாக விபரித்துள்ள விசாரணைக் குழு, அவரது முறைப்பாடு பொய்யானது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைவிட வைத்தியர் ஷாபி மீது பிரதானமாக 6 குற்றச்சாட்டுக்கள், குருணாகல் வைத்தியசாலையில் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ தலைமையிலான விசாரணைக் குழுவால் முன் வைக்கப்பட்டிருந்தது.
1. சிசேரியன் சத்திர சிகிச்சையின் போது சிங்கள தாய் மாருக்கு ஒரு தையலும், முஸ்லிம் தாய்மாருக்கு இரு தையல்களும் இடுதல்
2. சீசர் சத்திர சிகிச்சைகளின் போது ‘ கோஸ் டவல்’ ஒன்றினை பயன்படுத்தி ‘பொரடோனியம்’ அறைகளை சுத்தம் செய்தல்
3. மிக அவசரமாக அதாவது 10 நிமிடங்களுக்குள் சிங்கள தாய்மாருக்கு சீசர் செய்தல்
4. சிங்கள தாய்மாரை சிசேரியன் சத்திரசிகிச்சைகளுக்கு ஊக்கப்படுத்துதல், முஸ்லிம் தாய்மாருக்கு அவ்வாறு செய்யாதிருத்தல்
5. முஸ்லிம் தாய்மாருக்கு விஷேட கவனிப்பளித்தல்
6. முஸ்லிம் குழந்தைகள் பிறக்கும் போது இஸ்லாமிய வார்த்தைகளை கூறுதல்
இந்த 6 விடயங்கள் தொடர்பிலும், சிரேஷ்ட பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட இந்த விசாரணைக் குழு தீவிரமாக ஆராய்ந்துள்ளது.
குறிப்பாக , ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுக்களை முன் வைக்க, குருணாகல் வைத்தியசாலையின் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ தலைமையிலான குழு சாட்சியமாக பதிவு செய்த 43 சாட்சியாளர்களும் இந்த விசாரணை குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களில் பலர், சந்தன கெந்தன்கமுவ குழுவிடம் கூறியதாக கூறும் விடயங்களுக்கு மாற்றமான நிலைப்பாடுகளையே பிரஸ்தாபித்துள்ளனர்.
அதன்படி அப்போது அவர்களிடம் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ குழு சாட்சியம் பெறும் போது நாட்டின் நிலைமை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்களால் அவ்வாறு வாக்கு மூலங்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த 10 பேர் கொண்ட விசாரணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி இந்த 6 குற்றச்சாட்டுக்களில் 6 ஆவது விடயம் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை மற்றும் சாட்சிகள் அற்றவை என விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் மத வசனம் ஒன்றினை சத்திர சிகிச்சைக் கூடத்தில் வைத்தியர் ஷாபி உச்சரிப்பதாக முன் வைக்கப்பட்டுள்ள விடயத்துக்கு மட்டும் சாட்சிகள் இருப்பதாக விசாரணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
இதனைவிட வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்த விசாரணைக் குழு, குருணாகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் பலவற்றையும் தோலுரித்துக்காட்டியுள்ளது.
இதனால், வைத்தியர் ஷாபி சிங்கள தாய்மாரை மலட்டுத் தன்மை அடைய செய்யும் வகையில், சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் போது நடந்துகொண்டதாக எந்த சான்றுகளும் இல்லாததால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என இந்த விசாரணை குழு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அத்துடன், நதீகா நில்மினி எனும் பெண்ணின் முறைப்பாடும் உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை மையப்படுத்தியும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவித்துள்ள விசாரணைக் குழு, சத்திர சிகிச்சைக் கூடத்தில் முஸ்லிம் மத வசனங்களை கூற வேண்டாம் என வைத்தியர் ஷாபியை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் மயக்க மருந்து வைத்தியர் ஒருவருடனான முரண்பாடு தொடர்பிலும் வைத்தியர் ஷாபியை அறிவுறுத்தியுள்ள இந்த விசாரணைக் குழு, வைத்தியர் ஷாபி மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.-Vidivelli