எம்.எப். அய்னா
‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, ஆரம்பமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், அஹ்னாப் ஜஸீம் மாணவர்களுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன், நளீமியா கலாபீடத்தின் அஷ்ஷெய்க் அகார் முஹம்மது ஆகியோரின் உரைகளைக் காட்டி, அடிப்படைவாதத்தை தூண்டி, பிற மதத்தவர்கள் மீது பகைமை உணர்வை தூண்டியதாக முன் வைத்த குற்றச்சாட்டுக்கள், இதுவரையிலான சாட்சியங்கள் ஊடாக பொய்யானவை என தெரிய வந்திருக்கின்றது.
அஹ்னாப் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக நிரூபிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்லது அரச தரப்பு நீதிமன்றம் முன்னிலையில் கொண்டு வந்த முதல் இரண்டு அரச தரப்பின் சாட்சியாளர்களும் ( 2, 6 ஆம் சாட்சியாளர்கள்), அரச தரப்பு எதிர்பார்க்காத நிலையில் மன்றில் உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ள நிலையில், அவ்வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் இந்த விசாரணை நடாத்தப்பட்டது.
இதன்போது சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
வழக்கின் அனைத்து விடயங்களும் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ஊடாக தமிழ் மொழியில் குற்றம் சாட்டப்பட்ட அஹ்னாப் ஜஸீமுக்கு, நீதிபதியின் உத்தரவின் பேரில் மொழி பெயர்க்கப்பட்டது.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார். முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு கடந்த 17 ஆம் திகதி வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டார மன்றில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், ஹுஸ்னி ராஜித் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
இந் நிலையில் முதலில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி குற்றச்சாட்டு, அஹ்னாப் ஜஸீமுக்கு வாசித்து காட்டப்பட்டது. புத்தளம் – மதுரங்குளி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன, மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஒரே ஒரு குற்றச்சாட்டே சுமத்தப்பட்டிருந்த நிலையில், அக்குற்றச்சாட்டு வாசித்து காட்டப்பட்டு, தமிழில் மொழி பெயர்த்து அஹ்னாப் ஜஸீமுக்கு கூறப்பட்டது.
அதன் பின்னர் அக்குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியா? சுற்றவாளியா என அஹ்னாப் ஜஸீமிடம் வினவப்பட்டது.
இதன்போது குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி ( சுற்றவாளி) என அஹ்னாப் ஜஸீம் அறிவித்தார்.
இதனையடுத்தே சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சாட்சியம் அளிக்க 2,6,8 ஆம் இலக்க சாட்சியாளர்கள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். முதலில் 2 ஆம் இலக்க சாட்சியாளரான புத்தளம், ஸ்கூல் ஒப் எக்சலன்ஸி எனும் ஆங்கில மொழி மூல பாடசாலையின் அதிபர் ஹிதாயதுல்லாஹ் அஜ்மல் சாட்சியமளித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டாரவின் நெறிப்படுத்தலில் அவர் முதலில் சாட்சியம் அளித்தார்.
தான், கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், ஸ்கூல் ஒப் எக்சலன்ஸி பாடசாலையின் அதிபர் பதவிக்கு விண்ணப்பித்ததாகவும், இணையம் ஊடாக நடந்த நேர்முகத் தேர்வின் பின்னர் கடந்த 2018 ஏப்ரல் 3 ஆம் திகதி நாடு திரும்பி 2018 ஏப்ரல் 4 ஆம் திகதி அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றதாக அவர் சாட்சியமளித்தார்.
அதிபராக தான் கடமையேற்கும் போது குறித்த பாடசாலையில் 320 முதல் 330 மாணவர்களும் 23 முதல் 25 ஆசிரியர்களும் இருந்ததாக அவர் கூறினார்.
அதன் பின்னர், பாடசாலையில் நிலவிய ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ததாகவும், பாடசாலை பணிப்பாளர் சபையின் அனுமதியுடன் குறித்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கடந்த 2010 பெப்ரவரி முதலாம் திகதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், எனினும் அப்பாடசாலையின் முதலாவது க.பொ.த. சாதரண தர மாணவ குழு கடந்த 2019 ஆம் ஆண்டே பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் சாட்சியமளித்தார். இதனால் 2019 ஆம் ஆண்டு, க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என விஷேட கற்றல் நடவடிக்கைகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே கடந்த 2019 இல் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களும் நிரப்பப்பட்டதாக அதிபர் சாட்சியமளித்தார்.
இதன்போது ஆங்கில பாடத்துக்கு சியாம் ஆசிரியர், விளையாட்டு தொடர்பில் சைபுதீன் ஆசிரியர், கணித பாடத்துக்கு பெரோனாஸ் ஆசிரியை, தமிழ் பாடத்துக்கு அஹ்னாப் ஜஸீம் ஆசிரியர் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அதிபர் சாட்சியமளித்தார்.
உரிய முறைமை பின்பற்றப்பட்டு அஹ்னாப் ஜஸீம் தமிழ் பாடம் கற்பிக்க தெரிவு செய்யப்பட்டதாகவும், அவரது கற்பித்தலை தொடர்ந்து பாடசாலையில் தமிழ் மொழி பாடத்தின் அடைவு மட்டம் அதிகரித்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார். இதனைவிட, 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கை பிரகாரம், அவர்கள் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாணவ மாணவியருக்கு வெவ்வேறான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதன்போது மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களை வழி நடாத்த அஹ்னாப் ஜஸீம் ஆசிரியர் தனது கோரிக்கை பிரகாரம் தங்கியிருந்ததாகவும் அதிபர் சாட்சியமளித்தார்.
இந் நிலையில் அவரது சாட்சியத்தை மையப்படுத்தி, அஹ்னாப் ஜஸீமுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதன்படி குறித்த பாடசாலையில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்படும் போது பகிரங்கமாக ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பம் கோரப்படுவதாகவும், அஹ்னாப் ஜஸீம் ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாடத்துக்கு அப்போது 13 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்து அதிபர் சாட்சியமளித்தார்.
இந் நிலையில் தமிழ் பாட ஆசிரியரை தெரிவு செய்ய வத்சலா, ரிஸ்மிலா, ரோஜி ஆகிய பெயர்களை உடைய கல்விச் சேவை உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியைகளைக் கொண்ட நேர்முகத் தேர்வுக் குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர்களே அஹ்னாப் ஜஸீமை தமிழ் ஆசிரியராக தெரிவு செய்ததாகவும் அதிபர் சாட்சியமளித்தார். அப்போது அஹ்னாப் ஜஸீம் பேராதனை பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் பல்கலைக் கழகம் ஒன்றிலும் தமிழ் மொழி தொடர்பில் சிறப்பு கற்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
இதன்போது அஹ்னாப் ஜஸீம் ஏதேனும் புத்தகம் எழுதியிருந்தாரா என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அதிபரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.
அதற்கு பதிலளித்த அதிபர் ஆம் எனவும், தமிழ் மொழியில் கவிதைப் புத்தகம் ஒன்றை அவர் எழுதியிருந்ததாக தனது சுய விபரக் கோவையில் அஹ்னாப் ஜஸீம் குறிப்பிட்டிருந்ததாகவும் பதிலளித்தார்.
2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதாரண தரத்துக்கு தோற்றிய ஆண் மாணவர்கள், பாடசாலையிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் கட்டிடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாக சபை குறித்த கட்டிடத்தைப் பெற்றுத் தந்ததாகவும் கூறிய அதிபர், மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் போது அவர்களுக்கு பொறுப்பாக அஹ்னாப் ஜஸீம், ஆசிரியர் என்ற ரீதியில் அவர்களுடன் தங்கியிருந்ததாக கூறினார்.
அஹ்னாப் ஆசிரியர் மாணவர்களின் சுய கற்கை நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், மாணவர்களுடன் இருந்தவாேற அவர்களைக் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஊக்குவித்ததாகவும் தான் ஒவ்வொரு நாளும் அது தொடர்பில் தேடிப் பார்த்ததாகவும் அதிபர் சாட்சியமளித்தார்.
இந் நிலையில் அஹ்னாப் ஜஸீம், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு புறம்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக மாணவர்களிடம் இருந்தோ, ஏனைய ஆசிரியர்களிடம் இருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ இதுவரை தனக்கு ஒரு முறைப்பாடேனும் கிடைக்கவில்லை என அதிபர் குறிப்பிட்டார்.
இதன்போது நீதிமன்றின் அனுமதியுடன், அஹ்னாப் ஜஸீமுக்கு அதிபர் அஜ்மல் வழங்கியுள்ள நற்சான்று சான்றிதழ், உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிரதி வழக்குக் கோவையில் இணைக்கப்பட்டது.
அதில் அஹ்னாப் ஜஸீம், எந்த அடிப்படைவாத நடவடிக்கைகளுடனும் தொடர்பு அற்றவர் என கூறப்பட்டிருந்தது.
அஹ்னாப் ஜஸீம் 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரேயே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக குறுக்கு விசாரணைகளின் போது ஏற்றுக்கொண்ட அதிபர், அந்த சூழலில் முஸ்லிம்கள் பார்க்கப்பட்ட விதம் மற்றும் தனியார் முஸ்லிம் பாடசாலைகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் வைத்திருந்த அவதானிப்புகள் குறித்து அறிந்திருந்ததாகவும், அவ்வாறான சூழலில் ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ளும்போது தமது பாடசாலை அது தொடர்பிலும் அவதானமாகவே நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். அதனால் அஹ்னாப் ஜஸீம் பாடசாலையில் இருந்த காலத்தில் எந்த அடிப்படைவாத நடவடிக்கையுடனும் தொடர்புபடவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதனைவிட, மாணவர்கள் தங்கியிருந்த கட்டிடம் பாடசாலைக்கு அருகே இருந்ததை மையப்படுத்தி தானே பணிப்பாளர் சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், அது யாருடைய கட்டிடம் என்பது கூட தனக்கு தெரியாது என்றும் அதிபர் குறிப்பிட்டார். எனினும் பின்னர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தன்னிடம் வாக்கு மூலம் பெறும் போது அது சேவ் த பேர்ள் நிறுவன கட்டிடம் என கூறி எழுதிக் கொண்டதாக அதிபர் குறுக்கு விசாரணைகளின் போது குறிப்பிட்டார்.
இதனையடுத்து அரச சட்டவாதி சஜித் பண்டார மீள கேள்விகளை அதிபரிடம் தொடுத்தார்.
அதற்கு பதிலளித்த அதிபர், அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் தான் வழங்கிய நற் சான்றிதழ் சரியானதே என குறிப்பிட்டார். அச்சான்றிதழில், அஹ்னாப் ஜஸீம் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை இணைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய போது, பொலிஸார் கைது செய்யும் அனைவரும் குற்றவாளிகள் அல்லர் எனவும், நீதிமன்றம் முடிவு செய்ய முன்னர் தன்னால் முடிவு செய்ய முடியாது என கூறிய அதிபர், தனக்கு தெரிந்த அஹ்னாப் எந்த குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டவர் அல்ல என்பதால் அவ்வாறு நற்சான்றிதழ் அளித்ததாக கூறினார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விரைவாக, சுருக்கமாக முடித்துக்கொள்வது தொடர்பில் நீதிபதியின் அவதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது நீதிபதி நதீ அப்ரணா சுவந்துருகொட, அந்த கோரிக்கையை பரிந்துரைத்தவர் யார் என வினவினார்.
இதன்போது வழக்குத் தொடுநர், பிரதிவாதி தரப்பை கை நீட்ட, பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமுக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அதனை மறுத்தார்.
வழக்குத் தொடுநர் தரப்பு வழக்கு விசாரணைக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் வழக்கை சுருக்கமாக முடித்துக்கொள்வது குறித்து பரிந்துரை ஒன்றினை முன் வைத்ததாகவும், தனது சேவை பெறுநரிடம் கோராமல் அது குறித்து தன்னால் எதுவும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு கொண்டு வந்த, வழக்கை அவசரமாக சுருக்கமாக முடிவுறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்ட குற்றச்சாட்டை நீக்கி, தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தி அதனை ஏற்றுக்கொண்டால், ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை ஒன்றின் மூலம் வழக்கை முடிவுறுத்துவதே சட்ட மா அதிபர் சார்பு திட்டம் என்பது நீதிமன்றில் வெளிப்பட்டது.
எனினும் அதற்கு நீதிபதி இடமளிக்காமல் தொடர்ந்து சாட்சியங்களை விசாரணை செய்யப் போவதாக அறிவித்து தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்தார்.
இதனையடுத்து வழக்கில் ஸ்கூல் ஒப் எக்சலன்ஸியில் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனான தற்போது 21 வயதுடைய அபூ தாஹிர் மொஹம்மட் அசிராஜ் எனும் இளைஞன் சாட்சியமளித்தார்.
அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டாரவின் நெறிப்படுத்தலில் அவரது சாட்சியம் அளிக்கப்பட்டது.
இதன்போது தனது வகுப்பில் தன்னுடன் கல்விகற்ற, க.பொ. த. சாதாரண தர பரீட்சை காலத்தை அண்மித்து பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தங்குமிடத்தில் தங்கியிருந்து கற்ற 13 சக நண்பர்களின் பெயர்களையும் அசிராஜ் நீதிமன்றில் தெரிவித்தார்.
நேரசூசிக்கு அமைய கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும், தங்குமிடத்தில் சுய கற்றல் நடவடிக்கைகளின் போது, சில பாடங்களில் சந்தேகம் ஏற்படும் போது அஹ்னாப் ஜஸீம் ஆசிரியர் அச்சந்தேகங்களை தீர்த்து வைத்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.
அஹ்னாப் ஜஸீம் ஆசிரியரிடம் மடிக்கணினி ஒன்று காணப்பட்டதாகவும், சில சந்தேகங்களை இணைய வழியே உரிய தரவுகள், வீடியோ காட்சிகள் கொண்டு அவர் விளங்கப்படுத்தியதாகவும் சாட்சியாளரான மாணவன் குறிப்பிட்டார்.
எனினும் வழக்குத் தொடுநர் தரப்பின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டார, கற்றல் நடவடிக்கை தவிர்ந்து வேறு ஏதும் நடவடிக்கைகள் அங்கு நடந்தனவா என வினவினார். எனினும் அதற்கு சாட்சியாளர் அப்படி எதுவும் நடக்கவில்லை என பதிலளித்தார்.
மீண்டும் மீண்டும் பாடத்தை தவிர வேறு ஏதும் அங்கு நடந்ததா எனவும், கணினியை உபயோகித்து வேறு வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டதா எனவும், அங்கு நடப்பதை யாருக்கும் கூற வேண்டாம் என அஹ்னாப் ஆசிரியர் கூறியிருந்தாரா எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டார கேள்வி எழுப்பினார். அவை அனைத்துக்கும் சாட்சியாளர் இல்லை என்றே பதிலளித்தார்.
இதனையடுத்து, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டார திறந்த மன்றில் விண்ணப்பம் ஒன்றினை முன் வைத்தார்.
அரசின் சாட்சியாளர், முதல் சந்தர்ப்பத்தில் இருந்த நிலைப்பாட்டை மாற்றி பிரதிவாதிக்கு சார்பாக சாட்சியம் அளிப்பதாகவும், அதனால் அவரை வழக்குத் தொடுநர் தரப்புக்கு பாதகமான சாட்சியாளராக, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 154 ஆம் பிரிவின் கீழ் பெயரிட்டு குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரினார். பிரதிவாதி தரப்பினரும் அதற்கு ஆட்சேபனை முன் வைக்கவில்லை. இந் நிலையில் அதற்கு நீதிபதி அனுமதித்தார்.
இதனையடுத்து, சாட்சியாளர் அசிராஜ், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியதாக கூறப்படும் முதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கேள்விகளை தொடுத்தார்.
அதன்படி, கற்றல் நடவடிக்கைகளின் இடையே, இரவு நேர உணவை உட்கொண்ட பின்னர், அஹ்னாப் ஜஸீம் மாணவர்களை அழைத்து, தனது மடிக் கணினியில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காட்டினாரா? என வினவப்பட்டது.
அப்படி எதுவும் நடக்கவே இல்லை என சாட்சியாளர் அதற்கு பதிலளித்தார்.
குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஜாமியா நளிமியா கலாபீடத்தின் அஷ்ஷேய்க் அகார் முஹம்மது ஆகியோரின் உரைகள் இணையத்தில் காண்பிக்கப்பட்டதா எனவும் அவ்வாறு உங்கள் பொலிஸ் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பின் அது சரியா தவறா எனவும் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேள்வி எழுப்பினார்.
மிக ஆழமாக சிந்தித்த சாட்சியாளர் அசிராஜ் அது தவறு என பதிலளித்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், இலங்கையில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அஹ்னாப் ஜஸீம் போதனை செய்தாரா எனவும், அதற்காக போராடி மரணித்தால் சுவர்க்கம் செல்ல முடியும் என கூறினாரா எனவும் வினவப்பட்டது. ஆழமாக சிந்தித்து சாட்சியாளர் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என பதிலளித்தார்.
இவ்வாறு அவ்வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, அடிப்படைவாதத்தை அஹ்னாப் ஜஸீம் தூண்டியதாக, கற்பித்ததாக கூறப்படும் 8 விடயங்களை சாட்சியாளர் தான் குறிப்பிடாத விடயங்கள் எனக் கூறி மறுத்தார். அவை பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் பரஸ்பர வேறுபாடுகளாக பதிவுச் செய்யப்பட்டன.
இந் நிலையில், சாட்சியாளர் பிரதிவாதிக்கு சார்பாக சாட்சியளிப்பதாகவும், அவர் அஹ்னாப் ஜஸீமால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டாரவால் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அதனை சாட்சியாளர் நிராகரித்தார்.
இதனையடுத்து சாட்சியாளரிடம் பிரதிவாதி அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணை செய்தார்.
முதலில் வாக்கு மூலம் பதிவு செய்ய்ய எத்தனை பேர் வந்தனர் என ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சாட்சியாளர் 4 பேர் வந்ததாகவும் வீட்டில் வைத்தே வாக்கு மூலம் பெற்றதாகவும் கூறினார்.
வந்த பொலிஸ் அதிகாரிகளே வாக்கு மூலத்தை எழுதியதாக சாட்சியாளர் கூறிய நிலையில், எழுதிய பின்னர் அவ்வாக்கு மூலத்தை வாசித்துக் காட்டினார்களா என குறுக்கு விசாரணை செய்தார்.
அதற்கு பதிலளித்த சாட்சியாளர் இல்லை என கூறினார்.
அத்தோடு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட குறுக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை அவசரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற பிரதம நீதியரசரின் ஆலோசனையையும் ஞாபகப்படுத்தி வழக்கை எதிர்வரும் 2023 மார்ச் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சாட்சியமளிக்க வழக்குத் தொடுநர் தரப்பின் 8,9,10 ஆம் இலக்க சாட்சியாளர்களை மன்றில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். – Vidivelli