கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஒரு முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதி துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்து, சுங்க அதிகாரிகளின் கைகளிலே சிக்கியபின் தன்னை காப்பாற்றுமாறு ஜனாதிபதி அலுவலகத்தையே கேட்டு ஏமாந்து பாரிய பணத்தொகையை அபராதமாகச் செலுத்தியபின் விடுபட்டு மீண்டும் அவசர அவசரமாக துபாய்க்குச் சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தக் கடத்தல்காரப் பிரதிநிதி ஓர் அரசியல் பிரமுகருக்குரிய விசேட சலுகைகளைப் பயன்படுத்தி இந்த வருடம் மாசிமாதம் தொடக்கம் ஆறு தடவைகள் துபாய்க்குச் சென்றுவந்து இப்போது ஏழாவது முறையாக அதே நாட்டுக்குப் பயணமாகியுள்ளார் என்றும் அறியக்கிைடக்கிறது. இவருக்கு அந்த நாட்டிலே வியாபாரத் தொடர்பு உண்டென்றும் செய்திகள் கூறுகின்றன. இந்தத் தொடர்பின் ஏனைய வடிவங்கள் இனித்தான் கசியத் தொடங்கும்.
அரசியல்வாதிகள், அதுவும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் சுங்கவரி கட்டாமல் பொருள்களை நாட்டுக்குள் கொண்டுவருவது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதுமையல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறு பல தடவைகள் நடந்துள்ளன. ஆனால் இந்தப் பிரதிநிதியோ ஒரு முஸ்லிம். இவரது செய்கை இன்று பன்மடங்காகப் பிரபலப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. அதற்காக யாரையும் குறை கூறவும் முடியாது. அதன் தாக்கத்தைப்பற்றித்தான் இக்கட்டுரை விமர்சிக்க விரும்புகிறது.
முதலாவதாக ஒரு கேள்வி. இவரின் செயலைக் கண்டித்து இதுவரை ஏன் ஏனைய முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எவரேனும் வாய் திறவாமல் இருக்கின்றனர்? இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளுள் ஒருவர். அந்தக் கட்சி ஏன் இவரை கட்சியிலிருந்து நீக்காமல் இருக்கிறது? அக்கட்சியின் தயக்கம் வேறொரு சந்தேகத்தையும் கிளப்புகிறது. அதாவது, இவரை நீக்கினால் அவரது கட்சிப் பிரதிநிதிகள் ஏனையோரின் வண்டவாளங்களைப் பகிரங்கமாக்குவாரோ என்ற பயமாக இருக்கலாம் அல்லவா?
அவரது கட்சி ஒரு புறம் இருக்கட்டும். முஸ்லிம்களின் இஸ்லாமியக் காவல் அரண் என்று கருதுகின்ற அகில இலங்கை உலமாக்கள் சபையும் ஏன் வாய்மூடிக் கொண்டிருக்கிறது? இந்தக் கடத்தல்காரப் பிரதிநிதியை நாடாளுமன்றத்திலிருந்து உடனடியாக விலக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக எழுப்ப வேண்டியது இச்சபையின் கடமையாகாதா? ஒட்டுமொத்தத்தில் இந்தப் பிரதிநிதியின் செயல் முஸ்லிம் தலைமைத்துவங்களை நாற்றமெடுக்கச் செய்துள்ளதை மறுக்க முடியாது. அப்படியானால் அவர்களைத் தெரிந்தனுப்பிய வாக்காளர்களைப்பற்றி என்ன கூறுவதோ?
முஸ்லிம் நலன்களைப் பேணவும் அவர்களது உரிமைகளுக்காகப் போராடவும் முஸ்லிம் கட்சிகள்தான் வேண்டும் என்றுதானே பிரச்சாரத்தை ஆரம்பித்து ஒரு கட்சியை முதலில் உருவாக்கி அது பின்னர் இரண்டாகி இப்போது மூன்றாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது? இதுவரை இந்தக் கட்சிகள் சாதித்தவை என்ன? எதையும் சாதிக்காவிட்டாலும் சமூகத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாமல் இருந்தாலும் போதுமே. இப்போது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒரு பிரதிநிதியின் செயல் முழு சமூகத்தின் முகத்திலுமே சேற்றைவாரி வீசியுள்ளதே. இதிலிருந்தாவது முஸ்லிம்கள் பாடம் படிக்க வேண்டாமா? வேறொரு கட்சியின் அங்கத்தவரான ஒரு முஸ்லிம் பிரதிநிதி இப்படிச் செய்திருந்தால் முஸ்லிம்கள் அக்கட்சியின்மேல் பழியைச் சுமத்திவிட்டு ஆறுதல் அடையலாம். ஆனால் இவரோ ஒரு முஸ்லிம் கட்சியின் அங்கத்தவர். யார்மேல் இப்போது பழி சுமத்துவதோ?
நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கென ஒரு தனிக்கட்சி இயங்குவது ஆபத்தானது என்பதை இக்கட்டுரையாளர் தொடர்ந்து வாதிட்டு வருகின்றார். அந்த வாதம் இப்போது மேலும் வலுவடைந்துள்ளது.
பேரினவாதத்துக்குப் பதில் இன்னோர் இனவாதக் கட்சியை உருவாக்குவதல்ல. மாறாக இனவாதமற்ற ஒரு சக்தியுடனோ கட்சியுடனோ இணைந்து பேரினவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதே ஒரே வழி. அந்தத் தேடலை இதுவரை முஸ்லிம்கள் செய்யவில்லை என்பதைத்தான் இக்கட்டுரை சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பேரினவாதம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கி நாட்டையே கடனாளியாக்கி இன்று பணக்கார வர்க்கத்தின் பாதுகாவலானான சர்வதேச நாணய நிதியின் பிடிக்குள் சிக்கவைத்துள்ளது என்பதை பெரும்பான்மை இனத்தின் வாலிபச் சமூகம் உணர்ந்துள்ளது. இந்த நிலை ஏற்படும் என்பதை அவ்விளைஞர்கள் எதிர்பார்த்துத்தானோ என்னவோ கடந்த வருடம் அரகலய போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்து “அமைப்பையே மாற்று” என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். அவர்களின் பேராட்டம் இந்த நாட்டின் வரலாற்று வானில் தோன்றிய ஒரு விடிவெள்ளியெனக் கூறலாம். இன, மத, மொழி, அரசியல் சாயங்களுக்கு அப்பால் நின்றுகொண்டு சகலரும் இணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற புனித நோக்கத்துடன் அந்த இளைஞர்கள் போராடியபோது அதில் ஒரு சில முஸ்லிம்களே கலந்து கொண்டனர். இன்றைய முஸ்லிம் கட்சிப் பிரமுகர்கள் எவருமே அந்த இளைஞர்களுக்கு ஆதரவளியாதது ஒரு துர்ப்பாக்கியமே.
அந்தப் போராட்டத்திற்கு அன்னியரின் தூண்டல் என்ற ஒரு சாயத்தைப் பூசி அவ்விளைஞர்களுக்கும் கலகக்காரர்களெனப் பட்டம் சூட்டி அவர்களின் தலைவர்களையும் சிறையில் தள்ளி ஈற்றில் அந்தப் போராட்டத்தால் நன்மை அடைந்தவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ. ஆனால் அவரும் பேரினவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு தலைவர் என்பதை அவரது ஒவ்வொரு செயலும் வெளிப்படுத்துகின்றது. உதாரணத்திற்கு இரண்டைக் கூறலாம். ஒன்று, சிறுபான்மை இனங்கள் வாழும் பகுதிகளில் பெரும்பான்மை இன மக்களை தந்திரமாகக் குடியேற்றும் நடவடிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. அதனால் முஸ்லிம்களின் மைய வாடிகளும் பள்ளிவாசல்களும் பறிபோகும் ஆபத்து உருவாகியுள்ளது. இவற்றைக் கண்டும் காணாததுபோல் ஜனாதிபதி இருப்பதை முஸ்லிம் தலைமைகள் உணரவில்லையா? இரண்டு, பேரினவாதிகள் பாடிவரும் ஒரு பல்லவி இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கே சொந்தம் மற்றைய இனத்தவர்களெல்லாம் சிங்களவர்களின் வாடகைக் குடிகள் என்பதாகும். இந்தக் கொள்கை இருக்கும்வரை இன நல்லிணக்கம் என்பது ஒரு பகற்கனவே. ஆனால் அதை உணர்ந்தும்கூட இந்த ஜனாதிபதி அந்தப் பல்லவியை மறுத்துரைக்காமல் வெறும் சொல்லளவில் அரசியல் இலாபத்துக்காக அதாவது ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இனங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இன நல்லிணக்கம் வேண்டும் என்ற இன்னொரு பல்லவியைப் பாடுவதில் ஏதேனும் அர்த்தம் உண்டா?
