நாட்டின் பிரதமராக நீங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதேவேளை நாட்டில் தலைத்தூக்கியுள்ள இனவாதம் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யும் பொறுப்பு உங்களுக்குள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம் என தேசிய சூறா சபை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக்மஹ்மூதின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சபாநாயகர் கருஜயசூரிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சியும், அக்கறையும், சுதந்திரமான நீதித்துறையும், எமது அரசியல் வரலாற்றில் நினைவுகூரக்கூடிய பதிவுகளாகவும் எங்களது அரசியல் கலாசாரத்தில் உண்மையான ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுதத்துவதற்கு உங்களது அரசாங்கத்துக்கு மேலுமொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது . மாற்றத்திற்காக 2015 ஆம் ஆண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஜனநாயக வாதிகள் ஒன்றிணைந்தார்கள். ஆனால் மாற்றங்கள் மிக மெதுவாகவே இடம் பெற்றுள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களில் 19 ஆவது சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் அரசியலில் தோன்றிய பதற்றமானநிலை இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்கள், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதிய நிகழ்வுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
உங்களது புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் அரசியலுக்கு அப்பால் நேர்மை, பக்குவம் மற்றும் தொலைநோக்கு கொண்டதாக அமையும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஊழலையும், இனவாதத்தையும் இல்லாமல் செய்வதற்கு உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுகளை நடாத்துகிறோம்.
அனைத்து சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து மீளக்கட்டியெழுப்புவதற்காக தேசிய சூறா கவுன்ஸில் செயற்படும். எதிர்கால சந்ததியினருக்காக, தாய் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli