கடந்த மூன்று வருடகாலமாக பதவியில் இருந்த சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வக்பு சபைக்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
புதிய வக்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பலத்த அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமக்கு விருப்பமானவர்களை வக்பு சபைக்கு நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அமைச்சு பாரிய நெருக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் வக்பு சபைக்கான நியமனத்தைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் ஊடாக முயற்சித்து வருகின்ற விடயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வக்பு சபைக்கான நியமனம் என்பது ஓர் அமானிதமான பணியாகும். இது அரசியல்வாதிகளினால் வழங்கப்படுகின்ற நியமனம் அல்ல. எனினும் எல்லாமே அரசியலாகிவிட்ட முஸ்லிம் சமூக சூழலில், வக்பு சபையும் அதன் நியமனங்களும் கூட அரசியல்மயப்பட்டிருப்பது ஆச்சரியமானதொன்றல்ல. எனவே வக்பு சபைக்கான அங்கத்தவர்களை நியமிக்கும் விடயத்தில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.
வக்பு சொத்துக்கள் முன்னெப்போதுமில்லாதவாறு பாரிய சவால்களைச் சந்தித்துள்ள நிலையில், அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது இறைவனுக்கு மாத்திரமே அஞ்சிக் கருமமாற்றுகின்ற நேர்மையான, தைரியமானவர்களே அங்கத்தவர்களாக நியமிக்கப்பட வேண்டும். அரசியல் சிபாரிசுகளால் இப் பதவிக்கு வருபவர்களால் வக்பு சொத்துக்கள் பாதுகாக்கப்படமாட்டாது. மாறாக அரசியல் நலன்களுக்கே அவை தாரை வார்க்கப்படும் என்பதே எமது கணிப்பாகும். எனவேதான் இது விடயத்தில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தங்களைப் புறந்தள்ளி சமூகத்தில் நன்மதிப்புப் பெற்ற நேர்மையான மனிதர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
இதேவேளை நாட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை சுமார் 2544 ஆகும். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பதிவின்றியே இயங்கி வருகின்றன.
நாம் அல்லாஹ்வின் மாளிகையாகக் கருதும் பள்ளிவாசல்களில் பெரும் எண்ணிக்கையானவை நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழல்களும் நிறைந்து காணப்படுவதை அண்மைக்கால சம்பவங்கள் உறுதி செய்துள்ளமை கவலை தருகிறது.இந் நிலையில் பள்ளிவாசல்களை சீராக இயங்கச் செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் விசேட கவனம் செலுத்ததுவார் என நம்புகிறோம்.
60 முதல் 70 வீதமான பள்ளிவாசல்களில் நிர்வாக சபைத் தெரிவுகள் தொடர்பில் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது. பள்ளிவாசல் நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகளும், ஊழல்களும் மலிந்திருப்பதாக தொடராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுமாத்திரமல்ல பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரஸாக்கள், சமய ஸ்தலங்களின் வக்பு சொத்துக்களுக்கும் இன்று சவால்கள் மேலோங்கியுள்ளன.
வக்பு சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களில் ஒரு சிலவே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு சொத்துக்கள், கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கான வக்பு சொத்துக்கள் போன்ற குறிப்பிட்டுக் கூறக்கூடிய சவால்கள் குறித்தே சமூகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான வக்பு சொத்துக்கள் தனிநபர்களால், திட்டமிட்ட குழுவினரால் கையகப்படுத்தி அனுபவிக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக நியமிக்கப்படவுள்ள வக்பு சபை இது விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாது வக்பு சொத்துக்கள் தொடர்பிலும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். குறித்த சொத்துக்கள் மூலம் கிடைக்கப் பெறும் கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை சமூக நலன்களுக்காக பயன்படுத்த முன்வர வேண்டும்.
இதற்காக வக்பு சபை நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தை கடுமையாக அமுல் நடத்துவதற்கு முன்வரவேண்டும். நாட்டிலுள்ள வக்பு சொத்துக்களை பட்டியலிட்டு, அச்சொத்துக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணவேண்டும். இச்செயற்திட்டங்கள் உடனடியாக தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனையே சமூகம் வக்பு சபையிடமிருந்தும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறது.
அத்தோடு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் சுயநலன்களுக்காகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறான அரசியல்வாதிகளை சமூகம் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்.
ஐவேளை பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுவதுடன் மாத்திரம் எமது கடமை பூர்த்தியாகிவிட்டதாக கருதக்கூடாது. பள்ளிவாசல்களையும், பள்ளிவாசல் வக்பு சொத்துக்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இவ்விடயத்தில் நாம் வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டும்.- Vidivelli