எம்.எப்.அய்னா
‘பெரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நெருப்பு உஷ்ணத்தில் எனக்கு நினைவு திரும்பியது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்போது மகன் கதவருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தடவைகள் தலையை தூக்கினான்.
சிறிது நேரத்தில் நான் இருந்த அந்த அறையில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருப்பதை கண்டேன். அவரது உடைகள் சிறிது எரிந்திருந்தது. நான் யார் இருக்கின்றீர்கள் என தமிழில் கேட்டேன். 5 நிமிடங்களில் அந்த பெண்ணை காணவில்லை. தோற்றத்தில் அந்த பெண் உயரமானவள். அத்துடன் கொழுத்தவர். ரில்வானின் மனைவி மெலிந்தவர். சாரா, நப்னா, அப்ரின் ஆகியோரின் குரல்கள் ஒரே மாதிரியாக இருக்கும். நான் நினைக்கின்றேன் நின்றுகொண்டிருந்த அந்த பெண் சாரா.’
இது சாய்ந்தமருது – வெலிவேரியன் கிராம வீட்டுக்குள் நடந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உயிர் தப்பிய சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா விசாரணையாளர்களுக்கு வழங்கிய வாக்கு மூலங்களில் அடங்கியுள்ள ஒரு சிறு பகுதியாகும்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்தமருது வீட்டில் சாரா இருந்தார் என்பதற்கான ஒரே கண்கண்ட சாட்சியாளர் ஹாதியா தான். அதே போல அவரது வாக்கு மூலமே சாரா உயிரிழக்கவில்லை என்பதற்கான முக்கிய சாட்சியமும் கூட. ஆனால், அரச தரப்பு, ஹாதியாவின் வாக்கு மூலத்தில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வதுடன் (சாரா இருந்தமையை), அவர் தப்பியதை ஏற்க மறுக்கின்றனர்.
அதன் விளைவே, சாய்ந்தமருது சம்பவத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளில், சம்பவ இடத்தில் சாராவின் டி.என்.ஏ. வையும் இருக்கவில்லை என உறுதியாகி, அது ஹாதியாவின் வாக்கு மூலத்துடனும் ஒத்துப் போன பின்னணியில், 2 ஆம் 3 ஆம் டி.என்.ஏ. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை ஆகும்.
2 ஆவது டி.என்.ஏ. பரிசோதனைகளிலும் சாரா சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தமைக்கான எந்த சான்றுகளும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனைகளில் சாரா உயிரிழந்தமையை உறுதிப்படுத்தும் விதமாக அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி மாலை 6.40 மணிக்கு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றூடாக பொலிஸ் திணைக்களம் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அறிவித்தது.
சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த 3 ஆவது தடவையாகவும் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அது குறித்த பகுப்பாய்வுகளில், சாரா ஜெஸ்மினின் தாயாரான ராஜரத்னம் கவிதாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் , 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தின் வீடொன்றுக்குள் நடந்த வெடிப்பினை அடுத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் பலவற்றின் டி.என்.ஏ. மாதிரிகள், தாய் ஒருவருக்கும் பிள்ளைக்கும் இடையே காணப்படும் உயிரியல் தொடர்பினை உறுதிப்படுத்தும் சான்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட எலும்புத் துண்டுகளில் காணப்பட்ட டி.என்.ஏ. கூறுகளை வைத்து பார்க்கும் போது, ராஜரத்னம் கவிதா ( சாராவின் தாய்),அந்த எலும்புகளுக்கு சொந்தக்காரரின் தாயாக இருப்பதற்கு 99.9999 வீத வாய்ப்புள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதன்படி 2019 ஏப்ரல் 26 அன்று, சாய்ந்தமருது சம்பவத்தில் சாரா இறந்தமை உறுதியாகியுள்ளதாகவும், அது குறித்து நீதிமன்றுக்கு அறிவிக்க சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அடுத்துவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக டி.என்.ஏ. அறிக்கைகள் விசாரணையாளர்களால் நேரடியாக நீதிமன்றங்களுக்கே சமர்ப்பிக்கப்படும். ஊடகங்களுக்கு அது தொடர்பில் அறிவித்தல் வழங்கப்படுவது கிடையாது. சாராவின் முதல் இரு டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கைகள் கூட நேரடியாக நீதிமன்றத்துக்கே சமர்ப்பிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடந்து 4 வருடங்கள் நிறைவடையும் தினம் நெருங்கிக் கொண்டிருக்க, திடீரென சாரா உயிருடன் இல்லை என கூறுவதை, குண்டுத் தக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினரோ, சுயாதீனமாக பார்ப்போரோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முதல் டி.என்.ஏ. அறிக்கை பிரகாரமும், 2 ஆவது அறிக்கை பிரகாரமும் சாரா சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என தெளிவாக தெரிந்தும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக கண்கண்ட சாட்சியம் இருந்தும் 3 ஆவது டி.என்.ஏ. பரிசோதனைக்கு விசாரணையாளர்கள் சென்றது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
அதே போல, இந்த 3 டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஒரே நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டவை. முதல் அறிக்கையில் சந்தேகம் இருப்பின் 2,3 ஆவது டி.என்.ஏ. பரிசோதனைகளை வெவ்வேறு நிறுவனங்கள் ஊடாக செய்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவ்வாறு எதுவுமே நடக்காது, ஒரே நிறுவனத்தில், சாதாரண பரிசோதனை முறைகளின் கீழ் இந்த 3 டி.என்.ஏ. பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையையே அவதானிக்க முடிகின்றது.
இது பரீட்சை ஒன்றில் சித்தி எய்த தவறும் மாணவன் ஒருவன், சித்தி எய்தும் வரை அடுத்தடுத்து அதே பரீட்சைக்கு தோற்றுவதற்கு சமனாகும். அப்படியானால், சாரா உயிருடன் இல்லை என்பதை நிரூபிக்க யாரோ ஒருவருக்கு தேவை இருந்துள்ளது. அதன் பிரதிபலனே, டி.என்.ஏ. மற்றும் கண்கண்ட சாட்சியங்கள் இருக்கையில் இவ்வாறு சாரா தொடர்பில் அடுத்தடுத்து டி.என்.ஏ. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படைகளுடனான மோதலினிடையே குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தரப்பு அறிவித்தது.
இதன்போது அங்கு மொத்தமாக 19 பேர் இருந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. எனினும் சஹ்ரானின் மனைவியும் அவரது ஒரு குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டனர் ( வெடிப்பு நடக்கும் போது அங்கு இருந்தோர் தொடர்பிலும் ஹாதியாவின் சாட்சியமே கண்கண்ட ஒரே சாட்சியாகும்). எனினும் முன்னெடுக்கப்பட்ட ஸ்தல பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்ட உடற்பாகங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது, 16 சடலங்களே அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந் நிலையிலேயே அங்கிருந்த சாரா எனும் பயங்கரவாதி தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. முதல் இரு டி.என்.ஏ. பரிசோதனைகளிலும் சாரா இறந்தமையை உறுதி செய்ய முடியாமல் போன நிலையில், மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தற்போது சாராவின் மரணம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே சாரா, இறந்துவிட்டார் என பொலிஸ் திணைக்களம் கூறும் விடயத்தை ஏற்றுக்கொள்ள, பாதிக்கப்பட்ட தரப்பினர், அதாவது கத்தோலிக்க சமூகமும், முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட இந்த நாட்டில் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. இது குற்றவியல் விசாரணை தொடர்பில் பொது மக்களிடையே பாரிய சந்தேகங்களை தற்போது தோற்றுவித்துள்ளது. வழமையான நடவடிக்கைகளுக்கு அப்பால் சென்று முன்னெடுக்கப்பட்ட இந்த டி.என்.ஏ. பரிசோதனைகள் தொடர்பில் தற்போது மிகப் பெரும் சந்தேகம் உருவாகிவிட்டது.
அதன் வெளிப்பாடே, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் சிறில் காமினி அருட் தந்தை போன்றவர்கள் ஊடகங்கள் முன் பகிரங்கமாகவே இதனை விமர்சனம் செய்துள்ளனர். அதனைவிட சர்வதேச விசாரணையையும் அவர்கள் கோருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் சாராவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பெரும் உண்மையாகும்.
தற்கொலைக் குண்டுகளை தயாரித்தமை முதல், திட்டமிடல் நடவடிக்கை, அதன் பின்னரான விடயங்களில் சாரா மிக முக்கிய நபராக செயற்பட்டதாக சான்றுகள் உள்ளன. இதனால், சாரா இந்திய உளவுச் சேவையின் உறுப்பினரா ( டபள் ஏஜன்ட்) என்ற நியாயமான சந்தேகமும் இன்றுவரை தொடர்கின்றது.
சாரா உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் அறிந்திருந்த நபர் என்ற ரீதியில், சாராவின் சாட்சியம் உண்மைகளை வெளிப்படுத்த மிக முக்கியமானது.
எனவே சாரா உயிருடன் இருந்தால், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, பின்னணி உள்ளிட்ட எல்லா விடயங்களும் அம்பலமாகிவிடும். எனவே தான் சாரா உயிருடன் இல்லை எனக் கூறி விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகின்றது.– Vidivelli