(றிப்தி அலி)
சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கான திட்டங்களுக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருடிக்கடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே சவூதி அரேபியா உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்த திட்டங்கள் அனைத்தும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் முதற் கட்டமாக பொருளாதார நெருக்கடியினால் தற்போது கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணிப் பாலத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, குறிஞ்சாக்கேணிப் பாலத்திற்கு நிதியுதவி வழங்க சவூதி அபிவிருத்தி நிதியத்தின் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிஞ்சாக்கேணி ஆற்றில் தற்காலிகமாக செயற்படுத்தப்பட்டு வந்த வள்ளம், கடந்த 2021 நவம்பரில் கவிழ்ந்து வீழ்ந்தமையினால் எட்டு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முஹம்மத் அல் மசூத் தலைமையில் இலங்கை வந்துள்ள சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளின் தற்போதைய இலங்கை விஜயத்திற்கான இணைப்பாளராக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் ஹாலித் அல் கஹ்தானி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
“இலங்கை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தாமதமானாலும் சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான நிதி உதவிகளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்” என அமைச்சர் அலி சப்ரி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இத்தூதுக் குழுவினரின் விஜயம், இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவடையச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 12 அபிவிருத்தித் திட்டங்களுக்களை மேற்கொள்வதற்காக அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் இதுவரை கிட்டத்தட்ட 424.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli