உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது
அமுல்படுத்த வேண்டாமென முஸ்லிம் தரப்பு பிரதமரிடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது. அதனால் தற்போது தயார் நிலையிலுள்ள மஹிந்த தேசப்பிரியவின் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா என்போர் பிரதமரும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருமான தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை நாடெங்கும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் அல்லது குறைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இதனை நாம் பிரதமரிடம் விளக்கியுள்ளோம். உள்ளூராட்சி மன்றங்களில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக உள்வாங்கப்படும் வகையில் எல்லை நிர்ணயம் அமைய வேண்டும். ஆனால் புதிய எல்லை நிர்ணயம் வேண்டுமென்றே சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் வகையில் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் 50 வீதத்தால் குறைப்பதற்காகவே புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 வீதத்தால் குறைப்பதைத் தவிர்த்து 1/3 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அதன் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளும்படியும் பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறோம்.
2/3 பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படும் வகையில் எல்லை நிர்ணயம் அமைந்தால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணலாம். அத்தோடு வட்டார மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்பு முறையிலன்றி பழைய தேர்தல் முறையின் கீழ் (விகிதாசாரமுறை) உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும் படியும் கோரியுள்ளோம்.
எல்லைநிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எல்லா சமூகங்களுக்கும் நியாயம் கிட்டும் வகையில் அமைய வேண்டும் என்றார்.
இதனிடையே, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் பல்வேறு குறைபாடுகள் நிலவியுள்ளமையை சுட்டிக்காட்டி ஆணைக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பிர் எஸ்.எம்.மரிக்கார் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சிறுபான்மை பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், இரட்டை பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli