(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம் மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என செய்திகள் பரவி வரும் நிலையில் கபீர் ஹாஷிம் அதனை மறுத்துள்ளார்.
எனினும், தான் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது குறித்து யோசித்துக்கொண்டிருப்பதாக ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
கபீர் ஹாஷிம் (எம்.பி.)
‘நான் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப்போகிறேன் என்று சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பிரசுரிக்கின்றன. நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. எவருக்கும் நினைத்த மாத்திரத்தில் ஒருவரிடம் போய்ச்சேர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்பு உள்ளது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி மக்கள் சார்பாக செயற்பட வேண்டியுள்ளது. இதுவே ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.
மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளிடமே இருக்கிறது. எங்களுக்கென்று ஓர் அரசியல் கொள்கையிருக்கிறது. நினைத்தவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது. ஒருவரிடம் போய்ச் சேரவும் முடியாது. கட்சி என்ற ரீதியில் நாம் கலந்துரையாடியே தீர்மானங்களை மேற்கொள்வோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் எப்போதோ கோரிக்கை விடுத்தோம். பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரினோம். ஆனால் அரசாங்கம் அன்று செவிசாய்க்கவில்லை. காலம் கடந்தே அரசாங்கத்துக்கு ஞானம் பிறந்தது. நாம் கூறியதை அரசாங்கம் அன்றே கேட்டிருந்தால் நாடு இந்த பாதாளத்தில் வீழ்ந்து அவதிப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது.
கட்சியில் அங்கம் பெற்றிருக்கும் நாம் கட்சியுடன் கலந்துரையாடுவோம். கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாகும் என்றார்.
ஏ.எச்.எம். பெளஸி (எம்.பி.)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அவர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அவருக்கு மக்கள் ஆதரவைத் தேடித்தந்துள்ளது. ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் மீட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இதுவரை தீர்மானமொன்று மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.
‘எனது தீர்மானம் தீவிர ஆராய்வுகளின் பின்பு, சாதக பாதகங்களை ஆராய்வதன்பின்பே மேற்கொள்ளப்படும். அது சமூகத்துக்கான சேவையினை அடிப்படையில் அமைந்திருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார். – Vidivelli