சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும் இலங்கை வங்குரோத்து நிலைக்கே செல்லும்
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் சுட்டிக்காட்டு
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்ள கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை வெற்றிகொண்டுவிட்டோம் என பெருமை கொள்ள முடியாது. ஏனெனில், முறைமை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாத காரணத்தினால் உலகில் பெரும்பாலான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொண்டதன் பின்னரும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. இலங்கையும் அவ்வாறான நிலையை நோக்கிச் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கி அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை.
இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குனரான சீனா கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆகவே சீன கூட்டரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எரிபொருளின் விலை ,மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வரி வீதமும்,வட்டி வீதமும் பன்மடங்கு அதிகிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்த அனைத்து தீர்மானங்களுக்கும் நாட்டு மக்கள் பலியாகியாகியுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களை பணயமாக கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதா, இல்லை. அரசாங்கம் ஆரம்பத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் செயற்படுகிறது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையும், அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்களும் குறைக்கப்படவில்லை.
அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஊழல் மோசடிக்கு எதிரான சட்டமூலத்தை அரசாங்கம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மாறாக அரசாங்கம் வழமை போன்று முறையற்ற வகையில் செயற்படுகிறது.
பாராளுமன்றத்தின் சிறப்புக் குழுக்களுக்கு எதிர்க்கட்சிகள் நியமிக்கப்பட வேண்டும் என 2015 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு யோசனையை பாராளுமன்றத்திற்கு முன்வைத்து அதனை நிறைவேற்றினார். ஆனால் அவர் தற்போது அந்த முறைமையை முழுமையாக மீறி ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்படுகிறார்.
பாராளுமன்றத்தின் சிறப்பு குழுக்களான கோப் ,கோபா மற்றும் அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுக்களின் தலைவர் பதவிகள் ஆளும் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறான நிலையில் எவ்வாறு தவறுகள் சுட்டிக்காட்டப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை வெற்றிகொண்டு விட்டோம் என பெருமை கொள்ள முடியாது, ஏனெனில் அரசாங்கம் தனது முறைமை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாத காரணத்தினால் உலகில் பெரும்பாலான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொண்டதன் பின்னரும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. இலங்கையும் அவ்வாறான நிலை நோக்கிச் செல்கிறதா?
பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரம் தீர்வு காண முடியும், நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என பொது ஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் வெட்கமில்லாமல் கருத்துரைக்கிறார். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதற்கு பொதுஜன பெரமுனவும், அதன் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.- Vidivelli