புதிய சட்டங்களும் பொலிசாரின் அத்துமீறல்களும்

0 343

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் சட்­டத்­தையும் மீறும் வகையில் அண்­மைக்­கா­ல­மாக பொலிசார் நடந்து கொள்­வ­தா­னது பலத்த விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. நாட்டு மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்க கட­மைப்­பட்ட பொலிசார், தமது அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்யும் வகையில் நடந்து கொள்­வ­தா­னது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பு காலி முகத்­தி­டலில் இடம்­பெற்ற சர்வ மத இப்தார் நிகழ்­வுக்கு வருகை தந்த முஸ்­லி­மல்­லா­த­வர்­களை கலிமா சொல்­லு­மாறு பொலிசார் வற்­பு­றுத்­தி­யமை பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. பொது இடங்­களில் ஒன்­று­கூ­டு­வ­தற்­கான உரிமை அர­சி­ய­ல­மைப்பில் மிகத் தெளி­வாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அதனை மறுக்கும் வகையில் பொலிசார் அரா­ஜ­க­மாக நடந்து கொண்­டமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அத்­துடன் நாட்டு மக்­க­ளையும் அவர்­க­ளது மத நம்­பிக்­கை­க­ளையும் அவ­ம­திப்­ப­து­மாகும்.

இச் சம்­பவம் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஜனா­தி­பதி, பொலிஸ் மா அதிபர் ஆகி­யோ­ரிடம் முறை­யிட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து சம்­பந்­தப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதே­போன்­றுதான், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் சஹ்ரான் ஹாசிமின் மைத்­து­னரும் அவ­ரது கர்ப்­பி­ணி­யான மனை­வியும் சில தினங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வமும் பொலி­சாரின் அரா­ஜக நட­வ­டிக்­கைக்கு தக்க சான்­றாக அமைந்­துள்­ளது.

ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு பல வரு­டங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பிணையில் வெளி­வந்­துள்ள குறித்த நபரை மீண்டும் பெரி­ய­தொரு தீவி­ர­வா­தியைக் கைது செய்­வது போன்று நள்­ளி­ரவில் அவர் தங்­கி­யி­ருந்த வீட்­டுக்குச் சென்று கைது செய்­துள்­ள­மை­யா­னது பொலிசார் தமது அதி­கா­ரங்­களை எந்­த­ளவு தூரம் துஷ்­பி­ர­யோகம் செய்­கி­றார்கள் என்­பதைத் தெளி­வு­ப­டுத்தி நிற்­கி­றது. நான்கு மாத கர்ப்பிணி­யான அவ­ரது மனைவி எந்­த­வித குற்­றமும் செய்­தி­ராத நிலையில், அவ­ரையும் கைது செய்து புனித ரமழான் மாதத்தில் விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ளதானது மனித உரிமை மீறலின் உச்­சக்­கட்­ட­மாகும்.

இச் சம்­பவம் தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­களும் மனித உரிமை ஆர்­வ­லர்­களும் நேற்­றைய தினம் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாட்டைப் பதிவு செய்­துள்­ளனர்.

இவ்­வாறு பொலி­சாரின் சட்­டத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்­கின்ற நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­மே­யுள்­ளன. ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, தனது அதி­கா­ரத்தைத் தக்க வைப்­ப­தற்­காக பொலி­ஸாரைப் பயன்­ப­டுத்தி தனக்கு விரோ­த­மா­ன­வர்­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்­காக புதிய புதிய சட்­டங்­களை இயற்றி வரு­கிறார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் பர­வ­லாக முன்­வைக்­கப்­படும் நிலையில், பொலிசார் இவ்­வாறு நடந்து கொள்­வ­தா­னது நாட்டின் எதிர்­காலம் பற்­றிய அச்­சத்தைத் தோற்­று­விப்­ப­தாக அமைந்­துள்­ளது.

உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது, ஏலவே அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தைப் பார்க்­கிலும் மிகக் கொடூ­ர­மா­னது என சகல தரப்­பி­னரும் ஒட்­டு­மொத்­த­மாக எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றனர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக ஒழிப்­ப­தாக சர்­வ­தேச சமூகத்திடம் வாக்குறுதியளித்துள்ள இலங்கை, அதனை விடவும் மிக மோசமான சட்டங்களை இயற்றி மென்மேலும் மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்க முற்படுவதானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஏலவே சர்வதேச அரங்கில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் எதிர்மறையான பதிவுகளே உள்ள நிலையில், அவற்றை மேலும் வலுப்படுத்துவதாகவே இந்தப் புதிய சட்டங்கள் அமைந்துள்ளன. இந்தப் போக்கு இலங்கையின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

இவ்வாறான சட்டங்கள் ஏலவே அதிகாரங்களைத் துஷ்­பி­ர­யோகம் செய்து வரும் பொலிசாருக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துவிடும். அதற்கு வழியேற்படுத்துவதாக ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.

இவ்வாறான பொலிஸ் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய ஜனாதிபதி, அதற்கு மாற்றமாக செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுவிடயத்தில் அவர் மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.