(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளுக்கும் எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் நேற்று 2 ஆவது நாளாகவும் குற்றச்சாட்டுக்கள் வாசித்துக் காட்டப்பட்டன.
இந்த விவகாரம் குறித்த வழக்கு இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
23270 குற்றச்சாட்டுக்கள் 24 பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நடவடிக்கைகள் கடந்த தவணையில் ஆரம்பிக்கப்பட்டது. அந் நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன.
நேற்று விஷேடமாக 8 இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளுடனான பிரதிவாதிகளின் தொடர்புகளை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் வாசித்து காட்டப்பட்டன.
அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதிவாதிகள், தாம் நிரபராதிகள் என அறிவித்தனர்.
இந் நிலையில் மேலதிக குற்றச்சாட்டுக்களை வாசித்து காட்டும் பணிகள் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டன.
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிசாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு, போகம்பறை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் 24பேரும் அழைத்து வரப்பட்டனர்.
பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி ஜி.கே. கருனாசேகர, சட்டத்தரணி வஸீமுல் அக்ரம், சட்டத்தரணி சுரங்க பெரேரா, சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ், சட்டத்தரணி அசார் முஸ்தபா, சட்டத்தரணி இம்தியாஸ் வஹாப், சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்க உள்ளிட்டோர் ஆஜராகினர்.
நேற்றைய தினம் இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.- Vidivelli