பலஸ்தீனின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளிக்கும்
தூதுவரிடம் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சுஹைர் தார் செய்த் கடந்த திங்கட்கிழமை கண்டி நகருக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர் வரகாகொட தம்மதிசி ஸ்ரீ பக்கஹநந்த ஞானரதன பிந்தான மற்றும் மல்வத்த பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் சந்தித்து சிநேக பூர்வமாக கலந்துரையாடினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இடம்பெற்ற இலங்கையின் 75 ஆவது குடியரசு பெரஹரா வைபவத்தில் கலந்து கொள்வதற்காக பலஸ்தீன் தூதுவர் அங்கு சென்றிருந்தார். அவர் தனது விஜயத்தின் போதே அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளான மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த சிநேகபூர்வமான கலந்துரையாடலின்போது பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமையினை எடுத்து விளக்கினார்.
தற்போதைய நிலையில் பலஸ்தீன் மக்களுக்கு உலகளாவிய ஒருமைப்பாடு கிட்டவேண்டும். அத்தோடு சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் பலஸ்தீன் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மகாநாயக்க தேரர்களிடம் பலஸ்தீன் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் இறுக்கமான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய பலஸ்தீன் தூதுவர் பலஸ்தீன் மக்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையிலான உறவு ஒருபோதும் மாற்றங்களுக்குள்ளாகாது, மென்மேலும் பலப்படும் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில் பலஸ்தீனும், பலஸ்தீன் மக்களும் இலங்கையுடன் எப்போதும் கைகோர்த்திருப்பார்கள். இலங்கை நாடு என்ற வகையில் ஐக்கியத்துடன் அனைத்து சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீட்சி பெறமுடியும். அத்தோடு உள்ளகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும். பரந்த உள்ளக பொறிமுறைகளின் மூலம் வெளிநாடுகளின் தலையீடுகளின்றி தீர்வு காண முடியும் என்றார்.
இலங்கை பொருளாதார மற்றும் ஏனைய நெருக்கடிகளிலிருந்து விரைவில் மீட்சியடைய முடியுமென தான் நம்புவதாகவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் நிலவும் நெருங்கிய உறவுகளுக்கு மகாநாயக்க தேரர்கள் பெரும் வரவேற்பளித்தனர். பாராட்டுகளைத் தெரிவித்தனர். பலஸ்தீனின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் கருத்து தெரிவிக்கையில் பலஸ்தீனில் தற்போது என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பலஸ்தீனின் விடுதலைக்காகவும், பலஸ்தீன் மக்களின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்தும் தங்களது ஆதரவினை வழங்குவதாகவும் பலஸ்தீன் மக்களின் வாழ்க்கையில் பாதுகாப்பும் நிரந்தர அமைதியும் நிலவவேண்டும். பலஸ்தீன் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என்றனர்.- Vidivelli