இன்றைய அரசியற் சூழலில் இனவாதத்திற்கெதிராக வெளிப்படையாகவே குரல் கொடுக்கின்ற ஒரேயொரு கட்சி தேசிய மக்கள் சக்தி மட்டுமே. அது மட்டுமல்லாமல் அரகலய இளைஞர் கோரியதுபோன்று அமைப்பு மாற்றம் வேண்டும் என்றும் அந்தக் கட்சிதான் குரல் எழுப்புகின்றது. அதற்கும் மேலாக, அனைத்துக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியின் பொருளாதாரத் திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆமாப்போட இந்த ஒரு கட்சியே அவ்வமைப்பின் வர்க்க வடிவத்தை அம்பலப்படுத்துகின்றது. அந்த நிதியின் பொருளாதாரக் கொள்கைகளையும் தத்துவத்தினையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்கலாம். ஆனால் மறுசீரமைப்பு என்ற வடிவில் அதன் விதிகளுக்கிணங்க ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களின் பழுவை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது காணப்படும் சில கொள்வனவுப் பண்டங்களுக்கான விலைச்சரிவும் ரூபாவுக்கான மதிப்பேற்றமும் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை. அதற்குரிய காரணங்களையெல்லாம் விளக்குவதற்கு இக்கட்டுரையின் நீளம் இடந்தராது. சுருக்கமாகக் கூறுவதானால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பெருகி ஏற்றுமதிகள் அதிகரித்து நாட்டின் வர்த்தக நிலுவையில் மிகை காணாதவரை இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையப் போவதில்லை. அதற்கேற்றவாறு அரசியல் பொருளாதார சமூக அமைப்புகள் மாற்றமடைய வேண்டும். இன்று நிலவும் இனவாதமும் ஊழலும் நிறைந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே வலியுறுத்துகின்றது. இருந்தும் அந்தச் சக்தியின் பின்னால் ஏன் முஸ்லிம்கள் திரள்வதற்குத் தயங்குகின்றனர் என்பதுதான் புதிராக இருக்கிறது.
இலங்கையின் அரசியலை முஸ்லிம்கள் எப்போதுமே ஒரு வியாபாரக் கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்துள்ளனர். அவர்களுடைய தனிப்பட்ட இரண்டு கட்சிகளும் அந்தக் கண்ணோட்டத்திலேதான் தமது ஆதரவையோ எதிர்ப்பையோ ஆளும் கட்சியினருக்குச் செலுத்தியுள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்தின் கதாநாயகனும்கூட தன்னை அரசாங்கம் விடுவிக்கவில்லை என்பதற்காகத்தானே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வாக்கெடுப்பில் அரசுக்கெதிராக வாக்களித்துள்ளார். முன்னொரு முறையும் 20ஆம் அரசியல் யாப்புத் திருத்தப் பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடைபெற்றபோது பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஆதரவளித்ததாக அவரே ஒப்புக் கொண்டுள்ள
செய்திகள் கசிந்தன. இவர்களைப் போன்றவர்கள்தான் முஸ்லிம்களின் அரசியலுக்குத் தலைமை தாங்க வேண்டுமா? இது ஒரு கேவலம் இல்லையா? முஸ்லிம் இளம் தலைமுறையினருக்கு என்ன நடந்ததோ?
தகைமையும் திறனும் கண்ணியமும் நாட்டின் சகல மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் திடனும் எந்த இனத்தில் இருந்தாலும் அதன் தலைமையின்கீழ் இயங்குவதே முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மை இனங்கள் யாவற்றிற்கும் இன்றுள்ள ஒரே வழி. அந்தத் தேடல் முஸ்லிம்களிடையே இனியாவது ஆரம்பமாகட்டும்.
இனத்தைக் காக்கும் சக்தியென
எண்ணி யிருந்த வாலிபர்கள்
மனத்தை எங்கோ விட்டவராய்
மண்டி யிட்டுத் தூங்குகிறார்,
தனத்தைக் கொண்டே ஒருகூட்டம்
தயவே யற்று வாழுவதால்
இனத்தின் சொந்த ரூபமதில்
இன்று களங்கம் படிகிறதே.
(கவிஞர் அப்துல் காதர் லெப்பை)