ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம்கள் நாடெங்கும் புனித ரமழான் மாதத்தின் அருளை அனுபவித்துக்கொண்டிருந்த நிலையில் கிழக்கில், சம்மாந்துறையில் ஒரு துயரமான நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
சம்மாந்துறை செந்நெல் கிராமசேவை பிரிவிலுள்ள முனீர் பள்ளிவாசல் வளாகத்தினுள் பதிவாகியுள்ள இச்சம்பவத்தினால் சம்மாந்துறை பிரதேசம் துயரில் ஆழ்ந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்பு இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைகலப்பில் 65 வயதான மஹ்ரூப் வபாத்தாகியுள்ளார்.
இது ஒரு கொலையா? கைமோசக்கொலையா? அல்லது கைகலப்பின் போது வயதான மஹ்ரூப் கீழே விழுந்து வபாத்தானாரா? என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, பொலிஸாரின் விசாரணை அறிக்கை மற்றும் சி.சி.ரி.வி பதிவுகள் என்பனவே தீர்மானிக்கவேண்டும். அத்தோடு நேரில் கண்ட சாட்சிகளின் வாக்கு மூலங்களும் இதனைத் தீர்மானிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்வரை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்படவில்லை. சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தினையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வபாத்தானவரின் சகோதரர் ஒருவரையும் அவரது மூன்று மகன்மாரையும் கைது செய்துள்ளனர்.
தாக்கப்பட்டு காலமானார் எனக் கூறப்படும் நபர் ஒரு இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த துன்பகரமான சம்பவம் தொடர்பில் நாம் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் நிர்வாக செயலாளர் ஏ.எல்.நாசரை தொடர்பு கொண்டு வினவினோம்.அவர் சம்பவம் நடைபெற்றதற்கான பின்னணியை விளக்கினார்.
‘சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் 52 சிறிய பள்ளிவாசல்கள் இயங்கி வருகின்றன. கொவிட் 19 நோய்த் தொற்று காலத்தில் ஜும்ஆ தொழுகையில் நெரிசல் நிலைமையினைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஜும்ஆ பள்ளிவாசல்கள் அல்லாத ஏனைய பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகை நடத்தலாம் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 52 பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது. கொவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்ததன்பின்பு திணைக்களம் ஜும்ஆ பள்ளிவாசல்கள் தவிர்ந்த ஏனைய பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை நடாத்த முடியாது என அறிவித்தது. இதன்படி 52 பள்ளிவாசல்களில் 51 பள்ளிவாசல்கள் ஜும்ஆ தொழுகையை நிறுத்திக்கொண்டன.
ஆனால் முனீர் பள்ளிவாசல் மாத்திரம் ஜும்ஆ தொழுகையை நிறுத்தவில்லை. உலமா சபை, மஜ்லிஸில் சூரா என்பவற்றின் கோரிக்கையையும் முனீர் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வில்லை. ஜும்ஆ நடத்துவதென்றால் எழுத்து மூலம் கடிதம் ஒன்று தாருங்கள். திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றோம். அதற்கும் நிர்வாகம் உடன்படவில்லை. பேச்சுவார்த்தைகளிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் மூலம் முனீர் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவு மற்றும் நிதியுதவி நிறுத்தப்பட்டது.தொடர்ந்தும் இந்தத்தடை அமுலிலிருந்து வருகிறது.
இந்நிலையில் மூனீர் பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகத் தெரிவு நடாத்தப்பட வேண்டுமென சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையிடம் கோரிக்கை விடுத்தார்கள். முனீர் பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்று தெரிவு செய்யப்பட்டாலே 52 பள்ளிவாசலுக்குமான தலைமை பரிபாலன சபையின் நிர்வாகத் தெரிவையும் நடத்த முடியும் என்பதால் சம்மாந்துறை பள்ளிவாசலும் கோரிக்கைக்கு உடன்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடலே கடந்த வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்த தினமன்று முனீர் பள்ளிவாசலில் இடம் பெற்றது. கலந்துரையாடலில் முனீர் பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை தெரிவை ஞாயிற்றுக்கிழமை (9) நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெளியேறியபோதே பள்ளி வளாகத்தினுள் குறிப்பிட்ட கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
நிர்வாகத் தெரிவு இடம்பெறக்கூடாது என்று ஒரு சாராரும் இரு பிரிவாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போதே மஹ்ரூப் என்ற 65 வயதான நபர் காலமாகியுள்ளார். இச்சம்பவத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர் காலமானவரின் சகோதரரும் மற்றும் மூவருமாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் முனீர் பள்ளிவாசலின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இப்பள்ளிவாசலின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இப்பள்ளிவாசலின் நிர்வாக சபையின் பதவிக்காலம் ஏற்கனவே காலாவதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல்
‘சம்மாந்துறை முனீர் பள்ளிவாசல் சம்பவத்தில் ஒருவர் வபாத்தாகியிருப்பது கவலைக்குரியதாகும். இவ்விவகாரம் தொடர்பில் திணைக்களத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்கான கள உத்தியோகத்தர் மூலம் தகவல்கள் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பள்ளிவாசலிலிருந்து எந்தக்குற்றச்சாட்டும், முறைப்பாடுகளும் தெரிவிக்கப்படவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பிலான பொலிஸ் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை, வைத்திய அறிக்கை என்பன கிடைக்கப்பெற்றதன் பின்பு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் ஆலோசனையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிவாசல் நிர்வாகங்களில் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறான தாக்குதல் சம்ப
வங்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு தகுதியான, படித்த கெளரவமானவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றார்.
