திருத்தக் குழுவின் சிபாரிசுகளை ஆராய முஸ்லிம் எம்.பி.க்கள் 24 இல் கூடுவர்
பெண்களின் கோரிக்கை குறித்து அவதானம் என்கிறார் பௌஸி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினர் முன்மொழிந்துள்ள சிபாரிசுகளை ஆராய்ந்து தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகியுள்ளனர். இதற்கென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளனர். இக்கலந்துரையாடலுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பெளஸி தலைமை வகிக்கவுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் ஆராயப்பட்டு ஷரீஆவுக்கு முரணற்ற வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அத்தோடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. உலமா சபையின் கருத்துகளையும் செவிமடுத்த பின்பே சட்டதிருத்தங்கள் இறுதி செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி ‘விடிவெள்ளிக்கு’ தெரிவித்தார்.
சட்டத்திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக கடந்த 10 ஆம் திகதி நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அழைத்திருந்தார். அத்தோடு காதிநீதிமன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பேரும் நாட்டின் பல பாகங்களிலிருந்து அன்றைய தினம் சமுகமளித்திருந்தனர். என்றாலும் அன்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி தலைமையில் ஒன்று கூடி ஆராய்ந்த பின்பு கலந்துரையாடலில் கலந்து கொள்வதாக அவர்கள் நீதியமைச்சரிடம் தெரிவித்திருந்தனர். இதற்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஒன்று கூடவுள்ளனர்.
முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் குழுவொன்றினை நியமித்திருந்தார். அக்குழுவின் சட்டத்திருத்த சிபாரிசுகளே நீதியமைச்சரிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
சட்டதிருத்தங்கள், பலதார மணம், முஸ்லிம் பெண்களை காதிநீதிபதிகளாக நியமித்தல் போன்ற விடயங்களிலே தற்போது கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இது தொடர்பில் ஏ.எச்.எம்.பெளஸி தலைமையிலான குழு தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளது.
முஸ்லிம் பெண்கள் தரப்பு பலதார மணத்துக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் பெண்களை காதிநீதிபதிகளாக நியமிக்கவேண்டுமெனவும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் தேவையான திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு முன்வைத்த சிபாரிசுகள் இன்றுவரை சவால்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டதிருத்த சிபாரிசுகள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடனும் கலந்துரையாடி வெகுவிரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்டத்திருத்தங்கள் தொடர்பில் அறிக்கையொன்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.- Vidivelli