காலிமுகத்திடலில் பொலிஸாரின் அடாவடித்தனம் கவலையளிக்கிறது
நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காலி முகத்திடலில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் இந்நிகழ்வுக்கு பாதகம் விளைவித்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணை செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் பதில் தலைவர் ஹில்மி அஹமட் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஹில்மி அஹமட் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 9 ஆம் திகதி மாலை காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
2019.04.21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்கு பிரார்த்தனை புரிவதற்காகவும், ரமழான் நோன்பு திறக்கும் முகமாகவும் பல சமயக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்வதற்கும், முஸ்லிம்களின் இப்தாரை அனுபவிப்பதற்கும் நல்லிணக்க நோக்கோடு இவ்வழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்று அனைத்து மதங்களையும் சேர்ந்த 1200 இற்கு மேற்பட்ட மக்கள் காலி முகத்திடல் ஹோட்டலுக்கருகில் ஒன்று கூடியிருந்தனர்.
இப்தார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இது தொடர்பில் எழுத்து மூலம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அனுமதியும் பெற்றிருந்தனர். பொறுப்பதிகாரி வாய்மூலம் அனுமதி வழங்கியிருந்தார். ஏதும் பாதுகாப்பு தேவையென்றால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டியிருந்தார். அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியிருந்தார்.
பல்வேறு சமய மக்களின் இப்தார் புனித ஒன்று கூடல் என்பதால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படமாட்டாது. இது ஒரு நல்லிணக்க ஒன்றுகூடல் என ஏற்பாட்டாளர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் அன்று நோன்பு திறப்பதற்கு உணவு பரிமாறும் செயற்பாடுகள் இடம் பெற்ற வேளை சுமார் 4.45 மணியளவில் அவ்விடத்துக்கு கோட்டை பொலிஸார் வந்து இறங்கினார்கள். இப்தார் நிகழ்வினை கைவிடுமாறு பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டார்கள். ஏற்பாட்டாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்வில்கலந்து கொண்டிருந்த சிலரை அணுகிய பொலிஸார் கலிமாவை ஓதும் படி அவர்களை வற்புறுத்தினார்கள்.
இந்நிகழ்வு சர்வ மதத்தவர்களும் கலந்து கொண்டதாகும். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கலிமா தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்திருந்தாலும் கலிமா கூறும்படி பொலிஸாரால் வற்புறுத்த முடியாது. இது நியாயமுமில்லை. கலிமாவை கூறும்படி முஸ்லிமிடம் கூட வற்புறுத்தக்கூடாது.
இது பொலிஸாரின் அடாவடித்தனமாகும். அங்கு குழுமியிருந்த சர்வமத மக்களை அவமதிக்கும் செயலாகும். இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் பதிவுகளை உங்களுக்கு அனுப்பிவைக்க தயாராகவுள்ளோம்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு (பொலிஸாருக்கு) உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli