புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் முஸ்லிம்களின் பலத்தை சிதைக்கிறது
பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்கிறார் அமைச்சர் நஸீர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் அல்லது முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தைச் சிதைக்கும் வகையிலே அமைந்துள்ளது. இதில் சந்தேகம் நிலவுகிறது. பாரிய ஆபத்துக்கள் உள்ளன.
இவ்வாறாக முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை வெற்றிக்கொள்வதற்கு சமூக பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட வேண்டுமென சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சமகால சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை வெற்றி கொள்வதற்கு பொதுவான வரைபொன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெற்றி கொள்ள முடியாதென்பது நிரூபணமாகியுள்ளது.
சிறுபான்மை சமூகங்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆர்வமுடன் செயற்படுகிறார். அதனால் முஸ்லிம்களின் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறவும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபொன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. வடக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பறிபோன காணிகள் திட்டமிட்டு கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை மீளப்பெற
வேண்டியுள்ளது. இதற்கு அரசியல் தலைமைகள் பதில் சொல்லி ஆகவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் 4 பிரிவுகளிலே முஸ்லிம் சனத்தொகை பெரும்பான்மையாக உள்ளது. இச்செயலக பிரிவுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. இவையும் திணிக்கப்பட்டே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே நிலைமையே அம்பாறை, திருமலை மற்றும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நிலவுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான சமகால சவால்கள் தொடர்பில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது. அவசியம் முஸ்லிம் பிரதிநிதிகள் போதிய ஆவணங்களுடன் ஜனாதிபதியை சந்தித்து தீர்வு பெற்றுக்கொள்ளவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli