(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து சமூகத்தை வழிநடாத்துவதற்கு ‘இலங்கையில் சமாதானத்தை மீள அடைதல் (Regain Peace Sri Lanka) எனும் அமைப்பு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏனைய சமூகங்களிலிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். சுமுகமான தீர்வுகளுக்கு வழிகாட்டப்படும் என இலங்கையில் சமாதானத்தை மீள அடைதல் எனும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
Regain Peace Sri Lanka எனும் அமைப்பின் வருடாந்த மாநாடு அண்மையில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வருடாந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே சப்ரி ஹலீம்தீன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இனங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சவாலுக்குள்ளாகியுள்ளது. எனவே மீண்டும் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது என்றார்.
இவ்வமைப்பு புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், துறைசார் நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள் என சுமார் 250 உறுப்பினர்களை உள்ளடங்கியுள்ளது. இவ்வமைப்பின் செயலாளராக விரிவுரையாளர் கலாநிதி ஷாமிலா தாவூத் பதவி வகிக்கிறார்.
ஒவ்வொரு துறைக்குமான ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு அக்குழுக்களில் குறிப்பிட்ட நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் பணிப்பாளர் சபையின் கூட்டம் இடம் பெறுகிறது.
இவ்வமைப்பு ஏற்கனவே கல்வி அபிவிருத்திக்கான அறிக்கையொன்றினை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli