ஏ.ஆர்.ஏ.பரீல்
பல தசாப்த காலமாக நாட்டில் அமுலில் இருந்துவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளது. இதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலமொன்றினை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் மும்முரமாக செயலில் இறங்கியுள்ளது.
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பினை முதன்மைப்படுத்தி புதிய சட்டம் ஒன்று உள்வாங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கமைவாகவே பயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். ஆனால் புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தாலும் அந்த தரப்பினர் யார் எனத் தெரிவிக்கவில்லை.
பயங்கரவாத எதிர்ப்பு என்ற தலைப்பிலான சட்டமூலம் 2023 மார்ச் 17ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்மொழியப்பட்ட சட்டமாக முன்வைக்கப்பட்டாலும் அத்தியாயம் 12இன் அடிப்படையில் உண்மையில் ஜனநாயக சோசலிஷ குடியரசின் மறுசீரமைப்பின் திருத்தத்திற்கு சமமானதாகும்.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கருத்தியல் கட்டமைப்பானது அரசியல் அமைப்பின் 82 (1) ஆவது பிரிவில் விபரிக்கப்பட்டுள்ள மறைமுகமான இரத்து அல்லது சேர்த்தல் அல்லது அதன் விளைவான திருத்தம் ஆகும்.
2023 ஆம் ஆண்டின் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரசியலமைப்பை மாற்றுவதற்கான நோக்கம் என்று குறிப்பிடப்படவில்லை. அத்தோடு அதன் தலைப்பு அரசியலமைப்பை இரத்துச் செய்வதற்கும் மாற்றுவதற்கும் எந்த நேரடி நோக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கருத்தியல் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையான சாரத்தையே மாற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பெறுகிறார்
இலங்கையில் அரசியலமைப்பு மக்களின் இறைமையின் அடிப்படைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பின் உறுப்புரை 3 பின்வருமாறு கூறுகிறது. ‘இலங்கைக் குடியரசில் இறைமை மக்களிடம் உள்ளது. மற்றும் அதன் பிரிக்க முடியாத இறைமை என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமையை உள்ளடக்கியது.
அத்தோடு சட்டப்பிரிவு 4(ஏ), 4(பி) மற்றும் 4(சி) யில் பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியனவற்றின் மூலம் மக்களின் இறைமையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி குறிப்பிட்டுள்ளது. 4(டி) மற்றும் 4(ஈ) யில் இலங்கை அரசியல் அமைப்பில் பொதிந்துள்ள இறையாண்மைக் கருத்தின் ஒரு அங்கமாக அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமைகள் உள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த நிலைப்பாட்டை மிக அடிப்படையான முறையில் மாற்றுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது என அரசியல் ஆய்வாளர் பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பரப்பப்பட்ட பல விதிகளின் ஊடாக ஜனாதிபதி நேரடியாக மக்களின் இறைமையைப் பயன்படுத்துதல் மற்றும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு உறுப்புகளைப் பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களில் மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைப் பெறுகிறார். பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை போன்றவை மக்களின் இறைமை அதிகாரத்தின் ஒரு பகுதியாக தங்கள் செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் வாக்குரிமை மற்றும் மக்களின் உரிமைகளைத் தாக்குவதற்கு கிட்டத்தட்ட வழிவகுக்கிறது.
பிரிவு 35(1) இன் கீழ் எந்தவொரு நபரும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் போது அவருடைய உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட ரீதியில் அவர் செய்த அல்லது செய்யத் தவறிய எதற்கும் அவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலோ வழக்குத் தொடரக்கூடாது.
பல்வேறு அமைச்சுக்கள், அரச அமைப்புகள் மற்றும் ஏனைய அதிகாரிகளால் தற்போது செயற்படுத்தப்படும் ஏராளமான செயற்பாடுகள் ஜனாதிபதியால் நேரடியாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்படுகின்றன. எந்தவொரு விடயத்தையும் செய்யத் தவறினால் அல்லது பிழையாக செய்தால் அதன் மூலம் எழக்கூடிய எந்தவொரு விடயத்திலும் தற்போது நீதிமன்றத்தை நாடுவதற்கான பிரஜையின் உரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது.
அதனால் கைது, தடுப்புக் காவல், விசாரணை மற்றும் பல விடயங்களை உள்ளடக்கிய மிக முக்கியமான விடயங்களில் நீதிமன்றத்தின் முன் இந்த விடயத்தினை எடுத்துக் கொள்வதற்கான உரிமையை பொதுமக்கள் இழக்க நேரிடும். இந்த செயல்களில் ஏதேனும் சட்டபூர்வமானது மற்றும் சட்ட விரோதமானது என்பது பொருத்தமற்ற விடயமாக இருக்கும்.
இது இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமல்லாமல் தாராளவாத ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதாக கூறும் குடியரசின் எந்தவொரு அரசியலமைப்பும் மீறும் அடிப்படை மீறலாகும். அதனால் இச்சட்டமூலம் சட்டமாக மாறியதும் ஜனநாயக கட்டமைப்பின் கீழ் பிரஜைகள் பெற்றிருக்கும் பாதுகாப்பை பெருமளவில் இழக்க நேரிடும்.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத சட்டமூலத்தின் மூலம் ஜனாதிபதி பெற்றுக் கொள்ளும் அதிகாரங்களின் விரிவாக்கம் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகளின் செயற்பாட்டை தானாகவே முடிவுக்குக் கொண்டுவரும்.
‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பல விடயங்களை ஜனாதிபதியே கையாள்வார். தேர்தலை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான உரிமை. அமைதியாக ஒன்றுகூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம், சட்டவிரோத கைது, சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைப்பது போன்ற விடயங்களில் இச்சட்ட மூலம் அமுலுக்கு வந்தால் தனி நபர் சுதந்திரம் இழக்கப்படும். இவ்விடயங்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் அனைத்து மேற்பார்வை செயற்பாடுகளும் ஜனாதிபதியால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கையின் குற்றவியல் நடைமுறைக் கோவையை முற்றிலுமாகப் புறக்கணித்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு இணையான குற்றவியல் நடைமுறை முறைமையை நிறுவ முயற்சிப்பதாகும். இவ்வாறு இலங்கையில் இரண்டு வகையான குற்றவியல் நடைமுறைகள் நிறுவப்படும். குற்றவியல் நடைமுறைக் கோவையைப் பின்பற்றி தங்கள் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடமிருந்து அனைத்து அதிகாரங்களும், பொதுமக்களுக்கான அனைத்துப் பாதுகாப்பும் இச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் அல்லது பொலிஸ்மா அதிபர் ஊடாக ஜனாதிபதியால் பறிக்கப்படும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாட்டில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் எதிர்அலைகளை உருவாக்கியுள்ளது. பலத்த கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரச தரப்பினைச் சேர்ந்தவர்கள் சிலர் இச்சட்ட மூலத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். பலர் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.
இந்நிலையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் அனைத்துத் தரப்பினரதும் கருத்துகளைப் பெற்று அவற்றுக்கு மதிப்பளித்து இயற்றப்படும். அவசரமாக நிறைவேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும். இதற்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படவுள்ளது. இச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் இச்சட்டமூலத்தின் சாதக, பாதகங்களை விமர்சித்துள்ளார்கள். இந்நிலையில் அரசியல் மற்றும் சிவில் தரப்பினரது கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மதிப்பளித்து புதிய சட்டம் இயற்றப்படும்.
இம்மாதம் 3ஆம் வாரத்தில் இடம்பெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது உத்தேச சட்டமூல வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இச்சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. முறையான வழிமுறைகளுக்கு அமையவே சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவசரமாக நிறைவேற்ற முயற்சி
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைக்கும் அடிப்படை உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாடு ஒன்றிலே இவ்வாறு கூறியுள்ளார்.
‘இச்சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவா? தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டா? அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்காகவே அரசாங்கம் இச்சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. நியாயமான தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போன்று நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றை சட்டம் ஒன்றின் ஊடாக அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். அரசாங்கம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் அதனை உதாசீனப்படுத்தியது என்றார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை அடுத்து அமுல்படுத்தப்பட்ட விதம் குறித்து நாம் அறிவோம். இச்சட்டத்தின் மூலம் உண்மையான குற்றவாளிகள் சிலரைத் தவிர்த்து பெரும் எண்ணிக்கையானோர் அப்பாவிகளே கைது செய்யப்பட்டனர். அவர்கள் வருடக்கணக்கில் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் அச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்துவிட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் அதனிலும் கொடுமையான சட்டமொன்றினை இயற்றிக்கொள்ளும் தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகள், அடிப்படை மனித உரிமைகள், அடக்குமுறை என்பனவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலே இப்புதிய சட்டமூலம் அமைந்துள்ளது.
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பி.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டை பொலிஸ் ராஜ்யமாக மாற்றும் ஆபத்து உள்ளது. புதிய சட்ட மூலம் விஷம் கலந்த ஐஸ்கிரீம் ஆக இருக்குமா? என்பதை கவனமாக ஆராய வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாவது, ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு சர்வதேச ஜனநாயக அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளியாகியதையடுத்தே இதற்குப் பதிலாக புதிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
தேர்தல் மூலம் மக்களின் கருத்து வெளிப்படுவதற்கான வழிகளை மூடுவதற்கு பல சூழ்ச்சிகள் நடைபெற்றுவரும் இன்றைய சூழலில் அரசியலமைப்பின் பிரகாரம் மக்களின் கருத்துகள் வெளிப்படும் ஏனைய வழிகளையும் மூடுவதற்கு முயற்சிப்பதாகவே இச்சட்ட மூலத்தின் ஷரத்துகள் அமைந்துள்ளன.
மேலும் அன்று முதல் இன்று வரை அரசாங்கம் பல தடவைகள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை குறுகிய அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுக் கூட்டங்கள் பேரணிகளைத் தடுக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தில் இவ்வதிகாரம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஷரத்து நாட்டை பொலிஸ் இராச்சியமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. இச்சட்டமூலம் ‘தேசிய பாதுகாப்பு தொடர்பாக’ என அழகிய வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டாலும் குறுகிய அரசியல் நோக்கில் ஜனநாயகத்தை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் விஷம் கலந்த ஐஸ்கிரீம் ஆக இருக்குமா என்பதை கவனமாக அலசி ஆராய வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி இராஜாங்க அமைச்சர்
ஜனநாயக போராட்டத்தை முடக்கும் ஏற்பாடுகள் காணப்படுமாயின் எவரும் சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியும் என்று நீதி இராஜாங்ன அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை முடக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். கடந்த வருடம், நாட்டில் ஜனநாயக போராட்டம் என்று கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டம் தானா? என்பதை ஆராய வேண்டும். ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளை முடக்கும் நோக்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு கிடையாது. அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.- Vidivelli