நாம் அன்று தொடக்கம் இன்றுவரை என்றும் மக்களுடனேயே இருந்து வருகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் மக்கள் முன் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது தெரிவித்தாவது, நாம் ஒருபோதும் பதவிகளின் பின்னால் சென்றவர்கள் அல்ல. நாம் என்றும் மக்களுடனேயே இருந்து வருகிறோம். இது போன்ற நன்றிக்கடனுள்ள மக்களும் எம்முடனேயே இருந்து வருகிறார்கள். இதுதான் எமது பலமும் வெற்றியுமாகும். நாட்டில் இதற்கு முன்பிருந்த வரி அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றினை படிப்படியாகக் குறைந்த காலப்பகுதியினுள் குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். விசேடமாக எண்ணெய் விலையினையும் குறைத்தோம். இவை நாம் மக்களுக்காக பெற்றுக்கொடுத்த சலுகைகளாகும். நாம் நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளித்தோம். எமது நாட்டினை நாம் காப்பாற்ற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் செயற்பட முன்வர வேண்டும். நாம் சதிகாரர்கள் அல்லர் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உரையாற்றும் போது தெரிவித்ததாவது, இன்றுவரை எமது நாட்டில் பல்வேறு பிரதமர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வகையில் மஹிந்த ராஜபக் ஷ விசேடமான பிரதமராக வரலாற்றில் இடம் பிடிப்பார். நாட்டில் ஏற்பட்டிருந்த ஸ்திரமற்ற நிலையிருநது நாட்டை காப்பாற்றியவர். இன்னும் மீதமாகவுள்ள காலங்களை நாம் பொறுமையாக முன்னெடுத்து செல்வோம். எம்மோடுள்ள 16 மில்லியன் மக்களுக்கும் வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன இங்கு உரையாற்றும் போது தெரிவித்ததாவது, 1947 ஆம் ஆண்டிலிருந்து இன்று தங்காலைக்கு விசேடமான தினமாகும். ஏனென்றால் இது போன்றதொரு மக்கள் கூட்டம் என்றும் இருந்ததில்லை. எமது ஜனாதிபதி அன்றும் இன்றும் என்றும் மக்களின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். முழு நாட்டு மக்களும் இவரையே விரும்புகிறார்கள். எம்மை எதிர்நோக்கியுள்ள தேர்தல்களில் வெற்றி கொள்வதற்காக நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli