(ஏ.ஆர்.ஏ.பரீல்)
92 வருட கால வரலாற்றினைக் கொண்ட வக்பு சொத்தான மஹரகம கபூரியா அரபுக்கல்லூரி மாணவர்களை விடுதியிலிருந்தும் வெளியேற்றிவிட்டு கல்லூரியை மூடுவதற்கு கல்லூரியின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் வக்பு சபையின் தலைவருக்கும் முறைப்பாடு செய்துள்ளது.
இம்முயற்சியின் முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கபூரியா அரபுக்கல்லூரி மற்றும் மாணவர் விடுதிக்கான மின் இணைப்பு கல்லூரி நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் வேண்டுகோளின்பேரில் துண்டிக்கப்பட்டதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாட் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதேவேளை கல்லூரியின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தீர்மானத்தின்படியே மின்விநியோக துண்டிப்புக்கு மின் விநியோக நிறுவனத்திடம் (LECO) கோரிக்கை விடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரியின் மின்கட்டணம் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மின்விநியோக துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பழைய மாணவர் சங்கம் நுகேகொடை மின் விநியோக நிறுவன (LECO) காரியாலயத்தைத் தொடர்பு கொண்டு வினவியபோது கல்லூரி நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டதாகவும் ஐ.எல்.டில்சாத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதனையடுத்து மாணவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் இரவினைக்கடத்தியதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் மின் துண்டிப்பு காரணமாக நீர்விநியோகமும் தடைப்பட்டதாகவும் அவர்கூறினார்.
மின்துண்டிப்பு தொடர்பில் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி தலையிட்டு மின்விநியோகத்தை கடந்த சனிக்கிழமை காலை 10 மணிமுதல் பெற்றுக்கொடுத்துள்ளார். இதேவேளை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல் மீண்டும் மின் விநியோக நிறுவனத்தினால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தச் செய்தி எழுதப்படும்வரை (புதன்கிழமை) மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது.
நுகேகொட LECO நிறுவனத்திடம் மின்சார விநியோகத்தை தடைசெய்யக்கோரி கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர் சபை விடுத்த கோரிக்கை கடிதத்தின் பிரதியொன்றினை கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கோரிய போதும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக டில்சாட் தெரிவித்தார். கல்லூரியின் மின்பட்டியல் ஆரம்பத்தில் கல்லூரி அதிபரின் பெயரிலே இருந்துள்ளது. நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் பெயருக்கு பட்டியலை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் கல்லூரியின் முறைப்பாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்லூரி தனியார் நிறுவனம் என்பதால் ஏற்க மறுத்ததாகவும் டில்சாட் தெரிவித்தார்.
கல்லூரியின் விடுதியில் 68 மாணவர்கள் தங்கியிருந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவர்களுக்கு வருடாந்த பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையிலே மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என டில்சாட் தெரிவித்தார்.
வக்பு சபை தனது இன்றைய (வியாழக்கிழமை) அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. வக்பு சொத்தான கபூரியா அரபுக்கல்லூரி தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வக்பு ட்ரிபியனல் என்பனவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கபூரியாவின் நிர்வாகத்தை பழைய மாணவர்க சங்கம் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாக நம்பிக்கை பொறுப்பாளர் சபை குற்றம் சுமத்திவருவது அடிப்படையற்றது. மாணவர்களின் நலனும் வக்பு சொத்துமே எங்களது இலக்கு என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாத் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli