(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் முகவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஹஜ் முகவர் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேற்று முன்தினம் பெப்ரவரி 28ஆம் திகதியுடன் விண்ணப்பிக்கும் இறுதித் திகதி முற்றுப் பெற்றுள்ளது.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளைத் திட்டமிடுவது தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் அரச ஹஜ் குழுவிற்கும் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.பைசலுக்குமிடையில் நேற்றுமுன்தினம் அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது இவ் வருடத்துக்கான ஹஜ் முகவர்கள் நியமனம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஹஜ் முகவர் நியமனத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் அலுவலகங்களுக்கு திணைக்களத்தின் அதிகாரிகள் நேரடி விஜயத்தினை மேற்கொண்டு அலுவலகங்களின் வசதிகள் தொடர்பில் தகவல்களைத் திரட்டவுள்ளனர். பின்பு அவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.பைசல் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.- Vidivelli