அக்குறணை குண்டுப் புரளி: சாஜிதின் கைதின் பின்னால் இருந்த உண்மை என்ன?
எம்.எப்.அய்னா
நோன்புப் பெருநாளை அண்மித்து கண்டி அக்குறணை பகுதியும் அதனை தொடர்ந்து இலங்கையின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளும் ஒரு வகை அச்சத்தில் மூழ்கியிருந்தது.
இதனால் ரமழான் இறுதிக் கட்ட வணக்க வழிபாடுகளும் சில இடங்களில் பாதிக்கப்பட்டிருந்தன. அக்குறணை மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற தகவல் ஒன்றே அதற்கான காரணமானது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்த அந்த தகவல் தொடர்பில் பின்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணைப்புப் பிரிவின் பணிப்பாளரின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்று சி.ஐ.டி.யினரால் ஆரம்பிக்கப்பட்டது.
விசாரணையில் நடந்தது என்ன?
சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ள தகவல்களின் படி, கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 12:29 மணிக்கு ‘Secret Information About Bombing Attacks Tomorrow Night at Akurana’ என தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி முற்பகல் 11:21 மணிக்கு அந்த தகவல் மேலதிகமாக ‘ Dear 118 agents, I sent you a massage that Akurana’ town is being bombed before Muslim Avurudu. those who were to do that bomb attacked knew this matter. So they are changing their plan secretly. They are trying to do this in response to the Easter attack four years ago. They first choose Akurana’ to attack but now they are targeting a villages where majority of Muslims live. You can stop it if you try best, HAIL LUCIFER HAIL THE LIGHT ‘ எனத் தெரிவித்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் 118 எனும் அவசர அழைப்பு இலக்கத்தின் இணைய வழி இணைப்பான https://118.pubsec.gov.lk எனும் முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளன.
முதலில், அக்குறணைக்கும் பின்னர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் பாதுகாப்பை பலப்படுத்திய பொலிசாரும் அதிரடிப் படையினரும் தகவல் தொடர்பில் அனைத்து உளவுப் பிரிவுகளைக் கொண்டும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது குறித்த தகவலில் கூறப்பட்டதைப் போன்று தாக்குதலொன்றுக்கு வாய்ப்புக்கள் இல்லை என தெரிய வந்ததும், பொலிஸ் மா அதிபர் குறித்த விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்ததுடன், தகவல் வழங்கியவர் தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்தலாயினர்.
அதன்படி இவ்விசாரணைகள் சி.ஐ.டி.யின் கனிணி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக வலைத்தள பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.எம். ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. https://118.pubsec.gov.lk எனும் இணைய வழி தகவல் வழங்க முடியுமான முகவரிக்கு தகவல் வழங்கியவரை கண்டுபிடிக்க சி.ஐ.டி. சிறப்புக் குழு முன்னெடுத்த விசாரணைகளில் முதலில் அந்த முகவரியின் நிலை ஆராயப்பட்டது. அதன்படி https://118.pubsec.gov.lk எனும் தகவல் கட்டமைப்பு ICTA எனும் நிறுவனத்தின் சேர்வரில் Host செய்யப்பட்டுள்ளமையை சி.ஐ.டி.யினர் கண்டறிந்தனர். அதன்படி அந்த கட்டமைப்பின் உள் நுழைதல் முகவரி 43.224.126.135 எனவும் அக்கட்டமைப்புக்குள் குறித்த தகவலை வழங்க நுழைந்த தொலைபேசியின் இணைய நுழைவு முகவரி 10.250.4.251 எனவும் சி.ஐ.டி.யினர் கண்டறிந்தனர்.
அதன்படி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிடம் இருந்து பயனரின் தரவுகளை சி.ஐ.டி. அதிகாரிகள் சேகரித்தனர். அப்போது குறித்த தகவலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியவர் 076 09XXXXX எனும் தொலைபேசி இலக்கத்தையே அதற்காக பயன்படுத்தியுள்ளமையும், அது 2001XXXXXXXX எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய கசாவத்த, பட்டுகொடவை சேர்ந்த மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் எனவும் தெரியவந்துள்ளது.
