எஸ்.என்.எம்.சுஹைல்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலேயே காணி தொடர்பிலான அதிகமான சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக முப்படையினரின் அத்து மீறல்கள், தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வரும் அடாவடிகள், இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள், அரச நிர்வாகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகிறது. இதனால், அப்பாவிப் பொது ஜனங்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் புல்மோட்டை, பொன்மலைக்குடாவில் கற்பாறையிலான மலைப்பகுதியில் ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி பிக்கு களுடன் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவ முற்பட்டமையால் பிரதேசத்தில் களேபரம் ஏற்பட்டது.
புத்தர் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்போதே, ஆயுத முனையில் அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பௌத்த பிக்குகள், இலங்கையின் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் சிலர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதை அடுத்தே இவ்வாறு குழப்பமான நிலைமை ஏற்பட்டது.
பிக்கு ஒருவரின் சாரதி ஒருவர் இப்பகுதி விவசாயியின் காணி வேலியை தகர்த்து உள்ளே நுழைந்து நிலத்தைக் கைப்பற்றி, அங்கு புத்தர் சிலையை வைக்க முயன்றதை அடுத்து பிரதேசவாசிகள் ஆத்திரமடைந்து அங்கு திரண்டனர். அங்கு வந்த பிக்குகள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் அங்கு நின்ற அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினருடன் பிரதேச மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாதுகாப்பு அதிகாரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து எதிர்ப்பு தெரிவித்த மக்களை சுட்டுக்கொல்வதாக மிரட்டினார். இதனை அங்கிருந்தவர்கள் ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஜம்இய்யதுல் உலமா திருகோணமலை மாவட்ட கிளை செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.சாலிஹீன் இச் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், ஏற்கனவே அரிசிமலை பகுதியை ஆக்கிரமித்து விகாரை மற்றும் பன்சலை அமைத்தும் உள்ள பனாமுர தேரர் என்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரே பொன்மலைக்குடாவில் உள்ள மலைப்பகுதிக்கு(குன்று) வந்து அங்கு புத்தர் சிலையை நிறுவ முயன்றனர்.
எனினும் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பெரும் களேபரமே ஏற்பட்டது. இவ்வேளையில் பிக்குவுட னிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவரும் கைத் துப்பாக்கியை எடுத்து சுடப்போவதாக மக்களை எச்சரித்தனர்.
இந்தப் பிக்கு ஏற்கனவே திருகோணமலையில் – தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியான அரிசிமலையை பௌத்தமயமாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர். தற்போது அங்கே உள்ள விகாரையில் தங்கியுள்ள பிக்குவுக்கு அரசினால் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிக்குவிற்கு பாதுகாப்பாக இரண்டு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் ஆயுதங்களுடன் எந்நேரமும் உள்ளனர். இந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரே மக்களை சுட்டுக் கொல்வதாக துப்பாக்கியை காட்டி எச்சரித்தனர் எனக் கூறினார்.
இதேவேளை, பொன்மலைக்குடா மலைப் பகுதியில் எந்நேரமும் மீண்டும் புத்தர் சிலையை நிறுவ பிக்கு தலைமையிலான குழு முயற்சிக்கலாம் என்பதால் அந்தப் பகுதியில் பிரதேச மக்கள் திரண்டு நிற்கின்றனர்.
இதனிடையே, இவ்விவகாரம் நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சூடுபிடித்தது. திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சிலமாதங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை சமர்பித்திருந்தார். குறித்த வினா நேற்றுமுன்தினம் அமைச்சரிடம் கேட்பதற்கு எடுக்கப்பட்ட போதே பாராளுமன்றம் பரபரப்பானது.
திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்துக்கு சென்ற மதத்தலைவர்களுக்கு அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என ரவூப் ஹக்கீம், இம்ரான் மஹ்ரூப் சபையில் கேட்ட கேள்விக்கு சபையில் முறையான பதில் வழங்கப்படவில்லை.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இடையிட்டு கேள்வியொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் பெளத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை வைக்க முற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த மதகுருவுக்கு அமைச்சு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் அவர்கள் அங்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொது மக்களுக்கு துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியமை மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
அதேபோன்று தொல்பொருள் நடவடிக்கையின் போது எமது பிரதேசத்தில் காலாகாலமாக வாழ்ந்து வந்தவர்களின் வீடுகள், அவர்களின் விவசாய பூமிகள் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என வினவினார்.
இதற்கு பெளத்த விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தேடிப்பார்த்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன்.
அத்துடன் தொல்பொருள் நடவடிக்கையின் போது ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் தகவல் வழங்கினால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறுக்கிட்டு, திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்துக்கு சில மதத் தலைவர்கள் அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்றிருக்கின்றனர். இதன்போது அந்த பிரதேசத்தில் எதிர்ப்பு தெரிவித்த மக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தி இருக்கின்றனர். அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எந்த அடிப்படையில் மதத்தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்த இடத்துக்கு சென்றார்கள் என்பது தொடர்பில் நீங்கள் தேடிப்பார்ப்பீர்களா? எமக்கு அறிக்கை சமர்ப்பீர்களா ? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ‘‘அமைச்சு பாதுகாப்பு பிரிவு பெளத்த கலாசார அமைச்சுக்கு உட்பட்டது அல்ல. அந்த கேள்வியை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வையுங்கள்’’ என்றார்.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் இது குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பினர்.
தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளும் அத்துமீறல்களும் நீடித்து வருகின்றன. இது அம் மாவட்டத்தில் இனங்களுக்கிடையே தேவையற்ற முறுகலுக்கு வித்திடலாம்.இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் பெளத்த மதத்தின் பெயரால் சிறுபான்மையினரின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.–Vidivelli