தெரிவுக்குழு தீர்வு தரும் வரையில் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமைக்கும் சபையில் கடும் எதிர்ப்பு

0 620

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டமைக்கு ஆளும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது, ஆகவே இதுகுறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு காணவேண்டும். அதுவரை எதிர்கட்சித தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் அறிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஆரமிக்கப்பட்ட வேளையில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை அடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் அதிக எண்ணிக்கையோ கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கபட வேண்டும் என்பது பாராளுமன்ற விதிமுறையாகும். அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் எம்மிடத்தில் இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவா பாராளுமன்றத்தில் உள்ளது? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் அரசாங்கத்தின் தலைவராக உள்ளார், அமைச்சரவையின் தலைவராகவும் அவேரே உள்ளார். மூன்று அமைச்சுக்களை தன்வசம் கொண்டுள்ளார். ஆகவே அரசாங்கதின் பிரதானியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் இருக்கும் நிலையில் அதே கட்சியின் இன்னொரு தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவது எவ்வாறு?  அதேபோல் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் அதுவும் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத கட்சியில் இணைந்துகொண்டால் ஒரு மாத காலத்தில் அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் இணைந்து கொண்டவருகள் பாராளுமன்ற அங்கத்துவத்தை பெறமுடியாது. பாராளுமன்ற விதிமுறைகளுக்கு இது முரணானது. ஆகவே இவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

ஆகவே, இந்த முரண்பாடுகள் குறித்து தெளிவை பெற்றுக்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.  அதன் மூலமாக தீர்வினை வழங்க வேண்டும். ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடாது. எமக்குப் பதவி வேண்டுமெனக் கேட்கவில்லை, ஆனால் எமக்கு பதில் வேண்டும். பாராளுமன்றம் தவறான வழியில் வழிநடத்தப்படக்கூடாது. இவ்வாறு தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, அதனை சரியென வாதிட்டவர்ககளுக்கு நீதிமன்றம் சரியான பதிலை வழங்கியுள்ளது. ஆகவே சரியான பதில் வழங்கப்படும் வரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித் பி.பெரேரா:-  தமிழ் தேசியக் கூட்டமைபின் உறுப்பினர் சுமந்திரன் முன்வைக்கும் கூற்றில் ஒரு உண்மைத்தன்மை உள்ளது. பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாத நபர்கள் பதவி ஏற்க முடியாது. இது நாளை மஹிந்த ராஜபக் ஷவிற்கும் நெருக்கடியை கொடுக்கலாம். ஆகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த :- 2015ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கமைய 6 கட்சிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு , ஐக்கிய தேசிய கட்சி , ஜே.வி.பி , தமிழ் தேசிய கூட்டமைப்பு,  ஶஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் பாராளுமன்றம் வந்தன. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டு அரசாங்கத்தை அமைத்தது. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது. எவ்வாறாயினும் ஶஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களாக யாரும் தெரிவு செய்யப்படவில்லை. நாங்கள் எல்லோரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களாகவே இருக்கின்றோம். இதன்படி சபாநாயகர் தீர்மானித்தப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும். சபாநாயகரின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும். அதேபோல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி எந்தக் கருத்தையும் சபாநாயகருக்கு அறியத்தரவில்லை தானே, ஆகவே எமது அங்கத்தவும் செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பியான உதய கம்மன்பில:-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி அரசாங்கத்தில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என தர்க்கங்களை முன்வைக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் டீ.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது காமினி திஸாநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார். அத்துடன் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அத்துடன் 2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இதன்படி இப்போதும் வழங்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியினரே நீங்கள் மற்றையவர்களின் விடயங்கள் தொடர்பாக தேடாது தமது பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய  தேசிய முன்னணியின்  உறுப்பினர் ரவூப் ஹகீம், முன்னாள் ஜனாதிபதியை இப்போது பாராளுமன்றத்தில் கௌரவ என அழைப்பதா அல்லது திரு என அழைப்பதாக என தெரியவில்லை. அதேபோல் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற அங்கத்துவம் அற்ற கட்சி என்ற நிலைமையும் இன்று உருவாகியுள்ளது. ஏற்கனவே உதய கம்மன்பில போன்ற சட்டத்தரணிகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியதின் மூலமே மஹிந்த ராஜபக் ஷ நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இதனை மஹிந்த ராஜபக் ஷ இப்போதாவது தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இந்தப் பிரச்சினைக்கு தெரிவுக்குழு அமைத்து தீர்வு காணப்பட வேண்டும். அதேபோல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரையும் அழைத்து தேர்தல் சட்டம் குறித்தும் ஆராந்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி தினேஷ் குணவர்தன:-

ஆளும் தரப்புக்கு அடுத்தப்படியாக இருக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இருப்பதாக சற்று முன்னர் சபாநாயகர் அறிவித்திருந்தார். இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த  ராஜபக் ஷவை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியாக இருப்பதாகவும் அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை அந்த கட்சிக்கு வழங்க முடியாது எனவும் சிலர் கூறுகின்றனர் அப்படியென்றால் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தபோது எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த  ராஜபக் ஷ பதவி வகித்தார். எவ்வாறாயினும் கட்சியின் செயலாளரின் கோரிக்கைகளுக்கமையவே தீர்மானங்களை எடுக்க முடியும். இதன்படி செயலாளரான மஹிந்த  அமரவீர எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த  ராஜபக் ஷவை நியமிக்குமாறு கோரியுள்ளார். இதன்படி எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவருக்கு வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த சபை முதல்வர் கிரியெல்ல:- சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டர். ஆனால் அப்போது சந்திரிக்கா குமாரதுங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. நன்றாக தேடிப்பாருங்கள் எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்:- இந்த விவகாரம் குறித்து நான் கவனம் செலுத்துகின்றேன். இந்து குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் ஒன்றினை அறிவிக்கின்றேன் என குறிப்பிட்டார்.
-Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.