(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றமையால் இலங்கைக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டாவை வழங்குமாறு அரச ஹஜ் குழு சவூதி அரேபிய ஹஜ் அமைச்சைக் கோரியுள்ளது.
இலங்கைக்கு இவ்வருடத்திற்கான 3500 ஹஜ் கோட்டாவை ஏற்கனவே சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட 3500 ஹஜ் கோட்டாவும் தற்போது பூர்த்தியாகியுள்ளது. 3500 பேர் இதற்கான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இந்நிலையில் இச்செய்தி எழுதப்படும் வரையில் ஹஜ் கடமைக்காக மேலும் 235 பேர் முன்வந்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே 25ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தியவர்களும், பதிவுக்கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரிகளும் உள்ளடங்குகின்றனர். தற்போது ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்கள் ஏற்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட இவ்வருட ஹஜ் கட்டணம் குறைவாக உள்ளதால் இவ்வருட ஹஜ் கடமைக்காக பெரும் எண்ணிக்கையானோர் ஆர்வம் காட்டி வருவதாலே மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா சவூதியிடமிருந்து கோரியுள்ளோம் என அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் விளம்பரம் செய்யப்பட்ட ஹஜ் முகவர்களின் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஹஜ் கட்டணத்திற்கும் மேலதிகமாக சில முகவர்கள் கோருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திற்கும் மேலதிகமாக பணம் செலுத்த வேண்டாம். இவ்வாறு கோரப்பட்டால் அரச ஹஜ் குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
அத்தோடு ஹஜ் முகவர்கள் அரச ஹஜ் குழுவுக்கு கையளித்துள்ள யாத்திரிகர்களின் பெயர் பட்டியல் குறிப்பிட்டபடியே பேணப்பட வேண்டும். அதில் எந்த திருத்தங்களையும் செய்ய முடியாது. அவ்வாறு ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ள யாத்திரிகர்களின் பெயர் பட்டியலில் மாற்றங்கள் செய்தால் முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இவ்வருடம் 39 ஹஜ் முகவர்கள் தனியாகவும் கூட்டாக இணைந்தும் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.- Vidivelli