இளம் மெளலவியான சாஜித்தை அதன்படியே சி.ஐ.டி. குழுவினர் அவரது வீட்டில் வைத்து, நோன்புப் பெருநாள் தினத்தின் அதிகாலை வேளையில் கைது செய்தனர்.
அதன்படி சாஜித்தின் ஐ போன் 8+ ரெட் ரக கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றி பரிசீலனை செய்தனர். அதன்போது அந்த தொலைபேசியிலிருந்தே தகவல் அனுப்பப்பட்டுள்ளதை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
குறிப்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என ஆரம்பிக்கும் அந்த இணைய தகவல் தளத்துக்கு பொலிஸ் இணையத்தளம் ஊடாக சென்றே நுழைந்துள்ளமையும் தொலைபேசியின் ஹிஸ்ட்ரியை பரிசீலித்தபோது பொலிசார் கண்டறிந்துள்ளனர். இது ஏப்ரல் 18 ஆம் திகதி நடந்துள்ளதுடன், ஏப்ரல் 20 ஆம் திகதி முகப்புத்தக கணக்கூடாக ‘ Akurana bombing’, ‘ Akurana’, ‘Akurana’ Alert’ என சாஜித் தகவல்களை அடிக்கடி தேடியுள்ளமையையும் சி.ஐ.டியினர் அவதானித்துள்ளனர்.
இதுதான் சாஜித்தின் கைதின் பின்னால் சி.ஐ.டி. செய்த விசாரணை நடவடிக்கையாகும்.
குற்றச்சாட்டு :
சாஜித்தை கைது செய்த பின்னர் சி.ஐ.டி.யினர் அவர் மீது தண்டனை சட்டக் கோவையின் 120,175 மற்றும் 485 ஆம் அத்தியாயங்களின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 ஆவது அத்தியாயத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதன்போது சாஜித்திடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்திருந்த சி.ஐ.டி.யினர் அதில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.
அதாவது சாஜித்தின் வாக்கு மூலத்தில், தனக்கு மூன்றாம் தரப்பொன்று வழங்கிய தகவலையே இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியதாக சாஜித் தமது விசாரணையில் குறிப்பிட்டதாக சி.ஐ.டி.யினரின் முதல் மேலதிக விசாரணை அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.
ஆம் அதன் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கின்றது. சாஜித்துக்கு குறித்த தகவலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க மூன்றாம் தரப்பொன்று அல்லது நபர் ஒருவர் அல்லது வலையமைப்பொன்று பாரிய அழுத்தம் பிரயோகித்துள்ளது என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
உண்மையில் இந்த ‘குண்டு வெடிப்பு புரளி’ தொடர்பிலான தகவல் அளிப்பு, ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நடந்திருந்தாலும், அதன் வரலாறு ஏப்ரல் முதல் வாரத்திலேயே ஆரம்பிக்கின்றது.
வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் :
அதாவது முகப்புத்தகத்தின் ஊடாக ‘வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ எனும் தலைப்பில் வந்த ஒரு விளம்பரத்திலிருந்து இந்த கதை ஆரம்பிக்கின்றது.
அதாவது எம்.ஜி.பி.பி. எனும் பெயரிலான அந்த முகவரியில் கூறப்பட்ட விடயங்களுக்கு அமைய, சாஜித்தும் அந்த இணைய கட்டமைப்பில் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் 1000 , 2000 என சிறிய தொகையை இட்டு, வீட்டிலிருந்தே இலாபம் ஈட்டலாம் எனும் எண்ணக்கருவுக்கு அமைய இலாபத்தை அடைய சாஜித் முயன்றுள்ளார்.
இவ்வாறு முகப்புத்தக விளம்பரம் ஊடாக இணைந்த சாஜித்துக்கு இணைய பக்கத்தில் பிரத்தியேக கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டு, அதில் சாஜித்துக்கான இலாபம், வரவு வைக்கப்படுவதைப்போன்று காட்டப்பட்டுள்ளது.
இது ஒரு மோசடியான நடவடிக்கை என்பதை அறியாத சாஜித், தனது வட்ஸ் அப் இலக்கத்துடன் அவ்வலையமைப்பிலிருந்து பேசிய ஒருவரிடம் வைப்புக்கள் தொடர்பில் விசாரித்த பின்னரேயே சிறிது சிறிதாக வைப்புக்களை செய்துள்ளார்.
