(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸியின் கட்சியினது உறுப்புரிமையை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த திங்கட்கிழமை கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான பிரேரணைக்கு ஆதரவளிப்பதில்லை என கட்சி தீர்மானித்திருந்த நிலையில் ஏ.எச்.எம்.பெளஸி தீர்மானத்தையும் மீறி ஆதரவாக வாக்களித்தமை காரணமாகவே அவரது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படவுள்ளது.
கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை கட்சி முன்னெடுத்துள்ளது. கட்சியின் செயற்குழு இவ்விவகாரத்தை ஒழுக்காற்று சபைக்கு பாரப்படுத்தியுள்ளது. விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.- Vidivelli