ஏ.ஆர்.ஏ. பரீல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படுமா? இன்றேல் பிற்போடப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் வலுத்து வந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் நம்பிக்கை ஒளியை சுடர்விடச் செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கும் செயற்பாட்டுக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கே இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் மத்தியிலும் அரசியற் கட்சிகள் மத்தியிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக்க டி சில்வா மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்திருந்த மனு மீதான பரிசீலனையின் போதே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இதே வேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கும் நிதிவிடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் மற்றுமொரு இடைக்கால தடையுத்தரவினையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மனுமீதான விசாரணையை எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்கான
அரசாங்கத்தின் சூழ்ச்சி
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சூழ்ச்சி சிங்கள ஊடகமொன்று தகவல் அறியும் சட்டம் ஊடாக (RTI) பெற்றுக்கொண்ட தகவல்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் மீள அறிவிக்கப்படும்வரை வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றுநிருபமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இச்சுற்று நிருபம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சுற்றுநிருபம் அமைச்சரவைத் தீர்மானத்தின் படியே வெளியிடப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இந்த விபரங்களை சிங்கள ஊடகமொன்று பெற்றுக்கொண்டுள்ளது.
மீள அறிவிக்கப்படும் வரை கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவை உத்தரவு பிறப்பிக்க வில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதே உண்மையாகும்.
இவ்வாறான தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தும் உண்மைக்குப் புறம்பானது என உறுதியாகியுள்ளது.
அமைச்சரவை அலுவலகம் அமைச்சின் செயலாளருக்கு 23/எம்.ஐ.எஸ்.சி (001) இலக்கத்தின் கீழ் அனுப்பியுள்ள அமைச்சரவையின் தீர்மானத்தில், மீள அறிவிக்கப்படும்வரை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அபேட்சகர்களிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்தோடு தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து அரசுக்கு அறிவித்ததன் பின்பு தேர்தல் தொடர்பில் தேவையான நிதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தும்படி குறிப்பிட்டு மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமைக்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியதற்கான எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் இல்லை என பொது நிர்வாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் 2023.01.10 ஆம் திகதிய தீர்மானத்துக்கு அமைய செயற்பட்டதனாலே மன்னிப்பு கேட்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2023.01.13 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, குறிப்பிட்ட கடிதம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவேண்டிய தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த ஜனவரி 23 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தல் திகதி அறிவிப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் செலவுகளுக்கான நிதிவிடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கான புதிய திகதியை கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதற்கமைய அன்றையதினம் ஆணைக்குழு ஒன்றுகூடி ஆராய்ந்தது. தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரி நிதி விடுவிப்பைத் தடுத்துள்ளமை நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளதால் நிதி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இந்நிலையிலே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றின் உத்தரவைக் கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்கு தனது நகர்வினை முன்னெடுக்கவுள்ளது.
நீதிமன்றின் உத்தரவுக்கமைய
செயற்படுவோம்
இதுவரை காலம் தொடர்ச்சியாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலை சூட்சுமமாக பிற்போட்டு வந்த அதிகாரத்திலுள்ளவர்கள் தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவினையடுத்து மென்மையான போக்கினைக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிதொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கமைய செயற்படுவதில் எவ்வித சிக்கலுமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்லுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று ஏற்கனவே திறைசேரியின் செயலாளரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை சவாலுக்குட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் போதே உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஏப்ரலில் தேர்தல்?
நிதி நெருக்கடி உட்பட தவிர்க்க முடியாத பல காரணங்களைக் கொண்டு பிற்போடப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மீண்டும் ஒன்று கூடியது. இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள பின்னணியிலே தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் ஒன்று கூடியது. இக்கூட்டத்திலே உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘ உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 38 (1) ஏ.உறுப்புரையின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இம்மாதம் 9 ஆம் திகதி (இன்று) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்த எதிர்பாராததும், தவிர்க்க முடியாததுமான காரணிகளால் 9 ஆம் திகதி (இன்று)நடைபெறவிருந்த தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தினம் ஏப்ரல் 25 என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 9 ஆம் திகதி (இன்று) உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் அன்றைய தினத்தில் தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் தேர்தலுக்கான புதிய தினத்தை தீர்மானிப்பதற்காக கடந்த 3 ஆம் திகதி ஆணைக்குழு ஒன்று கூடியபோதிலும் அன்றும் திகதியொன்று தீர்மானிக்கப்படவில்லை.
இந்நிலையிலே வரவு செலவுத்திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலுக்கான தினம் குறித்து தீர்மானிப்பதற்கு ஆணைக்குழு நேற்று முன்தினம் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத் தலைவர் கங்கானி லியனகே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மாத்திரமே கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார். ஏனைய இருவரும் கலந்து கொண்டிருக்கவில்லை. பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலரே கலந்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் தன்னால் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது என்றும் பிறிதொரு தினத்தை வழங்குமாறும் திறைசேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும், ஒத்தி வைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இனிமேலும் இந்தத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மெளனம் காத்து வந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் சார்பாக நீதிமன்றம் சென்றது. தற்போது நாட்டு மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் பங்காற்றும் என்றார்.
தேர்தலுக்கு நிதி வழங்குவீர்களா
இல்லையா?
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நிதி வழங்குவாரா , இல்லையா என்பதை நாட்டுக்கு தெளிவாக அறிவிக்கவேண்டும் என ‘மார்ச் 12 அமைப்பு’ தெரிவித்துள்ளது.
‘இது காலம் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிறுவனங்கள் ஊடாக உபாயங்களைப் பாவித்து தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்து வருகிறார். இவ்வாறு தேர்தலை பிற்போடுவதற்கு 30க்கும் மேற்பட்ட உபாயங்களை பிரயோகித்துள்ளார். தொடர்ந்தும் அவர் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பாராயின் இது நீதிமன்றத்தின் தீர்ப்பினை அகெளரவப்படுத்துவதாக அமையும் என மார்ச் 12 அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தேர்தல் தொடர்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் இதன்பின்னணியில் இருந்து ஜனாதிபதியே செயற்பட்டு வருகிறார். எனவே தேர்தலுக்கான நிதிவழங்கப்படுமா? இல்லையா என்பதை நிதியமைச்சரான ஜனாதிபதியே நாட்டுக்கு தெரிவிக்கவேண்டும்.
ஆட்சியாளர்கள் மக்களின் வாக்குரிமையை பறித்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் உயர் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி மெளனமாக இருக்கிறார். எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் கட்டாயமாக நடத்தப்படவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உருவாகியுள்ள எதிர்வலைகள் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மெளனம் கலைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.- Vidivelli