வக்பு சபையின் தலைவர்
இதேவேளை சம்மாந்துறை முனீர் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டம் உத்தியோகபூர்வமற்ற கூட்டமாகும். புதிய நிர்வாக சபை தெரிவு தொடர்பாக எவ்வித கூட்டமும் கூட்ட முடியாது. இது தொடர்பில் ஏற்பனவே பள்ளிவாசலுக்கு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது என வக்பு சபையின் தலைவர் மொஹிதீன் ஹுசைன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பள்ளிவாசல்களில் புதிய நிர்வாகத் தெரிவுகள் நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
சம்மாந்துறை செந்நெல் கிராம முனீர் பள்ளிவாசலில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
பள்ளிவாசல் பரிபாலன சபை
செயலாளர்
சம்பவத்தில் உயிர்துறந்த மஹ்ரூப்பும், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரும் ஒருதாய் பிள்ளைகள், ஒன்று விட்ட சகோதரர்கள் என சம்மாந்துறை பள்ளிவாசல் பரிபாலன சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.இஸ்ஸாக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் விடிவெள்ளிக்குத் தெரிவிக்கையில் ‘ உயிர் துறந்தவரும், சந்தேக நபரும் இருதய நோயாளிகள் எனக் கூறப்படுகிறது. பலியானவர் 4 இருதய அடைப்புகள் கொண்டிருந்தாகவும் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தவராகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இரு குடும்பங்களுக்கும் கடந்த 10 வருட காலமாக தனிப்பட்ட பிரச்சினையொன்று இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது என்றும் கூறினார்.
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்
பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தெரிவுக்கான விதிமுறைகள் தொடர்பில் வக்பு சட்டம் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட வேண்டும். நிர்வாகிகளாக புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், மார்க்கத்தை சரியாக பேணுபவர்களுமே நியமிக்கப்படவேண்டும். பணபலம், அரசியல்பலம் கொண்டவர்கள் நிராகரிக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு பிரதேச ஜமா அத்தார்களின் பொறுப்பாகும்.
உழ்ஹிய்யா பகிர்வில் பரிதாபகரமான ஒருவர் அதுவும் நிர்வாகிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வடு மறைவதற்கு முன்பு பள்ளிவாசல் வளாகத்தில் மீண்டும் ஓர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் புனிதம், பொறுமை, சாந்தி, சமாதானம் பேண வேண்டிய ரமழான் மாதத்தில் ஓர் உயிர் காவுகொள்ளப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
ஜும்ஆ தொழுகை விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை 52 பள்ளிவாசல்களில் 51 பள்ளிவாசல்கள் பின்பற்றியுள்ளன. ஆனால் ஒரேயொரு பள்ளிவாசல் மாத்திரம் அறிவுறுத்தல்களை மதியாது தன்னிச்சையாக செயற்பட்டு வந்துள்ளது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வக்புசபையும் பள்ளிவாசல் நிர்வாகங்கள், வக்பு சொத்துகள் தொடர்பில் இறுக்கமான விதிமுறைகளைப் பேணவேண்டும் இதனையே நாமும் வலியுறுத்துகின்றோம்.
ஜனாஸா நல்லடக்கம்
மூனீர் பள்ளிவாசல் கைகலப்பில் பலியான மஹ்ரூபினது ஜனாஸா நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் செந்நெல் கிராம முனீர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பலியானவரின் சகோதரரும் மற்றும் மூவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli