பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தோற்கடிக்க அனைத்து தரப்பும் ஒன்றுபட வேண்டும்
ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் விட மிக மோசமானதாக கருதப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களின் குரல்களை நசுக்கவே கொண்டு வரப்படவுள்ளது. இதனை எதிர்ப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை பிரதம ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று சர்வதேச ஊடக தினம். இத்தகைய சிறப்புமிக்க வரலாற்று நாளில், எதிர்க்கட்சிகளின் பல முக்கிய அரசியல் கட்சிகள் உங்களுடன் சமூக- பொருளாதார அரசியல் உரையாடலைத் தொடங்கியுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
குறிப்பாக நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய 3 தூண்கள் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகும். 4 ஆவது முக்கிய தூண் சுதந்திர ஊடகம். நீங்கள் ஆற்றிய வரலாற்றுப் பணியின் மதிப்பீடு இந்த ஊடகத் துறையை ஒன்றிணைத்து முற்போக்கான உரையாடல் கருத்துப் பரிமாற்றம் இந்த தருணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான சிந்தனைகளைக் கொண்டுள்ளன.கோட்பாடுகள் உள்ளன. ஆனால் இன்று தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களில் ஒன்றுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
உதாரணத்துக்கு, ஊடகக் கட்டுப்பாட்டிற்காக அரசாங்கம் இன்று தயாரிக்கும் ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தைக் குறிப்பிடலாம். அதன் மூலம் சுதந்திர ஊடகங்களுக்கான மரண அடியை எதிர்ப்பது பற்றி எமக்கு பொதுவான கருத்து உள்ளது. மேலும், தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதன் மூலம் 220 இலட்சம் மக்களையும் பயங்கரவாதிகளாகப் புரிந்துகொள்ளும் ஜனநாயக விரோத ஆணையை எதிர்ப்பது பற்றிய பொதுவான புரிதலும் எங்களுக்கு உள்ளது.
மேலும், சமீப காலமாக இந்த நாட்டில் நடந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பான எக்ஸ்பிரஸ் பேர்ள் நிகழ்விலும், ஒரு வங்குரோத்தான நாட்டின் அவ்வாறான மாபெரும் பேரழிவிலும் பணத்தை சுரண்டும் முயற்சியை முறியடிக்கவும் அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை முறியடிக்கவும் எதிர்க்கட்சியான நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இவை ஒரு சில மட்டுமே.
பொது விவகாரங்களில் பல விடயங்களில் நாங்கள் ஒரு இடத்திற்கு வந்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளின் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவாக, நாட்டிற்கு மதிப்பு சேர்க்கும் வகையில் உங்கள் அனைவருடனும் ஒரு முற்போக்கான உரையாடலில் ஈடுபடவுள்ளோம்.
இந்த முற்போக்கு உரையாடல் மூலம் நாடு மதிப்பு பெற்று உலகின் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 நாடாக உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli