காலி முகத்திடலை மையப்படுத்தி ‘அரகலய’ எனும் பெயரில் நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற போராட்டக் காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.எஸ். ஆர். எனும் சமூகம் மதற்றும் மத விவகாரத்துக்கான மையத்தினால் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தலைமையிலான ஆய்வுக் குழு முன்னெடுத்த புலனாய்வில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 10 மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆய்வில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள், நம்பிக்கையான மூலங்களின் ஊடாக கிடைத்த தகவல்கள் மற்றும் தனி நபர் நேர்காணல்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையப்படுத்தி இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 மார்ச் 31 ஆம் திகதி, மிரிஹானையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இல்லம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முதல் 2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, செயலகத்தை கைப்பற்றிய போராட்டம், அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் நடாத்தப்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்த பெரும்பாலும் சுமார் 20 வருடங்கள் வரை பழைய கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 10 வருடங்களில் இலங்கை சுமார் 45 ஆயிரம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்துள்ளதுடன் அதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்த செலவு 162,101,131.66 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் 8 ஆயிரம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 2022 மார்ச் 31 முதல் 2022 ஜூலை 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 6000 இற்கும் அதிகமான கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இக்காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளின் பெறுமதி 26706578.17 ரூபா என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, இலங்கை கடந்த 2012, 2017, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்துள்ளதுடன் பல சந்தர்ப்பங்களில், கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய முன்னர் அதன் மாதிரிகள் கூட பரீட்சிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள், காலாவதியானவை என ஆய்வு கூடம் ஊடாக அறிக்கை இதுவரை பெறப்படாத போதும், வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் காணப்பட்ட உற்பத்தி திகதிகளுடன் ஓப்பீடு செய்யும் போது அவை காலவதியானவை என உறுதிப்படுத்த முடியுமாக இருந்ததாக ஆய்வுக் குழுவினர் குறிப்பிட்டனர். குறிப்பாக கண்ணீர் புகைக் குண்டு ஒன்றின் ஆயுட் காலம் 5 வருடங்கள் என்ற ரீதியிலேயே இந்த முடிவுக்கு ஆய்வுக் குழுவினர் வந்துள்ளனர்.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டங்களிடையே 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள பின்னணியில், காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் பிரயோகம் தொடர்பில் பாரிய அதிர்ச்சி உருவாகியுள்ளது.
குறிப்பாக இதுவரை பொலிசார் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள தரவுகளுக்கு அமைய, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு, கல்கிசை, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட 10 பொலிஸ் வலயங்களுக்கு, கடந்த 2012, 2017 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளே விநியோகிக்கப்பட்டுள்ளமையும் அவையே அந்த வலயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.எஸ். ஆர். நிறுவனத்தின் தலைவர் அருட் தந்தை ரொஹான் சில்வா, சட்டத்தரணி சுரேன் டி பெரேரா, சட்டத்தரணி மனுஷிகா குரே, மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்ணான்டோ, ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பாத்திமா ரஸ்மா உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli