வக்பு சொத்துக்கள் பறிபோவதை தடுக்க ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கை அவசியம்
– பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
சமூக மார்க்க நிறுவனங்களும் அவற்றுக்கு சொந்தமான வளங்களும் சமூக இருப்பின் அத்திவாரங்களாகும். இந்த அத்திவாரங்களை ஆட்டம் காணச் செய்யும் அல்லது முற்றாக ஒழித்தழிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சமூகத்தின் எதிர்கால இருப்பையே நாசமாக்கிவிடும். எனவே தான் சமூக நிறுவனங்களுக்குரிய சொத்துக்களை பாதுகாப்பது எல்லோருடைய தலையாய கடமையாகும்.
சமூக -மார்க்க நிறுவனங்களுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் கையகப்படுத்த முயற்சிக்கின்ற செய்திகள் தற்போது அடிக்கடி வெளி வருகின்றன.
இது மிக மிக கவலைக்குரிய ஒன்றாகும். கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் அமைந்திருந்த கபூரியாவுக்கென வக்பு செய்யப்பட்ட மிகப் பெறுமதியான காணி தனிநபர் ஒருவரால் மிகப் பாரிய தொகைக்கு தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மகரகம பிரதேசத்தில் அமைந்துள்ள கபூரியா மத்ரஸாவுக்கென வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை தனிநபர் சொத்துக்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. அவை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் ஓர் அங்கமாக கபூரியாவில் கற்று வந்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மர்ஹூம் கபூர் ஹாஜியார் அவர்கள் மார்க்க நிறுவனம் ஒன்றை நடத்துவதற்காகவே குறித்த சொத்துக்களை வக்பு செய்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த காணியில் மார்க்க நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இது வக்பு செய்யப்பட்ட சொத்து என்பதன் அடிப்படையிலேயே அந்தக் காணியில் இன்னும் பல கட்டடங்களும் வளங்களும் சேர்க்கப்பட்டன. மர்ஹூம் கபூர் ஹாஜியாருடன் இன்னும் பல கொடையாளிகளின் பங்களிப்புடனேயே இந்த காணியில் குறித்த நிறுவனம் கட்டி வளர்க்கப்பட்டது.
அத்தோடு இந்த நிறுவனத்தை கொண்டு நடத்துவதற்கு ஏராளமான தொகை செலவு செய்யப்பட்டும் இருக்கிறது.
ஆக தற்போதுள்ள கபூரியா அரபுக் கல்லூரி என்பது வக்பு செய்யப்பட்ட காணி மாத்திரம் அல்ல. வெறும் ஓரிரு கட்டிடத்துடன் வெறும் கட்டாந்தரையாக இருந்த நிலப்பரப்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உதவிகளினால் தான் பெரும் பகுதி வளர்ச்சி உருவாக்கப்பட்டது. எனவே, கபூரியா என்பது குடும்ப சொத்தல்ல, சமூகத்தின் சொத்து என்பதை சம்பந்தப்பட்ட வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனம் சிதைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது.
அதேபோல இன்னும் சில பொது நிறுவனங்களுக்கு சொந்தமான வக்பு சொத்துக்களையும் தனிநபர் சொத்துக்களாக மாற்றுகிற முயற்சிகள் பற்றியும் கேள்விப்படுகிறோம்.
உதாரணமாக கல்எலிய மகளிர் அரபுக் கல்லூரிக்கு வெளியே ‘இது ஒரு தனியார் சொத்து. உட்பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தல் தொங்கவிடப்பட்டுள்ளது. இதுவும் அந்த சொத்துக்களை தனிப்பட்ட நபர்கள் கையகப்படுத்துவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
இது போன்ற முஸ்லிம் நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை சட்டபூர்வமாக பாதுகாப்பதற்காகவே இந்த நாட்டில் வக்பு சபை என்ற நிறுவனமும் அதற்கேயுரிய பிரத்தியேகமான சட்டங்களும் இருக்கின்றன.
வக்பு சபையானது தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வக்பு சொத்துக்களை பாதுகாப்பதில் முன்னிற்க வேண்டும்.
அதேபோல, வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் கையகப்படுத்தும் இந்தப் போக்கு தொடர்வதை அனுமதிக்காது, தடுத்து நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த உடனடி முயற்சிகளை மார்க்க -சமூக நிறுவனங்களும் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் நமது பெறுமதி மிக்க சமூக நிறுவனங்களையும் அவற்றை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட வக்பு ஏற்பாடுகளையும் இழந்து விட்டு கைசேதப்படுகிற ஒரு சமூகமாக நாம் மாறி விடுவோம்.
ஏற்கனவே புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பலரும் இது தொடர்பில் சில பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சமூக நிறுவனங்களையும் அதற்கு அத்திவாரமாக திகழும் வக்பு செய்யப்பட்ட வளங்களையும் பாதுகாப்பதற்கு எல்லோரும் முன் நிற்க வேண்டும்.
இது நம் எல்லோருடைய சமூக்க் கடமை மாத்திரமன்றி மார்க்க கடமையும் ஆகும்.- Vidivelli