உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: ஹாதியாவுக்கு பிணை
நான்காண்டுகள் தடுத்து வைக்கப்பட்டதை விஷேட காரணியாக ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் ட்ரொக்ஸி நேற்று அனுமதி வழங்கினார்.
25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மூன்று காரணங்களின் அடிப்படைகளில் ஹாதியாவுக்கு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதிபதி இதன்போது மன்றில் அறிவித்தார்.
ஹாதியாவின் சட்டத்தரணிகள் பிணைக் கோரிக்கையின் போது அவர் நீண்ட காலமாக ( 3 வருடங்களும் 11மாதங்களும்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தை விசேட காரணியாகக் குறிப்பிட்டிருந்தனர். இந்த விடயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதன்படி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனைகளை புறந்தள்ளி, பிணை வழங்கும் தீர்மானத்தை எடுத்ததாக நீதிபதி அறிவித்தார்.
அதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் பிணை வழங்குவதற்காக அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விடயங்களையும் இந்த வழக்கில் பிணை தொடர்பான தீர்மானத்திற்கு வருவதற்கு ஓர் உசாத்துணையாக எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், சர்வதேச மனித உரிமை நிலைவரங்கள் மற்றும் தனி மனித உரிமை சுதந்திரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தே பிணை தொடர்பிலான இறுதித் தீர்மானத்திற்கு வந்ததாக திறந்த நீதிமன்றில் நீதிபதி அறிவித்தார்.
நேற்றைய தினம் வழங்கு விசாரணைகளின் முன்விளக்க மாநாடு நிறைவு செய்யப்பட்டு முதலாவது சாட்சி விசாரணை பதிவு செய்யப்பட்டது. இதன்போது சாய்ந்தமருது குண்டு வெடிப்பின்போது ஹாதியா மற்றும் அவரது மகள் ஆகியோரை மீட்ட இராணுவ அதிகாரியான மேஜர் சுதுசிங்க சாட்சியமளித்தார். அவருடனான குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அதனை இடைநிறுத்தி நீதிபதி பிணை வழங்கும் தீர்மானத்தை அறிவித்தார்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதி லாபிரும் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ், வீ. அர்சாத் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.
மேலதிக சாட்சி விசாரணைகள் மே 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக ), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli