உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு எதிரான தீர்ப்பு ஐ.நா. ஆணைக்குழு வரவேற்பு
பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டயீடும் நீதியும் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்து
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்டயீடும் நீதியும் கிடைப்பததை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த தற்போதைய பொலிஸ் நிர்வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரின் துன்பத்தையும் வலியையும் இந்த நஷ்டயீடுகளால் துடைக்க முடியாது என்ற போதிலும், இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான உரிமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அங்கீகரிக்கும் போராட்டத்தில் ஒரு படியாக உள்ளது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதுடன் இந் நிதியை உரிய முறையில் பகிர்ந்தளிப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் அவர்களது பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றமானது தனது தீர்ப்பில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் அசட்டை மற்றும் செயலற்ற தன்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடி அச்சுறுத்தலாகவிருந்த தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டனர் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான முன்னைய விசாரணைகளின் முழுமையான கண்டறிதல்களை வெளியிடவும், சர்வதேச உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முழு பங்கேற்புடன் சுயாதீனமான, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னர் வழங்கியுள்ள தனது பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.- Vidivelli