தனது வைப்புக்களுக்கு இலாபம் இணைய வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டு வந்துள்ள நிலையில், சாஜித் அதனை உண்மை என நம்பியுள்ளார்.
5 வங்கிக் கணக்குகள் :
அதன் பிரதிபலன் தனது தந்தையாரின் வங்கிக் கணக்கில் இருந்த ஒரு தொகை பணத்தையும் கட்டம் கட்டமாக சாஜித் அந்த இணைய நடவடிக்கையில் முதலீடு செய்துள்ளார்.
இதற்காக சாஜித்துக்கு 5 பேரின் பெயரில் அடங்கிய வங்கிக் கணக்கிலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் வங்கியொன்றின் பூகொடை கிளையில் எஸ்.எம்.டி. பியூமி எனும் பெயரில் உள்ள 166020085288 எனும் இலக்கம், அதே வங்கியின் தண்டாவெளி கிளையில் உள்ள 164020042560 எனும் இலக்கம் கொண்ட கே.சோபிகா எனும் பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கும், அதே வங்கியின் புறக்கோட்டை கிளையில் உள்ள 250020129496 எனும் எப்.ஏ.எப். அஸ்ரா எனும் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலக்கத்துக்கும், அதே வங்கியின் கொட்டாவ கிளையில் மனீஷா வெதசிங்க எனும் பெயரில் உள்ள 098020328387 எனும் வங்கிக் கணக்குக்கும், மக்கள் வங்கியின் அளுத்கம கிளையில் உள்ள 084200100044497 யூ.கே. தருஷி நிசன்சலா எனும் வங்கிக் கணக்குக்கும் இந்த பணத் தொகை, வழங்கப்பட்ட அறிவுறுத்தல் பிரகாரம் சாஜித்தால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பணத்தை திருப்பி கேட்டதால் வந்த வினை :
இந்நிலையிலேயே, சாஜித்தின் தந்தை தனது வங்கிக் கணக்கில் பணம் குறைவடைவதை கண்டு, அது தொடர்பில் வங்கிக் கணக்கை கையாளும் மகனிடம் வினவியுள்ளார்.
இதனால் கலவரமடைந்த சாஜித், இணையம் ஊடாகவும், வட்ஸ் அப் ஊடாகவும் குறித்த வைப்புகளுக்காக தொடர்புகொண்ட இலக்கத்துக்கு அழைத்து, தனக்கு இலாபம் வேண்டாம் எனவும் தனது முதலீட்டை மட்டும் மீளத் தருமாறு கேட்டுள்ளார்.
எனினும் அதற்கு மறு புறத்தே உடனடியாக தர முடியாது என பதில் கிடைத்துள்ளதுடன், முதலீடு செய்த இலட்சக்கணக்கான ரூபாவை மீளப் பெற வேண்டுமாயின் தாம் சொல்வதைச் செய்யுமாறு சாஜித் வற்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் பிரகாரமே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட தகவல், அந்த இணைய முதலீட்டு மோசடிக் கும்பலால் தயாரிக்கப்பட்டு சாஜித்துக்கு அனுப்பப்பட்டு, 118 என ஆரம்பிக்கும் இணைய முகவரியும் வழங்கப்பட்டு அதற்கு அனுப்புமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாஜித் அதனை செய்தமையே அவரை கைது செய்யும் அளவுக்கு விடயத்தை பாரதூரமாக்கியது.
எனினும் சாஜித், குறித்த வங்கிக் கணக்கிலக்கம், தொலைபேசி இலக்கம் உள்ளிட்டவற்றை சி.ஐ.டி.யினருக்கு வழங்கியுள்ளபோதும் இதுவரை, அந்த குண்டுப் புரளி தகவலை தயாரித்தவர்களை சி.ஐ.டி. நெருங்கக்கூட இல்லை என்பது கவலையான உண்மையாகும்.
இந்நிலையில், சுமார் 16 நாட்கள் வரை விளக்கமறியலில் இருந்த சாஜித் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இணைய வழி மோசடி தொடர்பில் பொலிசுக்கு பிரத்தியேக முறைப்பாட்டினை செய்ய தயாராகி வருவதாகவும் அறிய முடிகின்றது.
