- கொண்டுவரப்பட்ட நகைகள், தங்க பிஸ்கட்டுகள் அரசுடமையாகின
- சிறப்பு விருந்தினர் முனையத்தினூடாக 2வது பெரிய தங்க கடத்தலாக பதிவு
- நேற்று பாராளுமன்றில் பிரசன்னம், அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.வை.எம்.சியாம்)
நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான முறையான சுங்க விசாரணை நேற்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்துள்ளதுடன், சுங்க விசாரணையை சுங்கத்துறையின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர், வருவாய் பாதுகாப்பு பிரிவின் என்.பி. பி. பிரேமரத்ன நடத்தியிருந்தார்.
முன்னதாக, 3.5 கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்கள், நகைகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் காலை 9.45 மணியளவில் துபாயிலிருந்து ப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான FZ 547 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த போது சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள விசேட அதிதிகள் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை சுங்க வரலாற்றில் விமான நிலைய சிறப்பு விருந்தினர் வருகை முனையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரியளவிலான தங்க கடத்தல் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட அதிதிகள் முனையத்தில் தங்கத்தை கடத்துவதற்கு முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகருக்கு அறிவிப்பு
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் எடுத்து வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு நேற்று முன்தினமே சுங்க அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நேற்றுமுன்தினம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன வலியுறுத்தின.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இது தொடர்பில் உரையாற்றுகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் தங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக எந்த சிறப்புரிமைகளும் வழங்கப்படாது விசாரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவரின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாக சாடுகிறார்கள். எனவே உரிய விசாரணைகள் சுயாதீன முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்ட கருத்துடன் நாங்களும் உடன்படுகின்றோம். அலி சப்ரி ரஹீம் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான செயல்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எனவே அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சாடல்
பார்வையாளர் களரிக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அனுமதிக்காத நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு சபைக்குள் நுழைய் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடினார்.
அத்தோடு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகவே அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் கூறியிருந்தார்.
நேற்று சபைக்கு பிரசன்னம்
இந்நிலையில், நேற்றைய தினம் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பிரசன்னமாகியிருந்தார். அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவிநீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்.
வாக்கெடுப்பை நடத்துவதற்கான வாக்கெடுப்பு அழைப்பு மணி ஒலிக்கப்பட்டபோது சபைக்குள் பிரவேசித்தார்.கோர மணியின் சத்தம் நிறைவடைந்ததும் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மரிக்கார், சபாநாயகர் அவர்களே! தங்கம் கடத்திய எம்.பி, வாக்களிக்க வந்துள்ளார் என்றார். எனினும், அது ஒழுங்குப்பிரச்சினை இல்லையென கூறிய சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பின் போது, அலி சப்ரி ரஹீம் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தை சாடும் அலிசப்ரி
ஆபத்திலிருந்தபோது அரசாங்கம் என்னை பாதுகாக்கவில்லை என்று நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் குறித்த வாக்களிப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட தங்கம் எனக்குச் சொந்தமானதல்ல, அது எனது நண்பர் ஒருவருக்கு உரியது. ஆனால், என்மீதே குற்றம் சாட்டப்பட்டது. பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் தலைவர் ஜனகர ரத்னாயக்கவை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நான் எதிர்த்து வாக்களித்தேன். நான் நெருக்கடியில் இருந்தபோது, என்னை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவோ முன்வரவில்லை. அதன் காரணமாகவே எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்தேன் என்றார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூகமட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli