சூடானிலிருந்து ஐயாயிரத்திற்கும் அதிகமானோரை வெளியேற்றியது சவூதி
இதுவரை 31 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்
சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு வசித்துவரும் வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் சவூதி அரேபியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கமைய நேற்று முன்தினம் வரை 102 நாடுகளைச் சேர்ந்த 5629 பேர் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார். இவர்களில் 239 பேர் சவூதி பிரஜைகள் என்றும் 5390 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சவூதி அரேபிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சூடானில் தங்கியிருந்த 14 இலங்கையர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர். இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில், சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன், குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரண்டாவது குழுவில் 6 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 31 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சவூதி அரசாங்கத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.-Vidivelli