முஸ்லிம் சமூகம் மீதான பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டே உள்ளன. அண்மைக் காலமாக அரசியல் அரங்கிலும் பொது வெளியிலும் மாற்றங்கள் இருப்பதாக தெரிந்தாலும் மக்களின் மனதில் அந்த சந்தேகங்கள், தப்பபிப்பிராயங்கள் நீடிக்கவே செய்கின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு காத்திரமான பதில்களை உரிய தரப்பினருக்கு வழங்குவது யார் என்ற கேள்வி தொடர்ந்தும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதப் போக்குடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் இருந்தே வருகின்றன.
வெறுமனே, அரசியலுக்காக முஸ்லிம்கள் மீது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாமர சாதாரண மக்கள் மாத்திரமன்றி படித்த மற்றும் உயர் வர்க்க சமூகம் இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறது.
கடந்த வாரம் மத்திய மலைநாட்டிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலையொன்றுக்கு வருகை தந்திருந்த வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் ஒரு சிலர், முஸ்லிம் மாணவிகளை விளையாட்டில் ஈடுபடுத்தப்படாமையினால் அவர்கள் தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்படுவதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர். குறித்த இடத்தில் இருந்த ஆசிரியர்களால் அவர்களுக்கு உரிய அடிப்படையிலான பதில் வழங்க முடியாமல் போயுள்ளது.
பொதுவாக முஸ்லிம் பாடசாலைகளில் பெண்களுக்கான விளையாட்டுகள் மறுக்கப்படுவதுமில்லை. அத்தோடு, இதனால் அவர்கள் தீவிரவாதத்தின்பால் ஈக்கப்படுவதும் இல்லை. இஸ்லாம் விளையாட்டை ஆகுமாக்கியுள்ளது போன்ற விளக்கங்கள் உரிய இடத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தெரியாமையே எமது சமூகம் தொடர்ந்தும் குற்றவாளிக் கூண்டில் கைக் கட்டி நிற்பதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு உதாரணங்களையும் சுட்டிக்காட்ட முடியும்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிங்கள கடும்போக்குவாத அரசியல் சக்திகளும் ஓரிரு தமிழ் கடும்போக்குவாத அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர். அத்தோடு, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் சில பிழையான அணுகுமுறைகளும் அரசியல் செயற்பாடுகளும் சமூகத்தை பாதிப்படையச் செய்கின்றது. இது சரி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
மாறுபட்ட குழப்பகரமான சூழலில் கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோது, சில சிங்கள அரசியல் தலைமைகளினாலேயே குறித்த பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம் சமூகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரசாரங்கள் குறித்து சரியான தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் சமூகத்திடமும் இருக்கிறது.
மார்க்க விடயங்களை அணுகும் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், தஃவா அமைப்புகள் என்பனவும் இந்த பொறுப்புகளிலிருந்து விலகிக் செயற்பட முடியாது. அத்தோடு, முஸ்லிம் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இந்த விடயங்களில் தம்மாலான பங்களிப்பை நல்க வேண்டியது அவசியமானதாகும்.
அண்மைக்காலமாக பள்ளிவாசல்களை மையப்படுத்தி சக இனங்களைச் சேர்ந்த மக்களுக்க இஸ்லாம் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும் இவ்வாறு பள்ளிவாசல் நிகழ்வுகளுக்கு வந்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவானதே. எனவேதான் விரிவான நீண்ட கால திட்டமிடல்களின் அடிப்படையில் சந்தேகங்களை தெளிவுபடுத்துகின்ற, தப்பபிப்பிராயங்களை களைகின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli