பாதுகாப்பு பேரவை சட்டமாக்கப்படும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து அமைச்சரவை தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மூலம் பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த ஜனவரி 12 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், தேசிய பாதுகாப்பானது, அரசியலமைப்பின் அடிப்படையிலும் தெளிவான அமைப்புடனும் நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்துள்ள நிலையில், அதனை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய தேசிய பாதுகாப்பு சபையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய உள்ளுர், சர்வதேச, பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்ற அடிப்படை நிறைவேற்றுகின்ற நிறுவனமாக இயங்குகின்றது.
2023.01.12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபைக்கு நியதிச்சட்ட முறையுடனும் மற்றும் தெளிவான கட்டமைப்புடன் கூடியதாக தாபிக்க வேண்டிய தேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய பாதுகாப்பு சபை பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த தற்போதைய பொலிஸ் நிர்வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli