ஏ.ஆர்.ஏ.பரீல்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்வெல்லை நகரில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு 10.10 மணியளவில் முகத்தை மாஸ்க்கினால் மறைத்துக்கொண்டு தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஹங்வெல்லை நகரில் ஹோட்டல் ஒன்றினை நடத்திவந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது பர்சான் கொலை செய்யப்பட்டார். இத்துப்பாக்கிப்பிரயோக சம்பவம் சி.சி.ரி.வி காணொளிகளில் மிகத் தெளிவாக பதிவாகியிருந்தது.
முஹம்மது பர்சான் ஹங்வெல்லை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுவின் அங்கத்தவர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இவரது சகோதரர் ஒருவர் மீது மீது கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வீடு புகுந்து அத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்த போதும் பொலிஸ் புத்தகங்களில் வீட்டுக்குள் திருட வந்தவர்களுடன் போராடியதில் அவர் வெட்டுக் காயங்களுக்குள்ளானதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பர்சான் தனது ஒத்துழைப்பை பொலிசாருக்கு வழங்கியிருந்தார். குறித்த சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து ஹங்வெல்லையின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் பாதாள உலகத்தலைவன் ஒருவனின் கீழ் செயற்பட்ட நபர்களாவர்.
டிசம்பர் 18 ஆம் திகதி பர்சானின் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
ஹங்வெல்லை நகரில் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம்கோரும் நோக்கில் வந்தவர்களை அச்சமடையச் செய்ய டுபாயிலிருந்தவாறு ஹங்வெல்லையில் தம்மை சண்டியர்களாக நிரூபிக்க முயலும் பாதாள உலகத்தலைவர்களான சமில மற்றும் லலித் என்போரின் உத்தரவின் கீழ் அந்தக் கொலை நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய ஹங்வெல்லை பொலிஸாரும் மேல்மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப்பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பர்சானை கொலை செய்த சந்தேக நபர்
விமான நிலையத்திலிருந்து தப்பியோட்டம்
ஹோட்டல் உரிமையாளர் பர்சான் உட்பட பல மனித படுகொலைகள் மற்றும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட “ஹரக்கடா” எனும் பாதாள உலக தலைவனுடன் தொடர்புள்ள ரவிது வர்ண ரங்கா என்பவன் போலியான பெயரில் டுபாய் நாட்டுக்கு தப்பிச்செல்ல கடந்த மாதம் 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தான். பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபரான இவனுக்கு அவிசாவளை நீதிமன்றம் வெளிநாட்டுப்பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல். 225 விமானத்துக்காக சந்தேக நபர் காரில் வருகை தந்துள்ளார். அவருடன் பயணிப்பதற்கு மேலும் ஒருவரும் வேறு காரில் விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.
பின்பு அவர்கள் இருவரும் விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்கள கருமபீடத்துக்குச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையை அதிகாரிகள் கணினியில் அறிந்துள்ளனர். அதனால் அவரது பயண ஏற்பாடுகளை மறுத்த அதிகாரிகள் இது தொடர்பில் விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொலிசார் அவரை அப்போதே மாலை 6 மணியளவில் கைது செய்து பொலிஸுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். பின்பு இரு மதகுருமார்கள் விமான நிலையத்துக்கு வருகை தந்து சந்தேக நபரை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் தங்கள் பன்சலைக்கு உதவுபவரென்றும், ஓர் அப்பாவியென்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் தவறு காரணமாகவே கைது இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.இதனையடுத்து சந்தேக நபரினது கைவிலங்கினை கழற்றிவிட்டு பொலிஸார் அவரை கதிரையில் அமரச் செய்துள்ளனர் என்பது விசாரணைகளிலிருந்துதெரிய வந்துள்ளது.
அதனையடுத்து பெளத்த தேரர்கள் இருவரும் சூட்சுமமான முறையில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த கொலையாளியுடன் தப்பிச்சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டிருந்த நபர் பல கொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தவர் ஒருவர் என்பதை அதுவரை பொலிஸார் அறிந்திருக்கவில்லை என்பது விசாரணைகளின்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிலகாலம் கடற்படையில் கடமையாற்றிய குறிப்பிட்ட குற்றவாளி கடற்படையிலிருந்தும் தப்பியோடியவர் ஆவார். இவர் தனித்து 9 கொலைகளையும் வேறு நபர்களுடன் இணைந்து 10 கொலைகளையும் புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து அறியக்கிடைத்துள்ளது.
தப்பியோட உடந்தையாக
இருந்ததாக பொலிஸார் கைது
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழு பாதாள உலக கோஷ்டி கொலையாளி தப்பியோடுவதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தி விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வரும் கடந்த 25 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் செயற்பாட்டு பொலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய டப்ள்யூ.கே.சேனாரத்ன எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனக குமார சேனாதீர மற்றும் பொலிஸ் கான்டபிள்களான அனுஷபிரசாத், ஆர்.எஸ்.ரத்நாயக்க ஆகியோர் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவானினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தினால் ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேரர்கள் இருவரும் கைது
பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவரென கூறப்படும் “பூரு முனா” என அழைக்கப்படும் ரவிது விமான நிலைய பொலிஸ் நிலையத்திலிருந்தும் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்து செயற்பட்ட பெளத்த தேரர்கள் இருவரும் கடந்த 27 ஆம் திகதி ஹெட்டிபொலை பெளத்த விகாரையொன்றிலிருந்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தேரர் இருவரும் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹெட்டிபொலை – ரிட்டாதெனிய ஸ்ரீ ஜயலங்காராம விகாரை அதிபதி பொத்தேவெல இன்தசார (38) மற்றும் திவுல் வெவே தீபாநந்த (40) ஆகியோராவர்.
இந்நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவனெனக் கூறப்படும் தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள ரத்கம விதுர என்பவனின் பிரதான சகா எனக்கூறப்படும் சந்தேக நபரான ரவிது, வருண ரங்க என்ற போலி பெயரில் கடவுச் சீட்டொன்றினைத் தயாரித்து டுபாய் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கே முயற்சித்தார் என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தேரர்களை விமான நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்து வந்த சாரதி அபேவெல–களுபோவிடியனவைச் சேர்ந்த கே.டப்ளியூ.ஏ.திலான் (27) என்பவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.- Vidivelli