நீதிமன்ற நடவடிக்கை :
இவ்வாறான பின்னணியிலேயே கண்டி -அக்குறணை, 6 ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்றும் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடக்கலாம் என்றும் தகவல் வழங்கியமைக்காக கைது செய்யப்பட்ட மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் எனும் சந்தேக நபருக்கு எதிரான பீ 90351/01/2023 எனும் இலக்கத்தின் கீழான வழக்கு கடந்த 2 ஆம் திகதி விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போதே சாஜித்தை பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“சந்தேக நபர் தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை பொது வெளியில் எங்கும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர் அதனை உரிய அதிகாரியான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடனேயே பகிர்ந்து கொண்டுள்ளார்.
பொறுப்புள்ள ஒரு குடிமகன் செய்ய வேண்டிய வேலையையே அவர் செய்துள்ளார். அவ்வாறான நிலையில், அவருக்கு எதிராக ஐ.சி.சி. பி.ஆர். எனும் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன் வைக்க முடியாது.
எனவே அந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரிக்கின்றது” என அறிவித்தே கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், சி.ஐ.டி.யின் ஆட்சேபனத்தை நிராகரித்து மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித்தை பிணையில் விடுவித்தார்.
பொய்யான தகவலை வழங்கியதன் ஊடாக, இனங்களுக்கிடையே முரண்பாட்டு நிலையை ஏற்படுத்த முயன்றமை தொடர்பில் குற்றம் சாட்டி, சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடகங்கள் தொடர்பிலான விசாரணையாளர்கள் சாஜித்தை கைது செய்திருந்த நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது சி.ஐ.டி.யின் சமூக வலைத்தள விவகார விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்தனர்.
சட்டத்தரணி ருஷ்தியின் வாதம் :
இந்நிலையில் விளக்கமறியலில் இருந்து சாஜித் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், வஸீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இதன் போது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் அது அடிப்படை அற்றது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.
குறித்த சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தை விளக்கிய சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அதன் கீழ் சாஜித் மீது குற்றம் சுமத்த முடியாது என குறிப்பிட்டார்.
டெனி எதிர் சிறிமல் வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி வாதங்களை முன் வைத்த சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டிலிருந்து சந்தேக நபரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார்.
அத்துடன் சந்தேக நபருக்கு, இணையம் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலை அவர் எந்த பொது வெளியிலும் பகிரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அதனை அவர் பாதுகாப்பு அமைச்சுக்கே அறிவித்ததாகவும், அவ்வாறு அறிவிக்காமல் இருந்து ஏதேனும் அசம்பாவிதம் இடம் பெற்றிருந்தால் தனது சேவை பெறுநரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க தவறியமைக்காக கைது செய்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தனக்கு கிடைத்த தகவல் உண்மையா? பொய்யா? என விசாரித்து தகவலை பாதுகாப்பு அமைச்சிடம் கூறும் அளவுக்கு உளவுத் துறையோ வேறு பாதுகாப்பு தரப்போ தனது சேவை பெறுநரின் கட்டுப்பாட்டில் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், பொது மக்கள் குழப்பம் அடையும் வகையில் அத்தகவல் பரவ பொலிஸாரின் நடவடிக்கையே காரணமானது என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தனக்கு அந்த தகவலை அளித்தவரின் தொலைபேசி இலக்கம், வங்கிக் கணக்கிலக்கம் உள்ளிட்டவற்றை இணைத்தே தனது சேவை பெறுநர் தகவல் அளித்திருந்த நிலையில், அத்தகவலை மையப்படுத்தி ஏன் இதுவரை அந்த நபர் அல்லது நபர்களை அடையாளம் காண சி.ஐ.டி.யினர் தவறியுள்ளனர் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார்.
இந்த விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு அப்பால் நகராமல் இருப்பது சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும், இந்த தகவலின் பின்னால் உள்ளவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து கண்டிப்பாக விசாரணை அவசியம் எனவும் அது குறித்த விசாரணை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வாதிட்டார்.
எனவே சாட்சியாளராக இருக்க வேண்டிய தனது சேவை பெறுநரை சிறை வைப்பது அபத்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இதற்கு பதிலளித்த சி.ஐ.டி. அதிகாரிகள் பிணையளிக்க கடும் ஆட்சேபனை வெளியிட்டனர். விசாரணை நிறைவு பெறவில்லை எனக் கூறி அவர்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.
குறித்த தகவலால் ஏற்பட்ட நிலைமைகள் பாரதூரமானது என அவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் இரு தரப்பு வாதங்கள், சம்பவம் தொடர்பிலான சந்தர்ப்ப விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரசன்ன அல்விஸ், டெனீ எதிர் சிறிமல், தயாநந்த எதிர் வீரசிங்க, உதய பிரபாத் கம்மன்பில எதிர் எம்.டி.சி.பி. குனதிலக உள்ளிட்ட 5 உயர் நீதிமன்ற தீர்க்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்களை ஆதாரமாக எடுத்த நீதிவான், பொலிசார் கூறுவதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை விளக்கமறியலில் வைக்கக் கூடாது என திறந்த மன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கை பொறுத்தவரை பிணை வழங்க நீதிவானுக்கு தடையாக இருப்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டே என சுட்டிக்காட்டிய நீதிவான், அக்குற்றச்சாட்டு எந்தளவு நியாயமற்றது என்பதை மேற் குறித்த வழக்குத் தீர்ப்புக்களுடன் ஒப்பீடு செய்து விளக்கினார்.
அதன்படி, பொறுப்புள்ள குடி மகனாக தனக்கு கிடைத்த தகவலை சந்தேக நபர் உரிய அதிகாரிக்கே அனுப்பியுள்ளமை தெளிவாவதாக நீதிவான் திறந்த மன்றில் கூறினார்.
அவ்வாறு பொறுப்புடன் செயற்பட்ட ஒருவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்வது, பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளிக்க அச்சப்படும் சூழலை உருவாக்கும் எனவும், அதனால் பொது மக்கள் குற்றம் ஒன்று நடப்பதை பார்த்துக் கொண்டு இருப்பார்களே தவிர தகவல் வழங்க முன் வர மாட்டார்கள் என சுட்டிக்காட்டினார்.
இங்கு சந்தேக நபர் மீது ஐ.சி.சி.பி.ஆர். பயன்படுத்தப்பட்டுள்ளமை அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான நோக்கத்துக்காக என்பது தெளிவாவதாக குறிப்பிட்ட நீதிவான் அக்குற்றச்சாட்டை நிராகரித்தார்.
அதன்படியே ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை முடியவில்லை என பொலிஸார் அறிவித்ததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க தீர்மானிப்பதாக அறிவித்த நீதிவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை ஒன்றில் விடுவித்து வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பாடம் :
உண்மையில் இன்று பரவலாக அனைவரும் இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நிலையில், வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம், முதலீட்டுக்கு அதிக இலாபம் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி வசனங்கள் ஊடாக இணையம் ஊடான கொடுக்கல், வாங்கல், வர்த்தக நடவடிக்கைகள் வலையமைப்பு ரீதியாக இடம் பெறுகின்றன. இவற்றில் எத்தனை நடவடிக்கைகள் சட்ட ரீதியானவை, உண்மையானவை என்பதை ஆராயாமலேயே பலரும் அவற்றுடன் தொடர்புபடுகின்றனர். அதன் விளைவு பலர் பல இலட்சங்கள் வரை இழக்கின்றனர்.
இவ்வாறான முறைப்பாடுகள் ஏராளம் சி.ஐ.டி.யில் பதிவாகியுள்ளன. பலர் இழந்த தொகையை வெளியே சொல்லாமல் விதியை நொந்து கொண்டு இருக்கின்றனர்.
சாஜித்தின் விவகாரத்திலும், நடந்தது அதுதான். குறித்த வலையமைப்பினர் பகிர்ந்த தகவல் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டதாக இருந்தமையால், அதில் சாஜித் கைதாகவேண்டி இருந்ததாகவே தெரிகின்றது..
எனவே இணைய வழி கொடுக்கல், வாங்கல்கள், முதலீடுகள் தொடர்பில் வெறுமனே இலாபத்தை மட்டும் பார்த்து செயற்படாமல் அதன் உண்மைத் தன்மை, சட்டத் தன்மைகளையும் ஆராய்ந்து செயற்படுவது நன்மை பயக்கும்.- Vidivelli