நாட்டில் தொடராக இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் நாட்டின் எதிர்காலம் குறித்து பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளன.
களுத்துறை பிரதேசத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் ஹோட்டல் ஒன்றின் வெளிப்புறத்திலிருந்து நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறித்த மாணவி, தனது நண்பி ஒருவரால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு காமுகன் ஒருவனது வலையில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது தொடர்பான முழுமையான விசாரணைகள் முடிவுக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்றுதான் கம்பளை, கெலிஓயா பகுதியில் 22 வயதான முஸ்லிம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்த ஒன்றாகும். காலையில் தொழிலுக்காகச் சென்ற குறித்த யுவதி, போதைக்கு அடிமையான ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான மற்றொரு செய்தியே ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதாகும். குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறைக்குள் வைத்தும் வாகனத்திற்குள் வைத்தும் காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் இச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி சூம் இணைப்பின் வழியாக மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களது ஆடைகளை களையுமாறு கூறி அவற்றை வீடியோ பதிவு செய்தும் இந்த ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த வீடியோ பதிவுகளை கண்ணுற்ற ஆசிரியரின் மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் களுத்துறை பிரதேச பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
2020 ஜூலை முதல் 2022 ஜூலை வரை 17 சிறுவர் சிறுமியர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான அணியின் ஸ்தாபகர் மிலானி சல்பிடிகோரள தெரிவித்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இது மிகவும் பாரதூரமான எண்ணிக்கையாகும்.
இவ்வாறான சம்பவங்கள் நமது இளம் சமுதாயத்தின் பாதுகாப்பு குறித்த கவலையைத் தோற்றுவிப்பனவாக உள்ளன. ஹோட்டல் விவகாரத்தில் உயிரிழந்த சிறுமி தன்சல் நிகழ்வுக்குச் செல்வதாகக் கூறியே வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது நண்பி ஒருவரே பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். மாணவிகள் துஷ்பிரயோக விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர். கெலிஓயாவில் யுவதி கொல்லப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு சமூகத்தில் குற்றச் செயல்கள் மலிந்துள்ள நிலையில் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரது பாதுகாப்பு குறித்தும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும்.
போதைப் பொருள் பாவனை மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரிப்பு என்பனவும் இன்று இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக பிள்ளைகள் சமூக வலைத்தளங்கள் அதிகம் ஊடாகவே இலக்கு வைக்கப்படுகின்றனர். களுத்துறையில் உயிரிழந்த மாணவியை சந்தேக நபர் டிக் டொக் செயலி ஊடாகவே முதலில் தொடர்பு கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. களுத்துறையில் குறித்த ஆசிரியர் சிறுமிகளை சூம் செயலி ஊடாக தொடர்பு கொண்டே அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி தனது இச்சைக்கு இரையாக்கியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை வெறும் செய்தியாக கடந்து செல்லாது இவற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளின் கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தள பாவனை தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசிமாகும். வெளியில் செல்லும்போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். நமது பிள்ளைகளை நாமே பாதுகாக்க வேண்டும். அப்பொறுப்பை அரசாங்கம் செய்யும், பொலிசார் பார்த்துக் கொள்வார்கள் என நினைப்பது நமது மடமைத்தனமாகும்.– Vidivelli